மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 11 ஜன 2022

பொங்கல் சிறப்பு பேருந்துகளில் எத்தனை பேர் பயணிக்கலாம்?

பொங்கல் சிறப்பு பேருந்துகளில் எத்தனை பேர் பயணிக்கலாம்?

பொங்கல் பண்டிகையையொட்டி போகி, தைப்பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என நான்கு நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும். இதனால் சென்னை போன்ற வெளியூர்களில் வசிப்பவர்கள், குடும்பத்துடன் தங்களின் சொந்த ஊர்களுக்குச் செல்வர். அப்படி சொந்த ஊர்களுக்குச் செல்பவர்களின் வசதிக்காக அரசு சார்பில் ஆண்டுதோறும் பேருந்துகள் இயக்கப்படும். இந்தாண்டும் சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டன.

ஆனால், இந்தாண்டு கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அரசு சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அதனால் பொங்கலுக்கு அறிவிக்கப்பட்ட பேருந்துகள் திட்டமிட்டபடி இயங்குமா என்ற சந்தேகம் இருந்தது.

இந்த சந்தேகத்தை தீர்க்கும் வகையில், இன்று முதல் பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் நேற்று (ஜனவரி 10) மாலை அறிவித்தது. அதைத் தொடர்ந்து பொங்கல் பேருந்துகளில் எத்தனை பேர் பயணிக்க வேண்டும் என்பது குறித்தான கட்டுப்பாடுகளையும் அரசு அறிவித்தது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று (ஜனவரி 11) முதல் சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2,100 பேருந்துகளுடன், 4,000 சிறப்பு பேருந்துகள் என மூன்று நாட்களுக்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 10,300 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து மேற்கண்ட மூன்று நாட்களுக்கு 6,468 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 16,768 பேருந்துகள் இயக்கப்படும்.

மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து செங்குன்றம் வழியாக பொன்னேரி, கும்மிடிப்பூண்டி மற்றும் ஊத்துக்கோட்டை செல்லும் பேருந்துகள் மற்றும் ஆந்திர மாநிலம் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

கே.கே.நகர் பேருந்து நிலையத்திலிருந்து ஈசிஆர் வழியாக புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

தாம்பரம் ரயில் நிலையப் பேருந்து நிறுத்தத்திலிருந்து திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் மற்றும் போளூர், சேத்துப்பட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாகச் செல்லும் பேருந்துகள் மற்றும் திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்து வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருத்தணி ஆகிய மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும்.

புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர் பேருந்து நிலையம், கோயம்பேடு மேற்குறிப்பிட்டுள்ள ஊர்களைத்தவிர, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு, ராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர், எர்ணாகுளம், திருவனந்தபுரம் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களுக்கு பேருந்து இயக்கப்படும். சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் மீண்டும் தங்கள் வேலை பார்க்கும் இடங்களுக்குத் திரும்புவதற்கும் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதைத் தவிர்த்து திருக்கழுக்குன்றம் - செங்கல்பட்டு அல்லது ஸ்ரீபெரும்புதூர் - செங்கல்பட்டு வழியாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பயணிகளின் நலன் கருதி, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்படும். பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்ள மற்றும் புகார் தெரிவிக்க பயணிகள் 94450 14450,94450 14436 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தால் 1800 425 6151, 044-2474 9002 என்ற கட்டணமில்லா எண்களில் புகார் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் ஜனவரி 31ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு அறிவிப்பில், பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் செல்லும் பொதுமக்கள் நலன் கருதி பொது பேருந்துகளில் அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் 75 சதவிகிதப் பயணிகள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

10 நிமிட வாசிப்பு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் ...

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் திட்டம்!

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

செவ்வாய் 11 ஜன 2022