மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 12 ஜன 2022

போக்குவரத்து ஊழியர்களுக்கான பொங்கல் பரிசு!

போக்குவரத்து ஊழியர்களுக்கான பொங்கல் பரிசு!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு சாதனை ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தமிழ்நாடு போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் சிறப்பான மற்றும் திறமையான போக்குவரத்து சேவையை பொதுமக்களுக்கு அளிப்பதில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் இயங்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள்தான் பயணிகள் அடர்வு, பேருந்து பயன்பாடு, எரிபொருள் செயல்திறன் ஆகியவற்றில் உயர்ந்து விளங்குகின்றன.

குக்கிராமம் முதல் மாநகரங்கள் உட்பட மக்கள் குடியிருக்கும் அனைத்துப் பகுதிகளுக்கும் தங்குதடையின்றி,போக்குவரத்து சேவை அளிக்கப்பட்டு வருகின்றது. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம்,பல்லவன் போக்குவரத்து அறிவுரைப் பணிக்குழு ஆகிய அனைத்து நிறுவனங்களிலும் தற்போது சுமார் 1 இலட்சத்து 19 ஆயிரத்து 161 பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

பொங்கல் திருநாளையொட்டி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம் மற்றும் பல்லவன் போக்குவரத்து அறிவுரைப் பணிக்குழு ஆகியவற்றில் பணிபுரியும் பணியாளர்களில், 2021ஆம் ஆண்டில் 91 நாட்கள் மற்றும் அதற்கு மேலும், ஆனால் 151 நாட்களுக்கும் குறைவாக பணிபுரிந்த ஊழியர்களுக்கு 85 ரூபாய் வீதமும்,151 நாட்கள் மற்றும் அதற்கு மேலும் ஆனால் 200 நாட்களுக்கும் குறைவாக பணிபுரிந்த ஊழியர்களுக்கு 195 ரூபாய் வீதமும், 200 நாட்கள் மற்றும் அதற்கு மேலும் பணிபுரிந்த ஊழியர்களுக்கு 625 ரூபாய் வீதமும் பொங்கல் பரிசாக “சாதனை ஊக்கத்தொகை” வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவின்படி,போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் 1 இலட்சத்து 19 ஆயிரத்து 161 பணியாளர்களுக்கு, மொத்தம் 7 கோடியே 1 இலட்சம் ரூபாய் சாதனை ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோயில் பணியாளர்களுக்கு போனஸ் உயர்வு

அதுபோன்று கோயில்களில் பணியாற்றி வரும் நிரந்தர பணியாளர்களுக்கு அகவிலைப்படி மற்றும் போனஸை உயர்த்தி முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

கோயில்களில் பணியாற்றும் நிரந்தர பணியாளர்களுக்கு அகவிலைப்படி 17 சதவிகிதத்திலிருந்து 31 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அகவிலைப்படி உயர்வால் சீட்டு விற்பனையாளர்கள், அர்ச்சகர்களுக்கான மாத சம்பளம் ரூ.2,500ஆகவும், கோயில் காவல் பணியாளர்களுக்கு ரூ.2,200 ஆகவும், துப்புரவு பணியாளர்களுக்கு ரூ.1,400 ஆகவும் உயர்கிறது. மேலும், கோயில் பணியாளர்களுக்கான பொங்கல் போனஸை ரூ.1,000லிருந்து ரூ.2,000 ஆகவும் உயர்த்தி முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள், அகவிலைப்படி பெறத் தகுதியுள்ள ஏனைய பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 2022 ஜனவரி 1ஆம் தேதி முதல் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என கடந்த 2021, செப்டம்பர் 7ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி 110-ன் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-வினிதா

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ...

4 நிமிட வாசிப்பு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ஆபரேஷன்

டிஜிட்டல் திண்ணை: சசிகலா- தினகரன் இடைவெளி: தூது போன குடும்பப் ...

7 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சசிகலா- தினகரன் இடைவெளி: தூது போன குடும்பப் பிரமுகர்!

புதன் 12 ஜன 2022