மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 12 ஜன 2022

கூட்டுறவுச் சங்க பதிவாளரின் அறிவிப்பு: விரைவில் தேர்தலா?

கூட்டுறவுச் சங்க பதிவாளரின் அறிவிப்பு: விரைவில் தேர்தலா?

கூட்டுறவுச் சங்கங்களின் பதவிக்காலம் டிசம்பர் 31ஆம் தேதியுடன் முடிந்துவிட்டதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் 18 ஆயிரத்துக்கும் அதிகமான கூட்டுறவுச் சங்கங்கள் உள்ளன. 2018ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் இந்த சங்கங்களுக்குத் தேர்தல் நடத்தப்பட்டது. சங்கத்துக்கான தலைவர், துணைத் தலைவர், இயக்குநர்கள் ஆகிய பொறுப்புகளுக்காக நடத்தப்பட்ட தேர்தலில் பெரும்பாலும் அதிமுகவினரே பதவியில் இருக்கின்றனர்.

இந்த சூழலில், நெல் கொள்முதல்,கட்டமைப்புப் பணிகள், கடன் வழங்குதல் ஆகியவற்றில் ஏராளமான முறைகேடுகள் நடப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. திமுக ஆட்சி அமைந்த நிலையில், கூட்டுறவுச் சங்கங்களில் நகைக் கடன் மற்றும் பயிர்க்கடனில் பெருமளவு மோசடி நடந்ததாகக் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்திருந்தார்.

போலி நகைகளை அடகு வைத்தும் நகைகளை அடகு வைக்காமலும் மோசடி நடைபெற்று வருவதாகக் குற்றம்சாட்டியிருந்தார்.

இந்த சூழலில், கூட்டுறவுச் சங்க நிர்வாகிகளின் பதவிக் காலம் 5 ஆண்டுகள் என்பதை மூன்றாண்டுகளாகக் குறைத்துத் திருத்தச் சட்ட முன் வடிவை அமைச்சர் ஐ.பெரியசாமி கடந்த ஜனவரி 7ஆம் தேதி சட்டப்பேரவையில் கொண்டு வந்தார். இதற்கு அதிமுக கடும் எதிர்ப்புத் தெரிவித்து வெளிநடப்பு செய்தது. அதோடு கூட்டுறவுச் சங்க பதவிகளுக்கு திமுகவினரைக் கொண்டு வருவதற்குத்தான், பதவிக்காலம் குறைக்கப்பட்டுள்ளது என அதிமுக குற்றம்சாட்டியது.

தற்போது , பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ள நிலையில், கூட்டுறவுத் துறையில் பணியமர்த்தப்பட்டவர்களை வைத்துக்கொண்டு இந்தப் பொருள்கள் குறித்து அதிமுக சமூக வலைதளங்களில் பொய் பிரச்சாரம் செய்கிறது என்று திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சூழலில், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம், கூடுதல் பதிவாளர், அனைத்து இணைப்பதிவாளர், துணை பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், “அனைத்து வகை கூட்டுறவு சங்கங்களின் பதவிக்காலம் டிசம்பர் 31ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதன்படி மூன்று ஆண்டுகள் நிறைவடைந்த பதவிகள் தொடர்பான விவரங்களை மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட வாரிய உறுப்பினர்களின் 3 ஆண்டு பதவிக்காலம், வாரியத்தின் உறுப்பினர்களின் தேர்தல் தேதியிலிருந்து கணக்கிடப்பட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் கொடுக்கும் பட்சத்தில் 2018ல் நியமிக்கப்பட்ட அதிமுக நிர்வாகிகளின் பதவிகள் அனைத்தும் காலியாகிவிடும். இந்தசூழலில் விரைவில் கூட்டுறவுச் சங்கங்களுக்குத் தேர்தல் நடத்தப்படலாம்.

-பிரியா

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

10 நிமிட வாசிப்பு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் ...

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் திட்டம்!

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

புதன் 12 ஜன 2022