மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 12 ஜன 2022

டிஜிட்டல் திண்ணை: பாமகவை பாகம் பிரிக்க எடப்பாடி ஆபரேஷன்!

டிஜிட்டல் திண்ணை: பாமகவை பாகம் பிரிக்க எடப்பாடி ஆபரேஷன்!

வைஃபை திடீரென கட் ஆனதால் மொபைல் டேட்டாவை ஆன் செய்தபோது சில புகைப்படங்கள் வாட்ஸப்பில் வந்து விழுந்தன. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சுற்றி பலர் திரண்டு நிற்கும் புகைப்படங்கள்தான் அவை.

அந்த போட்டோவுக்கு அடுத்தபடியாக மெசேஜை டைப் செய்ய ஆரம்பித்தது வாட்ஸ் அப்.

“தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் எப்போது என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் தமிழகத்தின் ஆளுங்கட்சியான திமுக அதற்குத் தயாரான நிலையிலேயே கட்சியினரை வைத்திருக்கிறது. ஒமிக்ரான் தொற்றுப் பரவலால் தேர்தலை ஏப்ரல், மே மாதத்துக்கு தள்ளிவைக்கலாம் என்று ஒரு யோசனை தலைமைக்கு இருந்தது. ஆனால் உத்தரப் பிரதேச மாநிலம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலை தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துவிட்டது. பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் ஏழு கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் கடந்த 7 ஆம் தேதி அறிவித்தது.

இந்த பின்னணியில் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் தமிழக உள்ளாட்சித் தேர்தலை ஒத்தி வைக்க நேரம் கேட்டால் நீதிபதிகளின் கண்டிப்புக்கு ஆளாக நேரிடுமோ என்ற யோசனையும் தமிழக அரசு மேலிடத்தில் ஆலோசிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே திமுக மாசெக்களிடம் கடந்த டிசம்பர் 18 ஆம் தேதி நடந்த மாசெக்கள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறியபடி பல மாவட்டச் செயலாளர்களும் வேட்பாளர் பட்டியலை தலைமைக்கு அனுப்பி வைத்துள்ளனர். திமுகவினர் நேர்காணல்களிலும் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வரும் ஜனவரி 17ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் பற்றிய அறிவிப்பு வெளியிடப்படலாம் என்று திமுகவினர் மத்தியில் வேகமாக ஒரு தகவல் பரவி வருகிறது.

இதனால் அதிமுக, பாஜக,பாமக போன்ற கட்சிகளும் அலர்ட் ஆகி தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருக்கின்றன. என்னதான் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியில் இருந்தாலும் எடப்பாடி பழனிசாமி சேலம் புறநகர் அதிமுக மாவட்டச் செயலாளர் என்ற பதவியை யாருக்கும் விட்டுத் தரவில்லை. மேலும் தனது கட்சிப் பணிகளை எல்லாம் சேலத்தில் இருந்துதான் தொடங்குகிறார்.அவர் முதல்வராக இருக்கும்போதே இப்படித்தான் என்ற நிலையில் இப்போது கேட்கவே வேண்டியதில்லை.

நேற்று (ஜனவரி 11) சேலம் புறநகர் அதிமுக அலுவலகத்தில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் எடப்பாடி உள்ளாட்சித் தேர்தல் பற்றி பேசியிருக்கிறார். ‘மக்கள் திமுக அரசு மேல அதிருப்தியா இருக்காங்க. நாம பொங்கலுக்கு ரொக்கத் தொகை கொடுத்தோம். ஆனால் திமுக அரசு இப்ப பொங்கல் பைனு ஒரு பையை மட்டும் கொடுத்திருக்கு. அதுல அறிவிக்கப்பட்டபடி எல்லா இடத்துலயும் பொருட்கள் கொடுக்கப்படல. பல இடங்கள்ல பையே கொடுக்காம வீட்ல இருந்து பைய எடுத்துட்டு வரச் சொல்லியிருக்காங்க. பணம் கொடுக்காத அதிருப்தி ஒருபக்கம்னா இன்னொரு பக்கம் கொடுக்குற பொருளும் நல்லா இல்லை. ஏற்கனவே சொன்னபடி பெண்களுக்கு மாசம் ஆயிரம் ரூபாய் கொடுக்கல. நகைக் கடன், பயிர்க் கடன்லயும் சொன்னதைச் செய்யல.இதையெல்லாம் நாம மக்கள்கிட்ட எடுத்துக்கிட்டுப் போகணும்’என்று பேசியிருக்கிறார்.

அந்த ஆலோசனையை அடுத்து, சேலம் வடக்கு மாவட்ட பாமக முன்னாள் செயலாளர் சாம்ராஜ் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட பாமகவினர் அந்த கட்சியில் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். அவர்களை வரவேற்று வாழ்த்து தெரிவித்தார் எடப்பாடி.

இதையடுத்து வந்திருந்த பாமக நிர்வாகிகளோடு அதிமுக நிர்வாகிகளையும் வைத்துக்கொண்டு அவர்களிடம் சில விஷயங்களை பேசியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. ‘நாம ஆட்சியில இருந்தப்ப அதிமுக காரங்களுக்கு இணையா பாமக காரங்களும் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள்ல பலன் அடைஞ்சிருக்காங்க. நாம நெனைச்சிருந்தா அன்னிக்கு அவங்களுக்கு எதுவும் பண்ணாம இருந்திருக்க முடியும். ஆனா நாம அப்படி செய்யலை. நம்ம ஆட்சியில பலன் அடைஞ்ச பாமக நிர்வாகிகள்கிட்டல்லாம் பேசுங்க. அவங்களை அதிமுகவுக்கு வரச் சொல்லுங்க. திமுக ஆளுங்கட்சியாக இருக்குனு அங்க போனா, அவங்களுக்கு மரியாதை கிடைக்காது. அடுத்தடுத்து உள்ளாட்சித் தேர்தல் வருது. அதுல நாம கண்டிப்பா பல இடங்கள் ஜெயிப்போம். பாமக தனியாதான் நிக்கப் போறதா அறிவிச்சிருக்காங்க. அதனால அங்க இருந்து இனிமே பலன் கெடையாதுனு அவங்களுக்கு சொல்லுங்க. முடிஞ்சவரைக்கும் நம் ஆட்சியில பலன் பெற்ற பாமக காரங்களை அதிமுகவுக்குக் கொண்டுவாங்க’என அவர்களுக்கு வகுப்பு எடுப்பது போல சொல்லியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஏற்கனவே சில நாட்களுக்கு முன் பாமகவின் மாநில துணைச் செயலாளரும், சிவகங்கை மாவட்டச் செயலாளருமான திருஞானம் அதிமுகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு மாவட்ட ரீதியாக கூட்டங்கள் போட்ட பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், கூட்டணி என்றாலே காலை வாருவது என்றே அர்த்தமாகிவிட்டது. சட்டசபை தேர்தலில் கூட்டணி கட்சிகள் கூட்டணி தர்மத்தை கடைபிடிக்கவில்லை. பாட்டாளி மக்கள் கட்சி வெற்றிப்பெறக்கூடாது என்பதற்காக கூட்டணி தர்மம் மீறி, அதர்மமாகிவிட்டது. நாம் 23 இடங்களிலும் அல்லது 20 இடங்களிலோ அல்லது குறைந்தபட்சம் 15 இடங்களிலோ வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால் கூட்டணிக் கட்சிகள் கூட்டணி தர்மத்தை மீறியதால் பாமக 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. இனி பணத்தின் பின்னே ஓடாமல் பாமக தனியாகவே தேர்தலை சந்திக்கும் என்று பேசி அதிமுகவை விமர்சித்தார். இதற்கு எடப்பாடியும் பாமகவுக்கு கூட்டணி மாறுவது வாடிக்கைதான் என்று விமர்சித்தார்.

எடப்பாடியின் ஆலோசனையின் பேரில் அதிமுக ஆட்சிக் காலத்தில் பலன் பெற்ற பாமக நிர்வாகிகளை தொடர்புகொள்ளும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியிருக்கிறார்கள் அதிமுகவினர்” என்ற மெசேஜை டைப் செய்து முடித்து சென்ட் கொடுத்தது வாட்ஸ் அப்.

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக காத்திருக்கும் விஜய்

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக காத்திருக்கும் விஜய்

பொறியாளரை தாக்கிய திமுக எம்எல்ஏ: கட்சிப் பதவி பறிப்பு!

6 நிமிட வாசிப்பு

பொறியாளரை தாக்கிய திமுக எம்எல்ஏ: கட்சிப் பதவி பறிப்பு!

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன் திடீர் முடிவு! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன்  திடீர் முடிவு!

புதன் 12 ஜன 2022