மண்டல வாரியாக பெண்களுக்கு 50% ஒதுக்கீடு ரத்து!

politics

சென்னை மாநகராட்சியில், மண்டல வாரியாக பெண்களுக்கு 50 சதவிகித ஒதுக்கீடு வழங்கும் தமிழ்நாடு அரசின் அரசாணையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

தமிழ்நாடு நகராட்சி சட்டத்தின்படி நகராட்சி மற்றும் மாநகராட்சி தேர்தலில் 50 சதவீத இடங்களை பெண்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று சட்டம் இயற்றப்பட்டது. அதனடிப்படையில் 2019 கடந்த மே மாதம் தமிழ்நாடு அரசு பிறப்பித்த உத்தரவின்படி, சென்னை மாநகராட்சியில் மண்டலவாரியாக பெண்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதை எதிர்த்து, சென்னையைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக வார்டுகளை ஒதுக்கீடு செய்யாமல், மாநகராட்சியின் ஒட்டுமொத்த வார்டுகளையும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் சமமாகப் பிரித்து வழங்க வேண்டும். சென்னை மாநகராட்சியில் மொத்தமுள்ள 200 வார்டுகளில் பட்டியலின, பழங்குடியின மற்றும் அவற்றில் பெண்களுக்கென 32 வார்டுகள் ஒதுக்கப்படும் நிலையில், மீதமுள்ள 168 இடங்களில் பொதுப்பிரிவில் பெண்களுக்கு 89 இடங்களும், ஆண்களுக்கு 79 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால் பெண்களுக்குக் கூடுதல் வார்டுகள் வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்தது. எனவே வார்டுகளை ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமாகப் பிரித்து வழங்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த வழக்கில் பதிலளித்த சென்னை மாநகராட்சி, “கடந்த 2016ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட தமிழ்நாடு நகராட்சி சட்டத்தின் அடிப்படையில் பெண்களுக்கான 50 சதவிகிதம் இட ஒதுக்கீடாக, 84 இடங்கள்தான் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், மண்டல வாரியாக வார்டுகளைப் பிரித்து பெண்களுக்கு ஒதுக்குவதால், அவர்களுக்கு கூடுதல் வார்டுகள் வருகின்றன” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதுபோன்று தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான சண்முகசுந்தரம், அரசியல் சட்டத்தின் 243 டி உட்பிரிவு 3, மூன்றில் ஒரு பகுதிக்கு குறையாமல் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வகை செய்வதாகவும், அந்த வகையில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாகவும், வார்டு எல்லை மறுவரையறை அடிப்படையில் மண்டல வாரியாக சுழற்சி முறையில் இந்த இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது என்று தெரிவித்தார்.

அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வார்டு வாரியாக இல்லாமல், மொத்தமாக மாநகராட்சியை ஒரு யூனிட்டாகக் கருதி ஏன் இடஒதுக்கீடு வழங்கக் கூடாது” எனக் கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, மண்டல வாரியாக எந்தெந்த மாநிலங்களில் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது என்பதை தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளிவைத்தனர்.

இந்த வழக்கு இன்று(ஜனவரி 11) மீண்டும் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி தலைமையிலான அமர்வு முன்பு விசாரணை வந்தது.

சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக பெண்களுக்கு 50 சதவிகித ஒதுக்கீடு வழங்கும் தமிழ்நாடு அரசின் அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிபதிகள், சென்னை மாநகராட்சியில் உள்ள மொத்த வார்டுகளின் எண்ணிக்கையின் அடிப்படையிலேயே பெண்களுக்கு 50 சதவிகிதம் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

**-வினிதா**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *