மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 11 ஜன 2022

நீதிபதி மீது இன்ஸ்பெக்டர்கள் புகார்: உயர் நீதிமன்றம் நடத்திய விசாரணை!

நீதிபதி மீது இன்ஸ்பெக்டர்கள் புகார்: உயர் நீதிமன்றம் நடத்திய விசாரணை!

நீதித் துறை என்பது மற்ற துறைகளை எல்லாம்விட புனிதமானது என்ற பிம்பம் நீண்ட காலமாகவே கேள்விக்கு உட்படுத்தப்பட்டாலும்... சமீபத்திய ஆண்டுகளில் அந்த பிம்பம் தன்னைத் தானே உடைத்துக்கொள்ளத் தொடங்கியிருக்கிறது.

கடலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் புதிய பில்டிங்கில் இரண்டாவது தளத்தில் மோட்டார் வாகன விபத்து இழப்பீடு வழங்கும் தீர்ப்பாய நீதிமன்றம் உள்ளது. இங்கே விபத்தால் பாதிக்கப்பட்டவர்கள், விபத்து ஏற்படுத்தியவர்கள், வாகன உரிமையாளர்கள், இன்ஷூரன்ஸ் நிறுவனத்தினர் என்று விபத்து தொடர்பான பலரும் சென்று வருவது வழக்கம்.

வழக்கு சம்பந்தமான டாக்குமென்ட் தேவைப்பட்டால், சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு அழைப்பாணை அனுப்பினால் தேவைப்படும் ஆவணங்களைச் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி ஆஜராகி சமர்ப்பிப்பார்.

இந்தத் தீர்ப்பாய நீதிமன்றத்துக்கு அண்மையில் வந்துள்ள நீதிபதி இருதயராணி மீதுதான் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மாவட்ட நீதிபதியிடம் புகார் கொடுத்துள்ளனர்.

இதைப்பற்றி காவல் துறை இன்ஸ்பெக்டர்களிடம் விசாரித்தோம்.

"இந்த தீர்ப்பாயத்தில் இன்ஸ்பெக்டர்களுக்கு வேலை இல்லை. வழக்கு சம்பந்தமாக டாக்குமென்ட் தேவைப்பட்டால் சம்மன் அனுப்பி கேட்பார்கள். நாங்களும் சென்று கொடுப்போம். ஆனால், நீதிபதி இருதயராணி தேவை இல்லாமல் இன்ஸ்பெக்டர்களை அழைத்து நாள் முழுவதும் நிற்க வைக்கிறார். இதனால் எங்களது பல வேலைகள் கெடுகின்றன. இதை விட சில இன்ஸ்பெக்டர்கள் இப்படி நிற்க வைப்பதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்துள்ளனர்.

இப்படித்தான் அண்மையில் நெல்லிக்குப்பம் இன்ஸ்பெக்டர் அசோகனை ஆஜராகச் சொல்லியுள்ளார் நீதிபதி. அவரும் வந்து ஆஜராகியிருக்கிறார். ஆனால் அவரை கண்டுகொள்ளாமல் ஒருநாள் முழுவதும் கோர்ட்டில் நிற்க வைத்திருக்கிறார் நீதிபதி இருதயராணி. சுகர் பேஷன்ட்டான அசோகன் கடுமையான களைப்பால் தன்னையுமறியாமல் கீழே சரிந்துவிட்டார். ஆனால் அப்போதும் அவரை கடுமையான வார்த்தைகளால் திட்டியிருக்கிறார் நீதிபதி இருதயராணி.

இன்னொரு நாள் திருப்பாதிரிபுலியூர் இன்ஸ்பெக்டர் கவிதா இந்தத் தீர்ப்பாயத்தில் ஆஜராகியிருக்கிறார். அப்போது அவரிடம், ‘என்ன... கோர்ட் என்றால் மதிக்கமாட்டிங்களா, பயப்படமாட்டிங்களா?’ என்று கேட்டவர் கவிதாவின் உடல் பருமனை குறித்து வார்த்தைகளால் துன்புறுத்தியுள்ளார். மேலும், ‘உன்னை ரிமான்ட் பண்ணிடுவேன்’ என்று மிரட்டி நிற்க வைத்து அனுப்பினார்.

வேறு ஒரு வழக்குக்காக பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வள்ளி இந்தத் தீர்ப்பாயத்துக்கு வந்திருக்கிறார். அப்போது அவர் செல்போனை காதில் வைத்தபடி வராண்டாவில் நடந்து சென்றார். அதைப் பார்த்த நீதிபதி இருதயராணி, அவரை கூப்பிடுமாறு ஊழியர்களுக்கு உத்தரவிட்டார். அவர்கள் இன்ஸ்பெக்டரிடம் சென்று தகவல் சொல்லியுள்ளனர். இன்ஸ்பெக்டர் வள்ளி சென்று என்னம்மா எனக் கேட்க, அவரை ஒருமையில் பேசியதோடு, இன்ஸ்பெக்டரின் செல்போனை பிடுங்கி வைத்துக்கொண்டார் நீதிபதி இருதயராணி. ‘கோர்ட்ல போன் பேசுறியா...அஞ்சாயிரம் ரூபாய் ஃபைனை கட்டிட்டு போனை எடுத்துட்டு போ’ என்று சொல்லிவிட்டார். நெடுநேரம் நின்ற இன்ஸ்பெக்டர் வள்ளி கண்கலங்கிக் கதறி தனது செல்போனை மீட்டுச் சென்றிருக்கிறார்.

இதேபோல வடலூர் இன்ஸ்பெக்டர் வீரமணியை வாரன்ட் என்று தீர்ப்பாய நீதிமன்றத்துக்கு அழைத்திருக்கிறார் நீதிபதி. வந்த அவரிடம், ‘வாரன்ட் என்றால் என்னவென்று தெரியுமா? கிராஸ் பெல்ட் மற்றும் தொப்பியை கழற்றிவிட்டு கீழே உட்கார வேண்டும்’ என்று உத்தரவிட்டிருக்கிறார் நீதிபதி இருதயராணி. குழம்பிப் போன இன்ஸ்பெக்டர் வீரமணி, ‘அம்மா... எனக்கு வாரன்ட் வரல, வாரன்ட் போடவும் இல்லை. இருந்தால் காட்டுங்கள்’ என்று கேட்டிருக்கிறார். உடனே கோபமான நீதிபதி இருதயராணி, ‘என்னையே எதிர்த்துப் பேசுறியா? உன்னை ரிமான்ட் செய்கிறேன் பார் ’ என்று கடலூர் புதுநகர் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தியை அழைத்து, ‘இவரை ரிமான்ட் பண்ணுங்கள்’ என்று உத்தரவிட்டுள்ளார். அவர் நீதிபதியிடம், அம்மா பேசித் தீர்த்துக்கலாம்மா என்று சொல்லியுள்ளார். உடனே நீதிமன்ற ஊழியர்களிடம் இன்ஸ்பெக்டர் அவமதிப்பு செய்ததாக புகார் பெற்றுள்ளார்.

இவர்களைப் போல் வேப்பூர் இன்ஸ்பெக்டர் ரமேஷ் பாபு, காட்டுமன்னார்கோயில் இன்ஸ்பெக்டர் ஏழுமலை, சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் என கடலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒவ்வொரு போலீஸ் அதிகாரிக்கும் வெவ்வேறு விதமான கசப்புச் சம்பவங்கள் இந்தத் தீர்ப்பாய நீதிபதி இருதயராணியால் ஏற்பட்டுள்ளன.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த இன்ஸ்பெக்டர்கள் ஒருகட்டத்துக்கு மேல் பொறுக்க முடியாமல் கடலூர் எஸ்பி சக்தி கணேசனிடம் குமுறல்களைக் கொட்டியுள்ளனர். இதையெல்லாம் கேட்டு அதிர்ச்சி அடைந்த எஸ்பி... தனக்குத் தெரிந்த மூத்த நீதிபதிகளிடம், மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாய நீதிபதிக்கு உள்ள அதிகாரங்களைப் பற்றி கேட்டுள்ளார். ’யாரையும் கைது செய்ய உத்தரவிட அதிகாரம் இல்லை. ரூ 500க்கு மேல் அரசு ஊழியர்களிடம் அபராதம் விதிக்க முடியாது. அப்படியே அபராதம் விதித்தாலும் அதை சம்பந்தப்பட்ட அரசு ஊழியரின் ஊதியத்திலிருந்துதான் பிடித்தம் செய்ய முடியும்’ என்பதை அறிந்துகொண்டார் எஸ்பி.

இதையடுத்து பாதிக்கப்பட்ட இன்ஸ்பெக்டர்களிடம் புகார்களைப் பெற்று அவற்றை உயர் நீதிமன்ற ரிஜிஸ்ட்ரார் தனபாலுக்கு ஒரு டிஎஸ்பி மூலமாக கொடுத்து அனுப்பியிருக்கிறார். நீதித்துறை உள் விவகாரங்களை விசாரிக்கும் போர்ட்போலியோ நீதிபதியையும் கடந்த டிசம்பர் 12ஆம் தேதி தொடர்பு கொண்டு விரிவான தகவல்களை தெரியப்படுத்திவிட்டார் கடலூர் எஸ்பி சக்தி கணேசன்.

போலீஸ் அதிகாரிகள் கொடுத்த புகாரில் இருந்த தீவிரத்தைப் புரிந்துகொண்ட உயர் நீதிமன்றம் அந்தப் புகார்கள் பற்றி விசாரித்து அறிக்கை தருமாறு கடலூர் மாவட்ட முதன்மை நீதிபதி ஜவஹருக்கு 29.12.2021இல் கடிதம் அனுப்பியுள்ளது.

அதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட ஆறு இன்ஸ்பெக்டர்களும் ஜனவரி 8ஆம் தேதி தன் முன் நேரில் ஆஜராக வேண்டும் என்று கடலூர் எஸ்பி சக்தி கணேசனுக்கு தபால் அனுப்பியுள்ளார் முதன்மை நீதிபதி.

அதன் அடிப்படையில் ஜனவரி 8ஆம் தேதி நெல்லிக்குப்பம் இன்ஸ்பெக்டர் அசோகன், திருப்பாதிரிப்புலியூர் இன்ஸ்பெக்டர் கவிதா போன்றவர்கள் நீதிபதி ஜவஹர் முன்னிலையில் ஆஜராகி தங்களுக்குத் தீர்ப்பாய நீதிபதி இருதயராணி செய்த கொடுமையைச் சொல்லி அழுதுள்ளார்கள். ஒவ்வொருவரிடமும் சுமார் 60 நிமிடங்கள் முதல் 90 நிமிடங்கள் வரையில் பொறுமையாக விசாரித்து வாக்குமூலங்களைப் பதிவுசெய்துள்ளார் மாவட்ட முதன்மை நீதிபதி ஜவஹர்.

இந்த விசாரணை அறிக்கைக்கு பிறகு தீர்ப்பாய நீதிபதி இருதயராணி மீது நடவடிக்கை இருக்கும் என்கிறார்கள் நீதிமன்ற ஊழியர்கள்.

இன்ஸ்பெக்டர்களுக்கு ஏற்பட்ட இந்த நிலையைப் பற்றி அறிந்ததும் இதுபற்றி விசாரித்து, சென்னை உயர் நீதிமன்றம் வரை புகார் அளித்து விசாரணைக்கு வழி வகுத்திருக்கும் கடலூர் எஸ்பி சக்தி கணேசனுக்கு போலீஸார் தங்களது நன்றிகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

- வணங்காமுடி

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக காத்திருக்கும் விஜய்

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக காத்திருக்கும் விஜய்

பொறியாளரை தாக்கிய திமுக எம்எல்ஏ: கட்சிப் பதவி பறிப்பு!

6 நிமிட வாசிப்பு

பொறியாளரை தாக்கிய திமுக எம்எல்ஏ: கட்சிப் பதவி பறிப்பு!

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன் திடீர் முடிவு! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன்  திடீர் முடிவு!

செவ்வாய் 11 ஜன 2022