மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 9 ஜன 2022

உதயநிதி பெயரில் மோசடி: கைதானவரின் வாக்குமூலம்!

உதயநிதி பெயரில் மோசடி: கைதானவரின் வாக்குமூலம்!

ஆளும் கட்சி, அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய விஐபிகளுடன் தொடர்பில் இருப்பதாகக் கூறி சிலர் பண மோசடி செய்வது தமிழகத்தில் தொடர்கதையாகி வருகிறது. அதுபோன்று தான் சேப்பாக்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ.உதயநிதியின் பெயரைச் சொல்லி, திருப்பத்தூரைச் சேர்ந்த பெண்ணிடம் ஒருவர் பண மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செவ்வாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் காசி மகாராஜன். இவரது மகள் தேன்மொழி. வயது 33.

2017 ஆம் ஆண்டு சென்னையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் கேஷியராக வேலைக்குச் சேர்ந்திருக்கிறார். அந்த சமயத்தில் அதே ஹோட்டலில் வேலை செய்த ராஜேஷ் என்பவர் தேன்மொழிக்கு அறிமுகமாகியிருக்கிறார்.

இதையடுத்து தேன்மொழி சொந்த ஊருக்கே வந்துவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழலில் 2018ஆம் ஆண்டு ஒருமுறை தேன்மொழியை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய ராஜேஷ், "நானும் வேலையிலிருந்து நின்று விட்டேன். தற்போது உதயநிதி ஸ்டாலினிடம் உதவியாளராக பணியில் சேர்ந்து இருக்கிறேன். தலைமைச் செயலகத்தில் வேலை வாங்கி தருகிறேன்" என்று பேசியிருக்கிறார்.

அவரது பேச்சால் வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் தேன்மொழி, ராஜேஷிடம் சுமார் ரூ.4.5 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார்.

மூன்று ஆண்டுகள் கடந்தும் வேலை வாங்கித் தராமல் ஏமாற்றி வந்த ராஜேஷ், தற்போது திமுக ஆட்சி அமைந்து உள்ள நிலையில் நிச்சயமாக வேலை வாங்கி தருவதாகவும் கூறி தொடர்ந்து தேன்மொழியை நம்பவைத்து வந்துள்ளார்.

அதுபோன்று தேன்மொழி மூலம் மேலும் சிலரிடமும் வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி பணத்தைப் பெற்று ஏமாற்றியுள்ளார் ராஜேஷ். பணத்தை கொடுத்தவர்கள் தேன்மொழிக்கு நெருக்கடி கொடுக்க, திருப்பத்தூர் எஸ்பி அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இந்தப் புகார் கந்திலி காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. கந்திலி காவல் நிலைய போலீசார் தேன்மொழியிடம் விசாரணை நடத்திய நிலையில் ராஜேஷிடம் விசாரணை நடத்துவதற்காக அவரை காவல் நிலையத்துக்கு அழைத்தனர். ஆனால் அவர் விசாரணைக்கு வர மறுத்துள்ளார்.

அதே சமயத்தில் ராஜேஷ் தேன்மொழிக்குக் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அதுதொடர்பான ஆடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது. அதில் தேன்மொழியிடம் பேசும் ராஜேஷ், நான் உன்னிடம் மறைத்து ஏதாவது செய்திருந்தால் பரவாயில்லை. இதுவரை உன்னிடம் உண்மையாகத் தான் இருக்கிறேன். கம்ப்ளைன்ட் யார் சார், கொடுத்திருக்கிறார்கள் என்று கேட்டதில் அழுத்தம் திருத்தமாகத் தேன்மொழி தான் கொடுத்திருக்கிறார் என்று சொல்கிறார்கள். இனி உன் வாழ்க்கையைப் பார்த்துக் கொள். இதற்குமேல் நான் விளையாட ஆரம்பிக்கிறேன். கட்சி மூலமாகவோ, என்னுடைய சோர்ஸ் மூலமாகவோ ஆரம்பிக்கிறேன். ஏன் இப்படி செய்து விட்டீர்கள் என்று என்னிடம் இனி கேட்காதே. இதற்குமேல் ஒரு ரூபாய் கூட என்னால் யாருக்கும் தர முடியாது. எந்தெந்த ஸ்டேஷனில் கம்ப்ளைன்ட் கொடுத்து இருக்கிறார்களோ அதை நான் என் கட்சி மூலமாக பார்த்துக்கொள்கிறேன்.

நான் உதயநிதியின் பிஏ ...அதை வைத்து நான் பார்த்துக் கொள்கிறேன். பணம் கொடுத்தவர்களைத் திங்கள்கிழமை பீச் அருகே வர சொல். திங்கள்கிழமை முடிக்கிறேன். திங்கள் கிழமை அழைப்பதற்கு உனக்குத் திராணி இருக்கிறதா. அத்தனை பேரையும் வெட்டுகிறேனோ, குத்துகிறேனோ... நீ அழைத்து வா நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று மிரட்டும் தொனியில் பேசுகிறார்.

இந்த சூழலில் சென்னையில் பதுங்கி இருந்த ராஜேஷை நேற்று இரவு டி.ஐ.ஜி. ஏ.ஜி பாபு உத்தரவின் பேரில் போலீசார் கைது செய்தனர். அவரது தந்தை கருணாமூர்த்தி என்பதும் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் ராஜேஷிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தையும் போலீசார்

இன்று வெளியிட்டுள்ளனர், "என் பெயர் ராஜேஷ். பள்ளிக்கரணையில் வசிக்கிறேன். ஒரு ஸ்வீட் கடைக்கு சொந்தமான ஓஎம்ஆர், நங்கநல்லூரில் உள்ள கிளைகளில் மேனேஜராக இருக்கிறேன்.

இதற்கு முன்னதாக நான் வேறொரு நிறுவனத்தில் கேஷியராக இருந்தபோது, வேலை வாங்கி தருவதாகக் கூறி தேன்மொழியிடம் நான்கரை லட்சம் ரூபாய் வாங்கினேன். அந்தப் பணத்தைத் திருப்பிக் கொடுக்காததால் கந்திலி காவல் நிலையத்தில் அவர் புகார் கொடுத்தார்.

தேன்மொழியும் அவருடைய அம்மாவும் திரும்பத் திரும்ப என்னிடம் பணம் கேட்டதால், திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினிடம் உதவியாளராக இருக்கிறேன் என்று பொய் கூறி ஏமாற்றினேன். ஆனால் அவருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை அது போன்று எந்த கட்சியிலும் நான் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ராஜேஷ் மீது மோசடி, ஆள் மாறாட்டம், மிரட்டல் விடுத்தது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்துள்ளனர்.

அதுபோன்று போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், " சட்டவிதிகளை மீறிக் குற்றச் செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் அந்த தகவலைச் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் தெரிவிக்கலாம். மேலும் காவல் கண்காணிப்பாளர் அலுவலக காவல் உதவி எண் 9442992526 என்ற எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-பிரியா

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

பிரதமர் பேச்சில் தடுமாற்றம் ஏன்? உண்மை இதோ...

6 நிமிட வாசிப்பு

பிரதமர் பேச்சில் தடுமாற்றம் ஏன்?   உண்மை இதோ...

ஞாயிறு 9 ஜன 2022