மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 10 ஜன 2022

பிரதமர் பாதுகாப்பு: உச்ச நீதிமன்றம் அமைத்த புதிய குழு- விசாரணை முழு விவரம்!

பிரதமர் பாதுகாப்பு: உச்ச நீதிமன்றம் அமைத்த புதிய குழு-  விசாரணை முழு விவரம்!

பிரதமர் நரேந்திர மோடியின் சமீபத்திய பஞ்சாப் பயணத்தின் போது நடந்த பாதுகாப்பு குறைபாடு குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு குழுவை உச்ச நீதிமன்றம் இன்று (ஜனவரி 10) அமைத்து உத்தரவிட்டது. இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே பஞ்சாப் மாநில அரசும், ஒன்றிய அரசும் அமைத்த குழுக்கள் செயல்பட உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருக்கிறது.

பிரதமர் மோடியின் பஞ்சாப் பயணத்தின் போது நடந்ததாகக் கூறப்படும் பாதுகாப்பு மீறல் குறித்து நீதிமன்றக் கண்காணிப்பில் விசாரணை நடத்தக் கோரி மூத்த வழக்கறிஞர் மணீந்தர் சிங் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இம்மனுவை தலைமை நீதிபதி என்வி ரமணா, நீதிபதிகள் சூர்ய காந்த், ஹிமா கோஹ்லி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

இந்த வழக்கை ஜனவரி 7 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்றம், ” “பிரதமரின் பாதுகாப்பு என்ற முக்கியமான அம்சத்தைக் கருத்தில் கொண்டு பஞ்சாப் சண்டிகர் மாநில உயர் நீதிமன்றப் பதிவாளர் பஞ்சாப்பில் பிரதமரின் பயணம் பற்றிய ஆவணங்களை பாதுகாக்க வேண்டும். பஞ்சாப் காவல்துறை தலைமை இயக்குனர், பிரதமரின் பாதுகாப்பு அமைப்பான எஸ்பிஜி உயரதிகாரிகள், மத்திய, மாநில அரசு அதிகாரிகள் பஞ்சாப் உயர்நீதிமன்றப் பதிவாளருக்கு ஒத்துழைக்க வேண்டும். பிரதமரின் பஞ்சாப் பயணம் பற்றிய அனைத்து ஆவணங்களும் அவரிடம் பாதுகாப்பான முறையில் இருக்க வேண்டும் இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றப் பதிவாளருக்கு உதவும் அதிகாரிகளாக பஞ்சாப் டிஜிபியையும், என்.ஐ.ஏ.வின் ஒரு உயரதிகாரியையும் பொறுப்பாளர்களாக இந்த நீதிமன்றம் நியமிக்கிறது.

பிரதமரின் பஞ்சாப் பயணம் பற்றி மத்திய, மாநில அரசுகள் அமைத்த ஆணையங்கள் இந்த வழக்கு விசாரணைக்கு வரும் ஜனவரி 10 ஆம் தேதி வரை தங்கள் செயல்பாடுகளை நிறுத்தி வைக்க வேண்டும். இது இந்த உத்தரவில் இடம்பெறாது. ஆனால் ஒரு புரிதலின் அடிப்படையில் சொல்கிறோம் ” என்று தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் வழக்கு இன்று (ஜனவரி 10 ) விசாரணைக்கு வந்தபோது... பஞ்சாப் மாநில அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் டி.எஸ்.பட்வாலியா, பிரதமரின் பயண விவரங்களை உயர் நீதிமன்றப் பதிவாளரிடம் பதிவு செய்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

மேலும், “ஜனவரி 7ஆம் தேதி உச்ச நீதிமன்றம் மாநில, ஒன்றிய அரசுகள் அமைத்த குழுக்கள் 10ஆம் தேதி வரை செயல்படக் கூடாது என்று கூறியிருந்தது. ஆனால் அதை மீறி உள்துறை அமைச்சகம் அமைத்த குழு மாநிலத்திலுள்ள காவல்துறை அதிகாரிகள் மற்றும் பிற அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியது. உச்ச நீதிமன்றமே செயல்பாடுகளை நிறுத்திவைக்குமாறு கூறியபிறகும் இந்த ஷோ காஸ் நோட்டீஸ் எங்கிருந்து வந்தது? எனவே ஒன்றிய அரசின் குழுவிடம் நீதி கிடைக்காது. அவர்கள் நியாயமான விசாரணையை மேற்கொள்ள மாட்டார்கள். எனவே சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்” என்று வாதாடினார்.

ஒன்றிய அரசின் வழக்கறிஞர் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “பிரதமரின் பாதுகாப்புக்குரிய ப்ளூ புக் விதிகளை மாநில அதிகாரிகள் அமல்படுத்தவில்லை. போராட்டப் பகுதியிலிருந்து 100 மீ தொலைவில் உள்ள இடத்தைப் பிரதமரின் கான்வாய் அடைந்திருக்கிறது. இதுகுறித்து கான்வாய்க்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இது முழுமையான உளவுத்துறை தோல்வி. மாநில அரசு பஞ்சாப்பின் காவல்துறை அதிகாரிகளை பாதுகாக்க முயற்சிக்கிறது. எனவே ஒன்றிய அரசின் குழுதான் விசாரணைசெய்ய வேண்டும்” என்று தன் வாதங்களை முன் வைத்தார்.

அப்போது நீதிபதி சூரிய காந்த், ஒன்றிய அரசின் வழக்கறிஞர் துஷார் மேத்தாவைப் பார்த்து, “குழுவை அமைப்பதன் மூலம், SPG சட்டத்தின் மீறல் உள்ளதா என்று விசாரிக்க முயல்கிறீர்கள். பின்னர் நீங்கள் மாநில தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை இயக்குநர் ஆகியோரைக் குற்றவாளிகளாகக் கருதுகிறீர்கள். அவர்கள் குற்றவாளிகளா?. அவர்கள் இந்த வழக்கில் ஒரு தரப்பினராக இருக்கிறார்கள். பஞ்சாப் அரசும் மனுதாரரும் நியாயமான விசாரணையை விரும்புகிறார்கள், நீங்கள் நியாயமான விசாரணைக்கு எதிராக இருக்க முடியாது”என்றார்.

நீதிபதி கோஹ்லி கூறும்போது, “நீங்கள் (ஒன்றிய அரசு) ஷோகாஸ் நோட்டீஸ் வழங்கியது, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு முன்பாக நடந்திருக்கலாம். ஆனால் இரு விசாரணை குழுக்களையும் 10 ஆம் தேதி வரை செயல்படவேண்டாம் என்று உச்ச நீதிமன்றம் கூறிய பிறகும்... 24 மணி நேரத்தில் பதிலளிக்கும்படி பஞ்சாப் அதிகாரிகளிடம் கேட்டிருப்பதை உச்ச நீதிமன்றம் எதிர்பார்க்கவில்லை” என்றார்.

அப்போது தலைமை நீதிபதி ரமணாவும் ஒன்றிய அரசின் வழக்கறிஞரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவை பார்த்து, “மாநில அரசு அதிகாரிகள் மீது நீங்கள் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க விரும்பினால், இந்த நீதிமன்றம் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டார்.

இவ்வாறு மூன்று நீதிபதிகளும் ஒன்றிய அரசைப் பார்த்து சரமாரியான கேள்விகளை எழுப்பினார்கள். அதற்கு பதிலளித்த சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா,

“பஞ்சாப் மாநில அரசு அதிகாரிகளுக்கு ஒன்றிய அரசு அனுப்பிய ஷோகாஸ் நோட்டீஸ் முன்கூட்டியே எடுக்கப்பட்ட முடிவை நோக்கி செல்வதாக நீதிமன்றம் கருதினால், ஒன்றிய அரசின் விசாரணைக் குழு இந்த பிரச்சினையை ஆராய்ந்து நீதிமன்றத்திடம் தெரிவிக்கும். அதுவரை அந்த ஷோகாஸ் நோட்டீஸ் மீது நடவடிக்கை ஏதும் எடுக்க மாட்டோம்”என்று தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட பஞ்சாப் மாநில அரசின் வழக்கறிஞர் பட்வாலியா, “ஒன்றிய அரசின் கமிட்டியானது உள்துறை அமைச்சகத்தின் தலைமையிலானது என்பது எல்லாருக்கும் தெரியும். உள்துறை அமைச்சகமோ ஏற்கனவே பஞ்சாப் அரசை இந்த விவகாரத்தில் குற்ற வாளியாகவே கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த விசாரணை குழு எப்படி பாரபட்சமின்றி செயல்படும்?” என்று கேள்வியைத் தொடுத்தார்.

இந்த வாதங்களுக்குப் பிறகு நீதிபதிகள் தங்களுக்குள் சில நிமிடங்கள் விவாதித்தனர். பிறகு, “பிரதமரின் பஞ்சாப் பயணத்தில் பாதுகாப்புக் குறைபாடுகள் பற்றி விசாரிக்க முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக ஒன்றிய, மாநில அரசுகளின் விசாரணைக் குழுக்களின் செயல்பாடுகளுக்கு இடைக்காலத் தடை விதிக்கிறோம். விரிவான உத்தரவு விரைவில் பிறப்பிக்கப்படும்” என்று தீர்ப்பளித்தனர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட நீதிபதிகள்.

-வேந்தன்

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக காத்திருக்கும் விஜய்

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக காத்திருக்கும் விஜய்

பொறியாளரை தாக்கிய திமுக எம்எல்ஏ: கட்சிப் பதவி பறிப்பு!

6 நிமிட வாசிப்பு

பொறியாளரை தாக்கிய திமுக எம்எல்ஏ: கட்சிப் பதவி பறிப்பு!

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன் திடீர் முடிவு! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன்  திடீர் முடிவு!

திங்கள் 10 ஜன 2022