மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 11 ஜன 2022

கொரோனா நோயாளிகள் அதிகரிக்கலாம்: மத்திய அரசு எச்சரிக்கை!

கொரோனா நோயாளிகள் அதிகரிக்கலாம்: மத்திய அரசு எச்சரிக்கை!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று மத்திய சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது.

இந்தியாவில் தினசரி பாதிப்பு 1.79 லட்சமாக உள்ளது. ஒமிக்ரான் பாதிப்பு நான்காயிரத்தைத் தாண்டியுள்ளது. ஒவ்வொரு நாளும் பாதிப்பு அதிகரித்து செல்வதால் ஒவ்வொரு மாநிலங்களும் நோய் பரவலுக்கேற்ப பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. கொரோனா தொற்று குறித்து மத்திய அரசும் அவ்வப்போது மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது.

இந்த நிலையில் நேற்று (ஜனவரி 10) மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “தற்போது மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகள் சதவிகிதம் 5-10% ஆக உள்ளது. இது நிலையானது அல்ல. எப்போது வேண்டுமானாலும் மாறலாம். மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இரண்டாம் அலையின்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் விகிதம் 20-23 சதவிகிதமாக இருந்தது. அதனால், மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை, வீட்டு தனிமையில் உள்ளவர்கள், ஆக்சிஜன் மற்றும் ஐசியூ படுக்கையில் உள்ள நோயாளிகள் ஆகியவற்றை தினந்தோறும் கண்காணிக்க வேண்டும்.

அந்தக் கண்காணிப்பின் அடிப்படையில், இரண்டாவது அலையின்போது செய்தது போன்று, சுகாதாரப் பணியாளர்களின் தேவைகள் மற்றும் சுகாதார வசதி வாரியாக அவர்களின் இருப்பு ஆகியவை மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும்.

பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஜம்போ சுகாதார வசதிகள், தற்காலிக மருத்துவமனைகள் போன்றவற்றை நிறுவுவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளதை பாராட்டுகிறேன்.

கோவிட் மற்றும் கோவிட் அல்லாத பகுதிகளில் உள்ள சுகாதாரப் பணியாளர்களை நிர்வகிப்பதற்கு ஜனவரி 9ஆம் தேதி மத்திய சுகாதார அமைச்சகம் வழங்கிய அறிவுரையை கண்டிப்பாகப் பின்பற்றுவதும் முக்கியம். கொரோனா அதிகரித்து வரும் சூழலில், அனைத்து சுகாதார மையங்களிலும் நியாயமான கட்டணங்களை வசூலிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். எங்கேயாவது அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால், அவற்றைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க ஒரு வழிமுறை இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

கொரோனா பணிக்கு பி.எஸ்சி நர்சிங் மூன்றாவது மற்றும் நான்காவது ஆண்டு மாணவர்களை மாநில அரசுகள் பயன்படுத்தலாம். அதே போன்று இளநிலை மருத்துவ மாணவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் உள்ளிட்டோரையும் கொரோனா பணிக்குப் பயன்படுத்தி கொள்ளலாம். ஓய்வுபெற்ற மருத்துவ நிபுணர்களை காணொலி வாயிலாக மருத்துவ ஆலோசனை வழங்குமாறு சொல்லலாம். அனைத்து மாவட்டங்கள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் இ-சஞ்சீவனி திட்டத்தின் மூலம் செல்போனில் மருத்துவ ஆலோசனை பெறும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். கொரோனா நோயாளிகளை சிகிச்சைக்கு அழைத்து செல்ல கூடுதல் ஆம்புலன்ஸ் வசதிகளை மாநில அரசுகள் ஏற்படுத்த வேண்டும். கொரோனா தடுப்பூசி மையங்கள் இரவு 10 மணி வரை இயங்க அனுமதிக்கலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சளி,காய்ச்சல் இருந்தால் கொரோனா பரிசோதனை

தமிழ்நாட்டில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், கொரோனா பரிசோதனை தொடர்பாக, தமிழ்நாடு சுகாதாரத் துறை புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில், காய்ச்சல், சளி, இருமல், மூச்சுத்திணறல், உடல்வலி இருந்தால் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். கொரோனா தொற்று உள்ள நபருடன் தொடர்பில் இருந்த நபர்களுக்கு அறிகுறி இல்லையெனில் பரிசோதனை தேவையில்லை. ஆனால் அறிகுறி இல்லையென்றாலும், 60 வயதுக்கு மேற்பட்டோர், இணை நோய் உள்ளவர்கள் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கர்ப்பிணிகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைப்பு மருந்து எடுத்துக் கொள்பவர்கள் பரிசோதனை செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக காத்திருக்கும் விஜய்

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக காத்திருக்கும் விஜய்

பொறியாளரை தாக்கிய திமுக எம்எல்ஏ: கட்சிப் பதவி பறிப்பு!

6 நிமிட வாசிப்பு

பொறியாளரை தாக்கிய திமுக எம்எல்ஏ: கட்சிப் பதவி பறிப்பு!

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன் திடீர் முடிவு! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன்  திடீர் முடிவு!

செவ்வாய் 11 ஜன 2022