மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 10 ஜன 2022

டாஸ்மாக் தொழிலாளர்கள் சட்ட அனாதைகளா?

டாஸ்மாக்  தொழிலாளர்கள் சட்ட அனாதைகளா?

கொரோனா மூன்றாவது அலை தொடங்கிவிட்டது என்ற நிலையில் தமிழக அரசு மதுக்கடைகளை மூடாமல் வைத்திருப்பது ஏன் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இதுகுறித்து ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ ஜனவரி 5ஆம் தேதி 4, 862 ஆக இருந்த கொரோனா தொற்று ஜனவரி 8 ஆம் தேதி 10.978 ஆக உயர்ந்துள்ளது. இந்த அளவுக்கு தொற்று என்ணிக்கை உயர காரணம் தமிழகத்தில் மதுக்கடைகள் திறந்திருப்பதுதான்.

7-5-2020 அன்று அதிமுக ஆட்சிக் காலத்தில் கொரோனா தொற்று 580 என்றிருந்த நிலையில் அப்போது மதுக்கடைகள் திறப்பதை எதிர்த்து அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும் இப்போதைய முதல்வருமான ஸ்டாலின் மதுக்கடைகளை மூட கறுப்புக் கொடி ஆர்பாட்டம் நடத்தினார்.

ஒருபக்கம் பள்ளி, கல்லூரிகளை மூடவும் வழிபாட்டுத் தலங்களை மூன்று நாட்கள் மூடவும் உத்தரவிட்டுள்ள தமிழக அரசு மறுபக்கம் மதுக்கடைகளை திறந்து வைப்பது கொரோனாவை கட்டுப்படுத்த உதவாது. கடந்த ஐந்து நாட்களில் எடுக்கப்பட்ட பரிசோதனைகளை பார்த்தால் தற்போதுள்ள எட்டு சதவிகித பாதிப்பு இன்னும் ஒரு வாரத்தில் இரட்டிப்பாக வாய்ப்புள்ளது. பிப்ரவரி மாதத்தில் உச்சத்தைத் தொடும் வாய்ப்பும் உள்ளது. எனவே மதுக்கடைகளை மூடுவது உத்தமமாக இருக்கும்.

கொரோனா பரவலின் தாக்கம் 5% க்கும் கீழே செல்லும் வரையாவது மதுக்கடைகளை மூடவேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

கடந்த வாரம் டாஸ்மாக் தொழிலாளர்களுக்காக மாநிலம் முழுதும் போராட்டங்களை நடத்திய சிஐடியு தொழிற்சங்கத்தினரிடம் பேசினோம்.

“டாஸ்மாக் மதுபானக் கடைகளால் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு 33 ஆயிரம் கோடி வருமானம் வருவதாக சொல்கிறார்கள். இந்த வருமானத்தால்தான் அரசின் பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன என்றும் சொல்கிறார்க்ள். டாஸ்மாக்கில் 26ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள். இவர்கள் அரசு ஊழியர்களா? இல்லை டாஸ்மாக் என்ற நிறுவனத்தின் ஊழியர்களா? இதுவே எங்களுக்கு குழப்பமாக இருக்கிறது.

கடைகள், நிறுவனங்கள் சட்டத்துக்குள் டாஸ்மாக் தொழிலாளர்கள் வருவதாக சிலர் சொல்கிறார்கள். ஆனால் அந்த சட்டத்தில் இருந்து டாஸ்மாக் தொழிலாளர்களுக்கு விதிவிலக்கு வாங்கிவிட்டதாக டாஸ்மாக் நிர்வாகம் கூறுகிறது. அடுத்து தேசிய மற்றும் பண்டிகை விடுமுறை சட்டம் என்று ஒன்று இருக்கிறது. இந்த சட்டத்தில் இருந்தும் டாஸ்மாக் தொழிலாளர்களுக்கு விதிவிலக்கு வாங்கிவிட்டதாக சொல்கிறார்கள். அப்படியென்றால் நாங்கள் அரசு ஊழியர்கள் இல்லை. அதேநேரம் நிறுவன சட்டங்களின்படி டாஸ்மாக் ஊழியர்களாகவும் இல்லை.

எந்த நிறுவனமாக இருந்தாலும் நிலையாணை சட்டம் (ஸ்டேண்டிங் ஆர்டர்) சட்டம் என்று உண்டு. இந்த சட்டம் இல்லாமல் ஒரு நிறுவனத்தை நடத்தவே முடியாது. அரசு ஊழியர்கள், போலீஸார், தனியார் ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்கள் இப்படி எல்லாருக்கும் நிலையாணை சட்டம் உண்டு. ஆனால் டாஸ்மாக் தொழிலாளர்களுக்கு நிலையாணை சட்டம் பொருந்தாது என்று சொல்கிறார்கள்.

அப்படி என்றால் இந்த டாஸ்மாக் நிறுவனம் ஏன் நடக்கிறது, யாரால் நடத்தப்படுகிறது, எப்படி நடத்தப்படுகிறது? இந்த நிறுவனத்துக்கு மட்டும் எவ்வித தொழிலாளர் சட்டமும் பொருந்தாது என்றால் நாங்களெல்லாம் யார்?

இப்படி எந்த சட்டத்தின்படியும் பாதுகாப்பு இல்லாமல் இருப்பதால்தான் டாஸ்மாக்கை நினைத்தால் திறக்கவும், நினைத்தால் மூடவும் அரசால் முடிகிறது. ஏற்கனவே இருந்த ஆளுங்கட்சி அதிமுகவும் இதுபற்றியெல்லாம் அலட்டிக் கொள்ளவில்லை. இப்போதும் இருக்கும் திமுகவும் இதுபற்றியெல்லாம் கண்டுகொள்ளவில்லை.

இத்தகைய சட்ட பாதுகாப்பு இல்லாததால்தான் டாஸ்மாக் மதுக்கடை ஊழியர்களுக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் கொரோனா காலத்திலும் ஊரடங்கு காலத்திலும் அரசின் பொது உத்தரவு பொருந்தாமல் சட்ட அனாதைகளாக அல்லாடிக்கொண்டிருக்கிறோம்” என்கிறார்கள்.

-ஆரா

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

10 நிமிட வாசிப்பு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் ...

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் திட்டம்!

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

திங்கள் 10 ஜன 2022