மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 11 ஜன 2022

டிஜிட்டல் திண்ணை: டாஸ்மாக் பார்: ஸ்டாலினிடம் செந்தில்பாலாஜி சொன்ன கணக்கு!

டிஜிட்டல் திண்ணை:  டாஸ்மாக் பார்: ஸ்டாலினிடம் செந்தில்பாலாஜி சொன்ன கணக்கு!

வைஃபை ஆன் பண்ணியதும் வாட்ஸ் ஆப் ஆன் லைன் காட்டியது. ஸ்டேட்டஸில் செந்தில்பாலாஜி-ஸ்டாலின் படம் வைக்கப்பட்டிருந்தது. அந்த ஸ்டேட்டஸுக்கு என்ன அர்த்தம் என்று கேட்டதற்கு விளக்கமாக பதிலை டைப் செய்ய ஆரம்பித்தது வாட்ஸ் அப்.

“கடந்த டிசம்பர் 30, 31 தேதிகளில் தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபான பார் டெண்டர் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இது பல்வேறு வகைகளிலும் சர்ச்சையாகியிருக்கிறது. மதுவிலக்குத் துறை அமைச்சரான செந்தில்பாலாஜி ‘ஒருங்கிணைக்கப்பட்ட நெட்வொர்க்கின் கீழ் பார்களை கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக திமுக மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அதிருப்தியில் இருக்கின்றனர். ஒருபக்கம் தற்போதைய பார் உரிமையாளர்கள் செந்தில்பாலாஜி வீட்டின் முன் போராட்டம் நடத்த இன்னொரு பக்கம் திமுக மாசெக்களும், அமைச்சர்களும், ‘போராட்டம் நடத்த வேண்டியது நாங்கதான். ஆனா எங்க அமைச்சரை எதிர்த்து நாங்களே போராட்டம் நடத்தினா அது முதல்வருக்குத்தான் கெட்டபெயர் என்பதால் அமைதியா இருக்கோம்’என்று புலம்பிக்கொண்டிருக்கிறார்கள்.

பல்வேறு அமைச்சர்களுக்கும் மாசெக்களுக்கும் அவரவர் மாவட்டங்களில் பார் விவகாரத்தில் அதிகாரம் பிடுங்கப்பட்டு செந்தில்பாலாஜி கைகாட்டும் ஒரு சிலரின் கைகளில்தான் தமிழ்நாட்டின் பார்கள் செல்லப்போகின்றன. இதனால்தான் கடந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் திமுகவின் பல அமைச்சர்களும் மாசெக்களும் செந்தில்பாலாஜியை பார்த்து ஸ்மைல் கூட செய்யவில்லை.

தன் மீதான அமைச்சர்கள், மாசெக்களின் கோபம் செந்தில்பாலாஜிக்கும் தெரிந்திருக்கிறது. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் செந்தில்பாலாஜி அனுப்பிய ஆட்கள் சென்று ஆய்வு செய்து அவருக்கு பார்களை பற்றிய ரிப்போர்ட் அளித்திருக்கிறார்கள். அதையும் அவர் முதல்வரிடம் கொண்டு சென்றிருக்கிறார்.

‘இப்போது நாம் பார்களை தமிழ்நாடு முழுமைக்கும் சென்ட்ரலைஸ்டு செய்வது கட்சிக்கார்களுக்கு கஷ்டம் போல தெரியும். ஆனால் தேர்தல் நேரத்தில்தான் இதன் பலன் தெரியும். தற்போது தேர்தல் நேரத்தில் கட்சியின் பூத் கமிட்டிகள் ஒவ்வொன்றுக்கும் செலவுக்காக ஆறாயிரம் ரூபாய் கொடுத்து வருகிறோம். இது போதாது. பார்களை சென்ட்ரலைசுடு ஆக்குவதால் கிடைக்கும் வருமானங்கள் மூலம் தேர்தல் நேரத்தில் தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து பூத் கமிட்டிகளுக்கும் கூடுதலாக பத்தாயிரம் ரூபாய் வழங்க முடியும். ஆக மொத்தம் 16 ஆயிரம் ரூபாய் நாம் வழங்க முடியும். இதனால் பூத் கமிட்டியினர் தேர்தல் நேரத்தில் இன்னும் வேகமாகவும் உத்வேகமாகவும் செயல்படுவார்கள். இப்போது கட்சிக்காரர்களில் சிலருக்கு மட்டும் மொத்தமாக சேர்வதை விட தேர்தல் நேரத்தில் கட்சிக்காக உழைக்கும் ஒவ்வொரு பூத் கமிட்டி உறுப்பினருக்கும் அந்த பணம் சென்று சேர்ந்தால் கட்சிக்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுக்கும். வரும் எம்பி தேர்தலில் இது செயல்படுத்தப்படும், இந்த பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று முதல்வரிடம் செந்தில்பாலாஜி கணக்குப் போட்டுக் கொடுத்திருக்கிறார்’ என்கிறார்கள் செந்தில்பாலாஜியை சுற்றியுள்ளவர்கள்.

கடந்த 30 ஆம் தேதி திருச்சியில் அரசு விழாவை முடித்துவிட்டு சென்னை திரும்பினார் முதல்வர். அப்போது சென்னையில் திடீர் மழை பெய்து ஆங்காங்கே சாலைகளில் நீர் தேங்கியது. சென்னை திரும்பியதும் நேராக சபரீசன் வீட்டுக்கு சென்றார் முதல்வர். அங்கே அமைச்சர் செந்தில்பாலாஜியும் இருந்தார். செந்தில்பாலாஜியோடு சில நிமிடங்கள் ஆலோசனை நடத்திய முதல்வர், அதன் பிறகே புறப்பட்டு சென்னை மாநகராட்சி அலுவலகத்துக்கு சென்று மழை வெள்ளம் பற்றி ஆய்வு செய்தார். அந்த இரவு நேரத்து ஆய்வில் முதல்வர் மற்றும் அமைச்சர் சேகர்பாபுவோடு, அமைச்சர் செந்தில்பாலாஜியும் இருந்தார் .

இதற்கிடையே பார் விவகாரத்தில் தங்களது குமுறல்கள் முதல்வரின் காதுகளுக்கு செல்ல வேண்டும் என்று பல மாசெக்களும், அமைச்சர்களும் விரும்பியிருக்கிறார்கள். அவர்கள் முதல்வருக்கு நெருக்கமான சீனியர் அமைச்சர்களை சந்தித்து, ‘கட்சிக்காரன் காய்ஞ்சு கெடக்குறான். பத்து வருசமா போராட்டம், ஆர்பாட்டம் மட்டுமில்லாம மழை நிவாரணம், கொரோனா நிவாரணம்னு தலைமை சொன்னதையெல்லாம் நிர்வாகிகள் மக்களுக்கு செஞ்சிருக்காங்க. பல நிர்வாகிகள் இப்ப நிறைய கடன்ல இருக்காங்க. அவங்களுக்கு பார் லைசென்ஸ் வாங்கித் தர முடியலை. ஏற்கனவே மது தயாரிக்கும் கம்பெனிகள் எல்லாம் பார்ட்டி ஃபண்டுனு கொடுத்துடறாங்க. இந்த நிலையில பார்ல விக்கிற கடலைப் பாக்கெட், முறுக்கு பாக்கெட், வாட்டர் பாட்டில் விற்பனையும் கூட பெரிய நிறுவனங்களே மொத்தமா வித்து காசு பாத்துட்டு போயிடுச்சுன்னா கட்சிக்காரனுக்கு நாம என்ன பதில் சொல்றது? முதல்வரை பார்க்கும்போது இதை அவர்கிட்ட எப்படியாவது எடுத்து சொல்லுங்க’என்று சொல்லியிருக்கிறார்கள்.

இதைக் கேட்டுவிட்டு , ‘என் மாவட்டத்துல எனக்கே இந்த கதிதான். நான் இதப் பத்தி தளபதிகிட்ட பேசறேன்’என்று சொல்லியிருக்கிறார் அந்த சீனியர் அமைச்சர். அதன்படி கடந்த வாரம் இரு சீனியர் அமைச்சர்கள் முதல்வரை சந்தித்தார்கள். பல்வேறு விஷயங்கள் பற்றிப் பேசிவிட்டு பார் விவகாரத்தைப் பற்றிக் குறிப்பிட்டு மாசெக்கள் புலம்புவது பற்றியும் சொல்லியிருக்கிறார்கள். உடனே முதல்வர், ‘இப்படி புலம்பினது எந்த மாவட்டச் செயலாளர்னு சொல்லுங்க?’என்று கேட்க எதற்கு வம்பு என்று பெயரைச் சொல்லாமல் சமாளித்து அத்தோடு ஆஃப் ஆகிவிட்டார்கள் அந்த சீனியர் அமைச்சர்கள்”என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

செவ்வாய் 11 ஜன 2022