மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 11 ஜன 2022

சிறப்புக் கட்டுரை: வெள்ளமும் விளிம்பு நிலை மக்களின் சோகமும்!

சிறப்புக் கட்டுரை: வெள்ளமும் விளிம்பு நிலை மக்களின் சோகமும்!

ஆதித்யா ரமேஷ்

அசோகமித்திரன் எழுதி 1969இல் வெளியான ‘தண்ணீர்’ நாவல் சென்னை நகரின் தண்ணீர்ப் பற்றாக்குறை பிரச்சினையை மையமாகக் கொண்டது. வெள்ளத்தின் வடிவில் அதிக அளவிலான தண்ணீரும் சென்னையின் பிரச்சினையாக இருந்து வருகிறது. 2015இல் நிகழ்ந்த மோசமான வெள்ளத்தில் 300 பேருக்கு மேல் பலியாகி, ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். அது நடந்து ஆறு ஆண்டுகள் ஆன நிலையில், சென்னையும் அதன் மக்களும் ஆண்டுதோறும் வெள்ளத்தை எதிர்நோக்குகின்றனர். 2021லும் பருவமழையின்போது நகரின் பல பகுதிகள் தண்ணீரில் மிதந்தன. 2015இன் மழை வெள்ளக் காட்சிகளும் மீண்டும் நினைவுக்கு வந்தன.

2015 வெள்ளத்தைத் தொடர்ந்து, முன்னணி இதழ்கள், சமூக ஊடகங்களில் நகரின் பழைய, புதிய வரைபடங்கள் வெளியாயின. நகரின் பல பகுதிகள் ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் மீது உருவாக்கப்பட்டவை எனத் தெரிவிக்கப்பட்டது. சென்னை நகரின் முதல் திட்டமிடப்பட்ட புறநகர் பகுதியான தியாகராய நகரே, ஏரியின் மீது உருவானதுதான். 2015 வெள்ளம் இந்த முக்கியமான நகர்ப்புறக் கற்பிதத்தைக் கிளறிவிட்டிருந்தாலும், பொறியியல், திட்டமிடல் தீர்வுகள் மட்டும் இதற்குப் போதுமானதல்ல. இந்த வகைக் காட்சிகள், தண்ணீரை நகரின் மொத்தத்துக்குமான உபரியாகவும் பற்றாக்குறையாகவும் பார்க்கின்றன.

ஆனால் 20ஆம் நூற்றாண்டில் சென்னை நகரின் உருவாக்கத்தைத் திரும்பிப் பார்த்தால், வெள்ளம் என்பது, கழிவுநீர் கால்வாய்களை அமைப்பது, நீர்நிலைகள் மீது கட்டடங்கள் கட்டுவதைவிட மிகவும் சிக்கலான நிகழ்வு என்பது புரியும். வெள்ளமும் பேரிடர் பாதிப்பும் மக்களைப் பாதிக்கும் விதம் பொதுவாகவே சமமற்று இருக்கிறது. உதாரணமாக, உழைக்கும் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியான வடசென்னை வெள்ளம் தொடர்பான ஊடகங்களின் அண்மைக்காலச் செய்திகளில் அரிதாகவே இடம்பெறுகிறது. வெள்ளத்தின் சமமற்ற உருவாக்கம், தாக்கம், பதிவு ஆகியவை சொத்து உருவாக்கம், உரிமை ஆகியவற்றில் பொதிந்திருப்பதோடு, பரந்துபட்ட சூழலியல் பேரிடரின் அங்கமாகவும் ஆகிறது.

கிழக்கு இந்திய கம்பெனி தெற்காசியாவின் முதல் நகர்ப்புற குடியிருப்பை அமைத்ததில் தொடங்கி, காலனியாதிக்கத்துக்குப் பிறகு வந்த அரசுகளும், கட்டுநர்களும் நீர்நிலைகளை மீட்டெடுத்து, அதன்மீது கட்டடங்களை எழுப்பியது வரை, சென்னையின் நீரியல் அமைப்பு வாழ்க்கையின் அமைப்புக்கும் போக்குக்கும் அடிப்படையாக உள்ளது. நகருக்குள் ஒவ்வொரு நீர்நிலைப் பகுதியும் மழையை வெவ்வேறு விதமாக எதிர்கொள்கிறது. உதாரணமாக, கடலோரப் பகுதியில் புயல் காற்றில், படகுகள், வீடுகள், மனித உயிர்களுக்கு பாதிப்பு உண்டாகிறது. கூவம் நதிக்கரை அருகே உள்ள வீடுகள் முழுவதும் மூழ்குகின்றன.

20ஆம் நூற்றாண்டின் மத்தியில் உண்டான வேகமான விரிவாக்கத்துக்கு முன்பே வெள்ளம் இருந்திருக்கிறது. 1910இல், 80 ஆண்டுகளில் மோசமான காலம் என சென்னை மாநகராட்சி அறிக்கை பதிவு செய்துள்ளது. இடைவிடாத மழை காரணமாக, நிலத்தடி நீர்மட்டம் 6 முதல் 8 அடி உயர்ந்து, பலவகைக் கட்டுமானங்கள் தடைப்பட்டன. 1943இல் இதே போன்ற பெரும் வெள்ளச் சூழல் உண்டானபோது, நிவாரணப் பணிகளுக்காக ராணுவம் அழைக்கப்பட்டது. அப்போதைய மேயர் சி. தடுலிங்க முதலியார் குடிசைப் பகுதிகளில் வசிக்கும் மக்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டு, உதவிக்குக் கோரிக்கை வைத்தார். மேயர் அமைப்பு நோக்கிலான மாற்றங்களுக்கு பதிலாக நிவாரண உதவிகளையே கோரினார்.

காலனியாதிக்கத்துக்குப் பிறகு, தொழில்மயமாக்கல் தெற்காசிய நகரங்களை வேகமாக விரிவடையச் செய்தது. 1941 முதல் 1961 வரை சென்னை மக்கள்தொகை இரு மடங்கானது. 1965இல் வெளியான அறிக்கை, 548 குடிசைப் பகுதிகள் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தது. நகரின் கால்வாசி மக்கள் இங்கு வசித்தனர். இந்த அறிக்கையின்படி குடிசைப் பகுதிகள் பெரும்பாலும் தாழ்வான பகுதிகளிலேயே அமைந்திருந்தன.

மக்கள்தொகையில் பெரும்பகுதி குடிசைப் பகுதிகளில் வசித்த நிலையில் வெள்ளம் பற்றிய எந்தப் பதிவும் நகரின் விளிம்புநிலை மக்களின் பார்வையிலிருந்து சூழலியல் பேரிடர்களைப் புரிந்துகொள்ளும் வகையில் அமைய வேண்டும். எனினும், பல்வேறு வெள்ளங்களை மீறி, 1950இல் அமைக்கப்பட்ட சென்னை மேம்பாடு அறக்கட்டளை அல்லது 1967இல் அமைக்கப்பட்ட சென்னை மாஸ்டர் பிளான் ஆகியவற்றில் வெள்ளத்தை முக்கியப் பிரச்சினையாகக் கருதியதற்கான குறிப்புகள் இல்லை.

சென்னை வேகமாக வளர்ந்தபோது, திட்டமிடுபவர்கள் தொழிற்பேட்டைகள், புறநகர் உருவாக்கம், கழிவுநீர் கால்வாய் அமைப்பு (சொத்து வரி செலுத்துபவர்களுக்கு) ஆகியவற்றிலேயே அதிகம் கவனம் செலுத்தினர். மானிடவியலாளர் கரேன் கோஹல்லே சொல்வதுபோல, வீட்டு வசதியின் பின்னே உள்ள கருத்தாக்கம், தொடர்ந்து ஏழைகளை வெள்ளத்தின் பாதையில் வைத்திருக்கிறது.

குடிசைப் பகுதியில் இருப்பவர்களை பாதிக்கும் பேரிடர் அம்சங்களில் வெள்ளம் ஒரு பகுதிதான். தீ விபத்து, தூய்மையான குடிநீருக்கான வசதி இல்லாதது ஆகியவை 20ஆம் நூற்றாண்டு சென்னையில் குறைந்த வருமானம் கொண்ட பிரிவினரின் வாழ்க்கையின் பிரிக்க முடியாத கூறுகளாக இருக்கின்றன. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுவதில் உள்ள முரண் என்னவெனில், இந்தப் பகுதிகளில் குடிநீர் வசதியின் போதாமை நீடிப்பதுதான். நகரில் ஆரம்ப காலத்தில் குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டபோது, அவை முதலில் ஆங்கிலேயர்களுக்காகவும், பின்னர் ராணுவத்தினருக்காகவும், அதன் பிறகு வரி செலுத்தும் மேல்தட்டு வர்க்கத்தினருக்காகவும் அமைக்கப்பட்டன. வெள்ளம், தீ விபத்து, குடிநீர் வசதி என எதிலுமே ஆங்கிலேய அரசு விளிம்பு நிலை மக்களுக்காக எதையும் செய்ததில்லை.

1960களில், மீண்டும் வெள்ளம் பாதித்தபோது பாதிக்கப்பட்ட சமூகத்தினருக்காக திட்டமிடல் அதிகம் இல்லை. ஏழைகளுக்கான வீட்டு வசதி, நகரின் பொது ஆரோக்கியத்துக்கு எதிராகப் பார்க்கப்பட்டது.

அதே நேரத்தில் குடிசைப் பகுதிகள் மறுவாழ்வு என்பது வெள்ளப் பகுதிகள், ஏரிகள், சதுப்பு நிலங்களிலேயே நிகழ்ந்தன. முதல் சென்னை நகர்ப்புற வளர்ச்சித் திட்டம், 1977இல் செயல்படுத்தப்பட்டபோது, நகருக்கு வெளியே இருந்த வில்லிவாக்கம், கொடுங்கையூர் போன்ற இடங்கள் ஏழைகளுக்கு இடமளித்தன. இவையும் ஒருகாலத்தில் நீர்நிலைகளாக இருந்தவைதான். இந்த இடங்களையே எளிதாகக் கையகப்படுத்த முடிந்தது.

மக்கள் ஆற்றங்கரைகளிலும் ஏரிகளிலும் குடியேறுவதை அரசு விரும்பவில்லை என்றாலும் நகருக்குப் புதிதாக வருபவர்களுக்குத் தாழ்வான பகுதிகளில் மட்டுமே இடம் கிடைக்கிறது.

காலநிலை மாற்ற நெருக்கடி அச்சுறுத்தும் நிலையில், உலக வங்கி, ராக்பெல்லர் பவுண்டேஷன் போன்ற அமைப்புகளின் சோதனைக்கூடமாக சென்னை மீண்டும் அறியப்படுகிறது. உலக வங்கிக்கு நகர வளர்ச்சியில் நீண்ட கால ஆர்வம் இருந்தாலும், சர்வதேச அமைப்புகள் ஸ்மார்ட் நகரம் போன்ற கருத்தாக்கங்களின் பேரில் தங்கள் ஆர்வத்தைப் புதுப்பிக்கின்றன. உலக வங்கியின் அண்மை அறிக்கை ஒன்று, சென்னையில் மீண்டும் மீண்டும் நிகழும், வெள்ளம், வறட்சியைத் தடுப்பது எனக் குறிப்பிடுகிறது.

ஆனால், திட்டமிடல், பொறியியல், புவியியல் ஆகிய கூறுகளின் அடிப்படையில் மட்டுமே வெள்ளத்தைப் புரிந்துகொள்ள முடியாது. மாறாக, வெள்ள பாதிப்பு என்பது சொத்துரிமை உறவுகள், சமத்துவமின்மை, வீடுகள் உருவாக்கம், குறைந்த வருமானப் பிரிவினர் பகுதியில் சூழலியல் பேரிடர் ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டுள்ளது. சென்னையைப் புயல் மழை அச்சுறுத்தும் நிலையில், “முன் நிகழ்ந்திராத இயற்கைப் பேரிடர்” என்று சொல்லி இனியும் அரசியல்வாதிகள் தப்பித்துக்கொள்ள முடியாது. மாறாக, வெள்ளத்தின் சிக்கலான வரலாறு, சென்னை நகர ஏழை மக்களின் பேரிடர் பாதிப்பு வாழ்க்கையை மனதில் கொள்ளும் அரசியல் ரீதியான எதிர்வினை உருவாக வேண்டும்.

நன்றி: https://www.theindiaforum.in/article/history-floods-chennai

தமிழில்: சைபர்சிம்மன்

.

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ...

4 நிமிட வாசிப்பு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ஆபரேஷன்

டிஜிட்டல் திண்ணை: சசிகலா- தினகரன் இடைவெளி: தூது போன குடும்பப் ...

7 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சசிகலா- தினகரன் இடைவெளி: தூது போன குடும்பப் பிரமுகர்!

செவ்வாய் 11 ஜன 2022