மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 12 ஜன 2022

பொங்கல் பரிசு ஒப்பந்தம்: அமைச்சர் விளக்கம்!

பொங்கல் பரிசு ஒப்பந்தம்: அமைச்சர் விளக்கம்!

பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்து ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் பொய் பிரச்சாரம் செய்து வருவதாக உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.

தமிழக அரசு, மக்களுக்குப் பொங்கல் பரிசு வழங்கி வருகிறது. இதில் பல்வேறு குற்றச்சாட்டுகளும் எழுந்தன. இந்த நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதில் ஏற்பட்டுள்ள குளறுபடி குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அதுபோன்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, பொங்கல் பரிசு என்ற பெயரில் தரமற்ற பொருளை மக்களுக்குக் கொடுப்பதாக குற்றம்சாட்டினார்.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளித்துள்ள அமைச்சர் சக்கரபாணி, “பொங்கல் பரிசுத்தொகுப்பு கொள்முதலில் முறைகேடு நடைபெறவில்லை. 2011ஆம் ஆண்டு வரை வழங்கி வந்த பொங்கல் பரிசுத் தொகுப்பை 2012ஆம் ஆண்டு அதிமுக அரசு நிறுத்தியது.

2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் 1,000 ரூபாய் கொடுத்தார்கள். 2020ஆம் ஆண்டும் அது போன்று வழங்கப்பட்டது. 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை மனதில் கொண்டு 2,500 ரூபாய் வழங்கினார்கள்.

கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு 5,000 ரூபாய் வழங்க வேண்டும் என்று அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தினார். ஆனால் அதிமுக அரசு 1,000 ரூபாய்தான் வழங்கியது.

இந்தச் சூழலில் ஆட்சிக்கு வந்ததும் முதல்வர் ஸ்டாலின் கொரோனா நிவாரண நிதியாக ரூ.4,000 வழங்குவதற்கு முதல் கையெழுத்திட்டார். அதேபோன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 21 வகையான பொருள்களுடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால் ஓ.பன்னீர்செல்வம் போன்றவர்கள் இட்டுக்கட்டப்பட்ட கதைகளைப் பெரிதுபடுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளனர். வெளிப்படைத் தன்மையுடன் ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டது. அதில் குறைந்த விலை கோரிய நிறுவனங்களுக்குத்தான் ஒப்பந்தப் புள்ளிகள் வழங்கப்பட்டன. இது முன்னாள் நிதியமைச்சரான ஓ.பன்னீர்செல்வத்துக்குத் தெரியாதா?

இந்தியாவில் உள்ள எந்த நிறுவனமும், இதுபோன்ற திறந்தவெளி ஒப்பந்தப் புள்ளிகளைக் கோர முடியும் என்பது அவருக்குத் தெரியாதா?

இவர்களுடைய ஆட்சிக் காலத்தில் முந்திரிப்பருப்பு 20 கிராம், திராட்சை 20 கிராம், ஏலக்காய் 10 கிராம் உள்ளிட்ட 45 கிராம் பொருட்களுக்கு 45 ரூபாய் வழங்கினார்கள். ஆனால், திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட பரிசுத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள முந்திரிப்பருப்பு 50 கிராம், திராட்சை 50 கிராம், ஏலக்காய் 10 கிராம் உள்ளிட்ட 110 கிராம் எடை கொண்ட பொருட்கள் 62 ரூபாய்க்கு வாங்கப்பட்டது. இந்த மூன்று பொருள்களிலிருந்து அரசு 48 ரூபாயை மிச்சப்படுத்தியுள்ளது.

முறைகேடுகளின் மொத்த உருவம் ஓபிஎஸ்ஸும் ஈபிஎஸ்ஸும்தான். தங்கள் ஆட்சியில் நடந்த முறைகேடுகளை மறைப்பதற்காக இதுபோன்று திமுக அரசு மீது பழிபோடுகிறார்கள்.

அதிமுக ஆட்சியில் கலெக்‌ஷன், கரப்பஷன், கலெக்‌ஷன் என்றுதான் இருந்தார்கள். கூட்டுறவுத் துறையில் பணியமர்த்தப்பட்டவர்களை வைத்துக்கொண்டு இந்தப் பொருள்கள் குறித்து முதலில் சமூக வலைதளங்களில் பிரச்சாரம் செய்தார்கள். பொங்கல் பரிசு வாங்கியதில் கடந்த ஆட்சியில் தான் ஊழல் நடந்தது.

திமுக ஆட்சியில் அவ்வாறு நடைபெறவில்லை. ஆதாரத்துடன் என்னைச் சந்தித்துக் கேட்டால் அவர்களுக்குப் பதிலளிக்க நானும் தயாராக இருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

-பிரியா

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ...

4 நிமிட வாசிப்பு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ஆபரேஷன்

டிஜிட்டல் திண்ணை: சசிகலா- தினகரன் இடைவெளி: தூது போன குடும்பப் ...

7 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சசிகலா- தினகரன் இடைவெளி: தூது போன குடும்பப் பிரமுகர்!

புதன் 12 ஜன 2022