மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 11 ஜன 2022

பொங்கலுக்கு பிறகு முழு ஊரடங்கா?: அமைச்சர் தகவல்!

பொங்கலுக்கு பிறகு முழு ஊரடங்கா?: அமைச்சர் தகவல்!

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகைக்கு பிறகு தொடர்ச்சியாக முழு ஊரடங்கு இருக்க வாய்ப்பில்லை என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிமணியன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இன்று(ஜனவரி 11) சென்னை அடையாறில் உள்ள கொரோனா ஆலோசனை மையத்தை பார்வையிட்ட பின்பு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், ”கொரோனா தொற்று வேகமாக பரவி கொண்டிருக்கிறது. பெருந்தொற்று உலகம் முழுவதும் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. தமிழ்நாடு உள்பட இந்தியாவில் டெல்டாவும், ஒமிக்ரானும் இணைந்து வேகமாக பரவி வருகிறது. தமிழ்நாட்டில் தினந்தோறும் இரண்டாயிரம் என்ற அளவில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. பாதிக்கப்படுபவர்களில் பெரும்பாலானவர்களுக்கு மிதமான அறிகுறியே இருப்பதால் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்படுகின்றனர். வீடுகளிலேயே தனிமைப்படுத்தி கொண்டு உள்ளவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். சென்னையில் 15 மண்டலங்களில் மருத்துவர்கள் தினமும் போன் செய்து தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களுக்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்கி வருகின்றனர். இன்று திருவான்மியூரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு பத்து பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டோம். அவர்களுக்கு பல்ஸ் ஆக்சி மீட்டர் தரப்பட்டுள்ளது. வீட்டு தனிமைப்படுத்துதலில் உள்ளவர்கள் உடல் வெப்பநிலையை கண்காணிக்க அனைவருக்கும் பல்ஸ் ஆக்சி மீட்டர் வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த அலையின்போது சிஎஸ்ஆர் மூலம் பெறப்பட்ட உதவிகள் பெரியது. ஆனால் இந்த அலையில் அதிகமான ஆக்சிஜன் மற்றும் ஐசியூ படுக்கைகள் தேவைப்படவில்லை. தொற்று உறுதி செய்யப்படுபவர்கள் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்தே குணமடைந்துவிடுகின்றனர். அதனால் சிஎஸ்ஆர் ஆக்டிவிட்டிவ் மூலம் யாராவது அரசுக்கு உதவிக்கு செய்ய நினைத்தால், பல்ஸ் ஆக்சி மீட்டர் வாங்கி தரும்படி கேட்டுக் கொள்கிறோம்.

சென்னையில் தினசரி பாதிப்பு 6 ஆயிரமாக உள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 ஆயிரமாக உள்ளது. அதில் 21,987 பேர் வீட்டு தனிமையில் உள்ளனர். இவர்களை கண்காணிப்பதற்காக வட்டத்திற்கு ஐந்து பேர் என்ற அளவில் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்திக் கொள்ள வசதி இல்லாதவர்கள் கொரோனா சிகிச்சை மையங்களுக்கு வரலாம்” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், நாளை ஜனவரி 12ஆம்தேதி பிரதமர் நரேந்திர மோடியும், முதல்வர் மு.க.ஸ்டாலினும் தமிழ்நாட்டில் 11 மருத்துவ கல்லூரியை திறந்து வைக்க உள்ளனர். டெல்லியில் இருந்தபடியே பிரதமர் காணொலி வாயிலாக திறந்து வைக்கிறார்” என்று கூறினார்.

ஒமிக்ரான் பற்றி பேசிய அவர், “ தமிழ்நாட்டில் 100 பேருக்கு கொரோனா உறுதியாகும் பட்சத்தில் 85 பேருக்கு ஒமிக்ரான் உறுதி செய்யப்படுகிறது. ஒமிக்ரான் பரிசோதனையின் முடிவுகள் வருவதற்குள் தொற்று பாதித்தோர் குணமடைந்து விடுகின்றனர். அதனால் தற்போது மரபணு பரிசோதனைக்கு மாதிரிகள் அனுப்பி வைக்கப்படுவதை நிறுத்திவிட்டோம்.

மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட கூடாது என்பதில் முதல்வர் உறுதியாக இருப்பதால்தான், ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரமாக ஆலோசித்து முடிவு எடுக்கிறார். மக்கள் ஒத்துழைப்பு இருந்தால், கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டிய அவசியம் வராது. பொங்கலுக்கு பிறகு தொடர்ச்சியாக முழு ஊரடங்கு இருக்க வாய்ப்பு இல்லை” என்று கூறினார்.

தடுப்பூசி முகாம் குறித்து பேசிய அவர்,” பொங்கல் பண்டிகைக்கு அடுத்த நாள் ஜனவரி 15ஆம் தேதி சனிக்கிழமை என்பதால் இந்த வாரம் மெகா தடுப்பூசியை நடத்தாமல் அடுத்த வாரம் சனிக்கிழமை நடத்தலாமா என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். ஆலோசித்த பிறகு முடிவு அறிவிக்கப்படும் ” என்று கூறினார்.

-வினிதா

டிஜிட்டல் திண்ணை: விலைபோய் விடாதீர்கள்-கமல் உருக்கம்!

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  விலைபோய் விடாதீர்கள்-கமல்  உருக்கம்!

முருகன் மேல் பாசம் உண்டு: மணமேடையில் ஸ்டாலின் சிலேடை!

12 நிமிட வாசிப்பு

முருகன் மேல் பாசம் உண்டு: மணமேடையில் ஸ்டாலின் சிலேடை!

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

செவ்வாய் 11 ஜன 2022