மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 11 ஜன 2022

பொங்கல் பரிசு - விசாரணைக்கு உத்தரவிடுங்கள் : அதிமுக!

பொங்கல் பரிசு - விசாரணைக்கு உத்தரவிடுங்கள் : அதிமுக!

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக அரசு கடந்த ஜனவரி 4ஆம் தேதி முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கி வருகிறது. இதில் பல்வேறு குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளது. வழங்கப்படும் பரிசுப் பொருட்களின் கவரில் இந்தி எழுத்து இடம் பெற்றிருந்தது, உருகும் வெல்லம், சொத்தை விழுந்த கரும்பு, பவுடர் போல் இருக்கும் ரவை, நமுத்துப் போன முந்திரி எனப் பரிசு பெற்றவர்கள் குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகின்றனர்.

இந்நிலையில் பொங்கல் பரிசுத் தொகுப்பில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ள ஓபிஎஸ், “எங்கும் தமிழ், எதிலும் தமிழ்', 'சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழ்', 'இந்திய ஆட்சி மொழியாக தமிழ்', 'தமிழில் அர்ச்சனை', 'இருமொழிக் கொள்கை', 'இந்தித் திணிப்பு எதிர்ப்பு' என தமிழ் மீது மிகுந்த பற்றுடையது போல் காண்பித்துக் கொள்ளும் திமுக. தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் பொங்கல் தொகுப்பில் உள்ள பொருட்களை வட மாநிலங்களிலிருந்து கொள்முதல் செய்திருப்பதும், அந்தப் பொட்டலங்களில் இந்தி வார்த்தைகள் இடம் பெற்றிருப்பதும் கண்டனத்திற்குரியது.

முதல்வர் ஸ்டாலின் கூறுவதுபோல் தவறான, விசமத்தனமான கருத்துகளை யாரும் பரப்பியதாகத் தெரியவில்லை. தரமற்ற பொருட்கள், எடை குறைவு, பொருட்களின் எண்ணிக்கை குறைவு, துணிப்பை வழங்காமை என பல்வேறு உண்மை நிகழ்வுகளைத்தான் மக்கள் எடுத்துக் கூறினார்கள். அதற்கான வீடியோ ஆதாரமும் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. இந்தப் பொருளைச் சமைத்துச் சாப்பிட்டதில் சிலருக்கு ஒவ்வாமை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேற்கண்ட குறைகளில் துணிப்பை பற்றாக்குறை என்பதை அரசே ஒப்புக் கொண்டுவிட்டது.

'ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்' என்பதுபோல மக்களின் மற்ற குறைகளைத் தட்டிக்கழிக்க முடியாது. அரசு எந்தப் பொருள்களைக் கொள்முதல் செய்து விநியோகம் செய்கிறதோ அதைத்தான் நியாய விலைக் கடைகளில் பணிபுரியும் பணியாளர்கள் வழங்குகின்றனர். எனவே, அவர்களைக் குறைசொல்வதில் எவ்விதப் பயனும் இல்லை. இந்த அரசு பொறுப்பேற்றவுடன், 4,000 ரூபாய் ரொக்கத்துடன் கூடிய 14 அத்தியாவசியப் பொருட்களை மக்களுக்கு வழங்கியது. அப்போது யாராவது குறை சொன்னார்களா என்றால் இல்லை. ஏனெனில், அப்போது குறையில்லை, இப்போது குறை இருக்கிறது.

அதைத்தான் சொல்கிறார்கள். இதிலே மற்றுமொரு குறை என்னவென்றால், பெரும்பாலான பொருட்கள் வட மாநிலங்களிலிருந்தும், அண்டை மாநிலமான கர்நாடகாவிலிருந்தும் தான் கொள்முதல் செய்யப்பட்டிருக்கின்றன. உதாரணமாக ஆட்டா மாவு கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள Surya Wheat Roller Flour Mills என்ற நிறுவனத்திடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு இருக்கிறது. இந்தப் பொட்டலத்தில் இந்தி, ஆங்கிலம், கன்னடம், தமிழ் ஆகிய மொழிகள் இடம் பெற்றுள்ளன. ரவை உத்தரப்பிரதேச மாநிலம் ரைபரேலியில் உள்ள Kanha Flour Mills Pvt. Ltd. என்ற நிறுவனத்திடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு இருக்கிறது. இதில் இந்தி மற்றும் ஆங்கில மொழிகள் மட்டும் இடம் பெற்றுள்ளன. தமிழில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

மிளகாய்த் தூள் மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரிலுள்ள Suruchi Spices Pvt. Ltd. என்ற நிறுவனத்திடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்தி மொழியும், ஆங்கில மொழியும் தான் இடம் பெற்றுள்ளது. தமிழ் வார்த்தையே இல்லை. உப்பு உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள RKBK Ltd. என்ற நிறுவனத்திடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதிலும் தமிழ் வார்த்தை தென்படவில்லை. மாறாக ஆங்கிலமும், இந்தியும் இடம் பெற்று இருக்கின்றன. மல்லித்தூள், கடலை பருப்பு மற்றும் மஞ்சள் தூள் ஆகியவை கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள BMI Food Products நிறுவனத்திடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

கடுகு குஜராத் மாநிலம் உஞ்சாவிலிருந்து கொள்முதல் செய்யப்பட்டு இருக்கிறது. பாதி பொட்டலங்கள் எங்கிருந்து கொள்முதல் செய்யப்பட்டது என்பதற்கான விவரம் இல்லை. நெடுஞ்சாலைகளில் உள்ள மைல்கல்லில் இந்தியில் எழுதினால் இந்தித் திணிப்பு என்று கூறும் திமுக தமிழக மக்களின் வரிப் பணத்தின் மூலம் நிறைவேற்றப்படும் திட்டங்களுக்கான பொருட்களைப் பிற மாநிலங்களிலிருந்து கொள்முதல் செய்வதும், அந்தப் பொருட்களின் பெயர்கள் இந்தியில் எழுதப்பட்டு இருப்பதும் எந்த வகையில் நியாயம்?

இந்தித் திணிப்பை அரசே மேற்கொள்ளலாமா? அல்லது இந்தியை வரவேற்க திமுக முடிவு எடுத்துவிட்டதா? தமிழக அரசால் வழங்கப்படும் பொருட்களை உற்பத்தி செய்து விநியோகிக்கத் தமிழ்நாட்டில் நிறுவனங்களே இல்லையா? இது தமிழ் மொழியையும், தமிழர்களையும் அவமதிக்கும் செயல் இல்லையா? எந்த அடிப்படையில் பிற மாநிலத்தவர்களுக்குக் கொடுக்கப்பட்டது? தமிழ்நாட்டு நிறுவனங்கள் லாபம் அடையக்கூடாதா? பொருட்களுடன் துணிப்பை ஏன் வழங்கப்படவில்லை? இவற்றிற்கான பணம் கொடுக்கப்பட்டுவிட்டதா? கொடுக்கப்பட்டுவிட்டது என்றால் எவ்வளவு கொடுக்கப்பட்டது? மீதி எவ்வளவு கொடுக்கப்பட வேண்டும்? என்றெல்லாம் நான் கேட்கவில்லை, தமிழக மக்கள் கேட்கிறார்கள்.

பொங்கல் பரிசை வழங்கியதை விட ரொக்கமாக 1,000 ரூபாய் கொடுக்கப்பட்டிருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும் என்று மக்கள் கூற ஆரம்பித்துவிட்டார்கள். இந்தத் திட்டத்தினால் தமிழ்நாட்டு மக்களுக்கு எவ்விதப் பயனும் இல்லை. பயனாளிகள் யார் என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம். மொத்தத்தில், இந்தத் திட்டம் படுதோல்வி அடைந்து இருக்கிறது என்பதுதான் உண்மை. மேலும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் வேட்டி சேலை எல்லோருக்கும் கிடைப்பதில்லை என்ற புகாரும் ஆங்காங்கே எழுந்துள்ளது.

பொங்கல் தொகுப்பு குறித்த மக்களின் புகார்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய கடமையும், பொறுப்பும் முதல்வர் ஸ்டாலினுக்கு உண்டு. எனவே, முதல்வர் இதில் உடனடியாகத் தலையிட்டு, இந்தத் திட்டத்தில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்தும், குளறுபடிகள் குறித்தும் விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

அதுபோன்று சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, 21 பொருட்கள் என்று அறிவித்தார்கள். ஆனால் மக்களுக்கு 15 முதல் 18 பொருட்கள் மட்டுமே கிடைக்கிறது. அதோடு பொருட்களை கொண்டு செல்வதற்கு பை கொடுப்பதில்லை.. கட்டப் பையை எடுத்து வாருங்கள் என்று நியாய விலை கடைகளில் எழுதி வைத்திருக்கிறார்கள். பொங்கல் தொகுப்பில் வழங்கப்படும் வெல்லம் தரமானதாக இல்லை.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்த போது, இரண்டரை டன் வெல்லம் தரமானது இல்லை என வெல்லம் வழங்கப்படுவதை ரத்து செய்திருக்கிறார்கள். இதுபோன்ற தரமற்ற பொருளை, பொங்கல் தொகுப்பு என்ற பெயரில் வழங்குகின்றனர்” என்று குற்றம்சாட்டினார்.

-பிரியா

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக காத்திருக்கும் விஜய்

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக காத்திருக்கும் விஜய்

பொறியாளரை தாக்கிய திமுக எம்எல்ஏ: கட்சிப் பதவி பறிப்பு!

6 நிமிட வாசிப்பு

பொறியாளரை தாக்கிய திமுக எம்எல்ஏ: கட்சிப் பதவி பறிப்பு!

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன் திடீர் முடிவு! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன்  திடீர் முடிவு!

செவ்வாய் 11 ஜன 2022