மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 12 ஜன 2022

யோகிக்கு எதிராக அமைச்சர்கள்: அடுத்தடுத்து விலகும் எம்.எல்.ஏ.க்கள்!

யோகிக்கு எதிராக அமைச்சர்கள்:  அடுத்தடுத்து விலகும் எம்.எல்.ஏ.க்கள்!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் பிப்ரவரி 10 ஆம் தேதி தொடங்கி ஏழுகட்டமாக நடக்க இருக்கும் நிலையில், அம்மாநில ஆளுங்கட்சியான பாஜகவில் இருந்து ஓர் அமைச்சரும், நான்கு எம்.எல்.ஏ.க்களும் விலகியுள்ளனர். அவர்கள் சமாஜ்வாதி கட்சியில் இணைவதாக செய்திகள் வந்திருக்கின்றன.

யோகி ஆதித்யநாத் அரசில் அமைச்சராக இருந்து வந்த சுவாமி பிரசாத் மவுரியா தனது ராஜினாமா கடிதத்தை நேற்று (ஜனவரி 11) வெளியிட்டுள்ளார். அவர் ராஜினாமா செய்த சில மணி நேரத்தில், அவருக்கு நெருக்கமான ரோஷன் லால் வர்மா, பிரிஜேஷ் பிரஜாபதி, பகவதி சாகர் மற்றும் வினய் ஷக்யா ஆகிய நான்கு எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்வதாக அறிவித்தனர்.

சக்திவாய்ந்த ஓபிசி தலைவரும், ஐந்து முறை எம்எல்ஏவாகவும் இருந்தவருமான சுவாமி பிரசாத் மவுரியா, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து 2016ல் விலகி பாஜகவில் சேர்ந்தார். அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியை எதிர்கொள்வதற்காக ஓபிசி வாக்காளர்களின் முக்கியமான பிரிவை ஈர்க்கும் பாஜகவின் திட்டங்களின் மையமாக இருந்தவர் சுவாமி பிரசாத்.

தேர்தல் வியூகங்களுக்காக முதல்வர் யோகி ஆதித்யநாத் டெல்லியில் அமித் ஷாவைச் சந்திக்க சென்ற நிலையில் அவர் இம்முடிவை எடுத்துள்ளார்.

அவர் தனது ராஜினாமா கடிதத்தில், “வேறுபட்ட சித்தாந்தங்கள் இருந்தபோதிலும், யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் நான் அர்ப்பணிப்புடன் பணியாற்றினேன். ஆனால் தலித்துகள், ஓபிசிக்கள், விவசாயிகள், வேலையில்லாதவர்கள் மற்றும் சிறு வணிகர்கள் மீதான கடுமையான ஒடுக்குமுறை காரணமாக, நான் ராஜினாமா செய்கிறேன்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் அவர் நிருபர்களிடம், “நான் வெளியே சென்றதால் பாஜகவில் என்ன தாக்கம் ஏற்படுத்தும் என்பது 2022 சட்டசபை தேர்தலுக்கு பிறகு தெரியும்” என்றும் தெரிவித்துள்ளார்.

மௌரியாவின் முடிவு எடுக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியிருந்தன. இரண்டு மாதங்களுக்கு முன்பு, அவர் யோகி ஆதித்யநாத் மீது உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் புகார் செய்ததாகவும், ஆனால் எதுவும் நடவடிக்கை இல்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் உபி மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌரியா தனது ட்விட்டர் பக்கத்தில், "சுவாமி பிரசாத் மவுரியா ஏன் விலகினார் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் நான் அவரிடம் வேண்டுகோள் விடுக்கிறேன், வெளியேற வேண்டாம், நாம் பேசுவோம். அவசரமாக முடிவுகள் எடுக்கவேண்டாம்" என்று கூறியுள்ளார்.

அமைச்சர் சுவாமி பிரசாத்துக்கும், முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கும் கடந்த சில மாதங்களாகவே பனிப்போர் நிலவியது. கடந்த ஜூன் மாதமே சுவாமி பிரசாத், “2022 சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை கட்சித் தலைமை முடிவு செய்யும்” என்று கூறினார். இது கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியது. யோகியின் அமைச்சர்களில் கணிசமானோர் அவர் மீது அதிருப்தியில் இருக்கிறார்கள். அவர்கள் பாஜக ஜெயிக்க வேண்டும் என்று விரும்பும் அதேநேரம் மீண்டும் யோகி முதல்வராக வந்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். அவர்களில் ஒருவராகத்தான் சுவாமி பிரசாத் இந்த கருத்தை கடந்த ஜூன் மாதமே வெளியிட்டார் என்பது குறிப்பிடத் தக்கது.

பதவி விலகிய அமைச்சர் மௌரியாவுடன் மேலும் பல எம்.எல்.ஏ.க்கள் செல்வார்கள் என்பதே உபியில் இப்போது அரசியல் சூடாக இருக்கிறது. பல்வேறு கட்சிகளுக்கு பாஜக செய்த ‘சம்பவம்’ இப்போது தேர்தல் விளிம்பில் பாஜகவுக்கே நடந்திருக்கிறது.

-வேந்தன்

டிஜிட்டல் திண்ணை: விலைபோய் விடாதீர்கள்-கமல் உருக்கம்!

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  விலைபோய் விடாதீர்கள்-கமல்  உருக்கம்!

முருகன் மேல் பாசம் உண்டு: மணமேடையில் ஸ்டாலின் சிலேடை!

12 நிமிட வாசிப்பு

முருகன் மேல் பாசம் உண்டு: மணமேடையில் ஸ்டாலின் சிலேடை!

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

புதன் 12 ஜன 2022