மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 12 ஜன 2022

சிறார்களுக்கு தடுப்பூசி: எந்த மாநிலம் முன்னோடி!

சிறார்களுக்கு தடுப்பூசி: எந்த மாநிலம் முன்னோடி!

சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் இந்தியாவுக்கே தமிழ்நாடு முன்மாதிரி மாநிலமாக உள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டையில் இன்று(ஜனவரி 12) செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்,”தமிழ்நாட்டில் கொரோனா பாதித்தவர்களுக்கு தொற்றின் தன்மை அறிந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த அலை என்பது வேறு, அந்த தொற்றின் வேகம் என்பது வேறு, தற்போது பரவி வருகிற தொற்றின் தன்மை வேறு. அதற்கேற்ற வகையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் வீட்டு தனிமையில் இருப்பவர்களை மருத்துவர் குழு தொடர்ந்து கண்காணித்து ஆலோசனை வழங்கி வருகிறது.

மக்கள் முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு வழிமுறைகளை முறையாக கடைபிடித்தால் எதிர்காலத்தில் முழு ஊரடங்கிற்கு வாய்ப்பு இருக்காது என்று நேற்று கூறியிருந்தேன். ஆனால் இனிமேல் ஊரடங்கே இருக்காது. ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு இருக்காது என்று நான் சொன்னதாக சமூகவலைதளங்களில் தவறான செய்தி பரவியது. நான் அப்படி சொல்லவில்லை, தவறுதலாக புரிந்துகொண்டுள்ளார்கள்.

தொடர்ச்சியாக மாதக்கணக்கில், வாரக்கணக்கில் ஊரடங்கு வரக் கூடாது, அது மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் என்பது முதல்வரின் கருத்து. தற்போது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளே சற்று மன இறுக்கத்துடன்தான் முதல்வர் செய்துள்ளார். அதேசமயம் மக்களின் உயிரை பாதுகாப்பது அரசின் கடமை. அதனால்தான் கொரோனா தடுப்பு வழிமுறைகள் மற்றும் தடுப்பூசியை கட்டாயம் செலுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம்.

ஜனவரி 10ஆம் தேதி முதல் பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டு வருகிறது. நேற்று முன் தினம் 20 ஆயிரம் பேருக்கும், நேற்று 20 ஆயிரம் பேருக்கும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் ஏப்ரல் 14ஆம் தேதிக்கு முன்னதாக தடுப்பூசியின் இரண்டு தவணையை செலுத்திக் கொண்ட 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் முன்கள பணியாளர்கள் என பூஸ்டர் செலுத்திக் கொள்ள தகுதியானவர்கள் நான்கு லட்சம் பேர். இந்தநேரத்திற்கு நான்கு லட்சம் பேரும் பூஸ்டர் போட்டிருக்க வேண்டும். நான் ஏப்ரல் 7ஆம் தேதி இரண்டாவது டோஸ் செலுத்தினேன், அதான் இன்று பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொண்டேன்” என்று கூறினார்.

சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து பேசிய அவர், ”தமிழ்நாட்டில் 15-17 வயதுடையவர்கள் 33 லட்சத்து 46 ஆயிரம் பேர் இருக்கிறார்கள். இதில் நேற்றுவரை 73 சதவிகிதம் பேர்( இருபத்தி மூன்றரை லட்சம்) தடுப்பூசி செலுத்தியுள்ளனர். சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் இந்தியாவில் தமிழ்நாடு முன்மாதிரியாக உள்ளது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் உள்ள சிறுவர்கள்தான் அதிகளவில் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.

பொங்கல் பண்டிகை என்பதால், இந்த வாரம் மெகா தடுப்பூசி முகாம் கிடையாது.அடுத்தவாரம் வழக்கம்போல் சனிக்கிழமையில் முகாம் நடைபெறும்.மெகா தடுப்பூசி முகாம் வரை காத்திருக்காமல் வார நாட்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் முன்வர வேண்டும்” என்று கூறினார்.

சிறார்களுக்கு தடுப்பூசி

இந்தியாவில் ஜனவரி 3ஆம் தேதி முதல் 15-17 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அனைத்து மாநிலங்களும் சிறப்பான முறையில் தடுப்பூசி பணியை மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் தமிழ்நாடு முன்னோடியாக இருப்பதாக அமைச்சர் கூறியுள்ளார். தற்போதுவரை இருபத்தி மூன்றரை லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக கூறினார்.

ஆனால் கடந்த 5ஆம் தேதியே ஆந்திர பிரதேசம், 39.8 சதவிகித சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தி முதலிடத்தில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது.

நேற்றைய நிலவரப்படி 100 சதவிகித சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தி லட்சத்தீவு யூனியன் பிரதேசம் முதலிடத்தை பிடித்துள்ளது. தடுப்பூசி செலுத்த ஆரம்பித்த எட்டு நாட்களிலேயே 100 சதவிகிதம் என்ற இலக்கை அடைந்துள்ளது. ஆனால் இங்குள்ள சிறார்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு. 15-17 வயதுடைய தகுதியடையவர்கள் மொத்தமே 3492 பேர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு உள்ளிட்ட அதிக சிறார்கள் கொண்ட மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை மிகவும் குறைவு.

-வினிதா

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

10 நிமிட வாசிப்பு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் ...

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் திட்டம்!

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

புதன் 12 ஜன 2022