மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 9 ஜன 2022

டிஜிட்டல் திண்ணை: ஓபிஎஸ் அணியில் வேலுமணி: அதிர்ச்சியில் எடப்பாடி

டிஜிட்டல் திண்ணை: ஓபிஎஸ் அணியில் வேலுமணி:  அதிர்ச்சியில் எடப்பாடி

வைஃபை ஆன் செய்ததும், பொலபொலவென குட்மார்னிங் மெசேஜ்கள் விழுந்தன. அதில் ஒரு செய்தி மட்டும் தனித்துத் தெரிந்தது. மெசஞ்சர் அனுப்பிய அந்த செய்தியில், ‘கடந்த எடப்பாடி ஆட்சியை முழு பதவிக் காலமும் நிலைநிறுத்தியதில் முக்கியப் பங்கு வகித்தவர் முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி. அவருக்கும் எடப்பாடிக்கும் இப்போது ஏதோ உரசல் என்று தகவல்’ என்று இருந்தது.

மெசஞ்சர் தகவலைப் பற்றிக் கேட்டதும் வாட்ஸ் அப், ‘சில நிமிடங்களில் முழு தகவலை டெக்ஸ்ட் செய்கிறேன்’ என்று ஒரு ஸ்மைலியை போட்டது. கொஞ்ச நேரத்தில் மெசேஜ் வந்து விழுந்தது.

“கடந்த 2017 முதல் 2021 வரையிலான எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த வேலுமணிதான் எல்லா துறைகளுக்குமே அமைச்சராக இருந்தார். ஆட்சியைப் பற்றி விமர்சனம் செய்யும் சேனல்கள் எல்லாம் அரசு கேபிளில் பின் வரிசையில் தள்ளப்படும். இதுபற்றி அந்தத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனை கேட்டால், ‘துறை தாங்க நம்மளது. இதுக்கு வேலுமணி அண்ணனைதான் நீங்க பார்க்கணும்’ என்பார். இப்படி எந்தத்துறையாக இருந்தாலும் அந்தத் துறையின் அமைச்சருக்கு நிகராக வேலுமணியும் அந்தத் துறையில் ஆதிக்கம் செலுத்தினார்.

எடப்பாடி பழனிசாமி கோவை விமான நிலையத்தில் வந்து இறங்கும்போதும் சரி, புறப்படும்போதும் சரி...பேட்டி கொடுக்கிற நேரத்தில் எப்போது பேட்டியை ஆரம்பிக்க வேண்டும், எப்போது பேட்டியை முடிக்க வேண்டும் என்பதையெல்லாம் வேலுமணிதான் தீர்மானிப்பார். எடப்பாடி பேட்டி கொடுத்துக் கொண்டே இருக்கும்போது, ‘அண்ணே...போதும்’ என்று மெல்ல கையை இழுப்பார். அத்துடன் பேட்டியை எடப்பாடி முடித்துக் கொள்வார். இப்படி எடப்பாடியின் பேட்டியில் இருந்து டூட்டி முதல் வேலுமணியின் பங்கு அதிகமாகவே இருந்தது. கடந்த ஆட்சியில் எடப்பாடிக்கு ஓபிஎஸ் தொந்தரவு கொடுத்தபோதெல்லாம் அதை முன்னின்று பேசி முடித்தவர்களில் வேலுமணி முக்கியமானவர். துணை முதல்வர் ஓபிஎஸ் இருந்தாலும் நிழல் முதல்வர் என்று அழைக்கப்பட்டார் வேலுமணி. எடப்பாடி ஆட்சிக்கு இக்கட்டான நேரங்களில் அந்த ஆட்சியை நிலைநிறுத்தியவன் நான் என்று வேலுமணியே அவ்வப்போது சொல்லியிருக்கிறார்.

இந்த பின்னணியில் கடந்த 5 ஆம் தேதி முதல்7 ஆம் தேதி வரை நடந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் வேலுமணி, எடப்பாடியை விட ஓ.பன்னீரோடு நெருக்கமாக இருப்பதை உணரமுடிந்தது என்று அதிமுக எம்.எல்.ஏ.க்களே சொல்கிறார்கள். அதற்கு சில சம்பவங்களையும் காரணிகளாக வைக்கிறார்கள்.

ஜனவரி 5 ஆம் தேதி சட்டமன்றம் ஆளுநர் உரையோடு தொடங்கியது. ஆளுநர் உரையின்போதே எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுந்து, ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தார். அவரோடு எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர் செல்வம், கொறடா எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட அனைத்து அதிமுக உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர். சட்டமன்ற வளாகத்தில் எடப்பாடி திமுக அரசுக்கு எதிராக பேட்டி கொடுத்துவிட்டு சட்டமன்றத்தில் இருந்து புறப்பட்டார். அவர் பேட்டி கொடுக்கும்போது அருகே இருந்தே ஓபிஎஸ் வெளியே போகாமல் சட்டமன்றத்திலுள்ள தனது அறைக்குள் சென்றார். அவருடன் எஸ்.பி. வேலுமணி. ஆர்.பி. உதயகுமார், நத்தம் விசுவநாதன் ஆகியோர் மீண்டும் சட்டமன்ற வளாகத்திலுள்ள ஓபிஎஸ்சின் அறைக்குள் சென்றனர்.

சில மணித்துளிகளில் ஆளுநர் தன் உரையை முடித்துவிட்டார். அவருக்கு தேனீர் விருந்து அளிப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநரை மேல் தளத்துக்கு அழைத்துச் சென்றார். இதையறிந்து ஓபிஎஸ், வேலுமணி, உதயகுமார், நத்தம் ஆகியோர் மேலே சென்றனர். ஆனால் ஆளுநர் தேநீர் அருந்தும் அறைக்குள் இவர்கள் அழைக்கப்படாததால் பக்கத்து அறையில் காத்திருந்தனர். ஆளுநரை சட்டமன்றத்தில் சந்திக்க வேண்டும் என்பது ஓபிஎஸ், வேலுமணியின் விருப்பம்.

சில நிமிடங்களில் ஆளுநர் தேனீர் அருந்தி முடித்துவிட்டு வெளியே வந்து கீழேசெல்வதற்காக லிப்ட் அருகே சென்றுவிட்டார். இந்தத் தகவல் கிடைத்ததும் ஓபிஎஸ்சும், வேலுமணியும் வேகவேகமாக ஆளுநரை நோக்கி சென்றனர். இவர்களைப் பார்த்துவிட்ட ஆளுநர் புன்னகையோடு சில நொடிகள் காத்திருந்தார். லிப்ட்டுக்குள் சென்றுவிட்டாலும் கதவை மூடாமல் காத்திருந்து ஓபிஎஸ் கொடுத்த பொக்கேவை பெற்றுக்கொண்டார். பின் புறப்பட்டார்.

தான் புறப்பட்டுச் சென்றபிறகும் ஓபிஎஸ் சும் வேலுமணியும் தனியாக ஆலோசித்து ஆளுநரை சட்டமன்ற வளாகத்தில் சந்தித்த தகவல் எடப்பாடிக்கு கொஞ்ச நேரம் கழித்து கிடைத்திருக்கிறது. அதுமட்டுமல்ல, இந்த சட்டமன்றத் தொடர் முழுதும் ஓபிஎஸ் உடன் வேலுமணி நெருக்கம் காட்டியதும் வெளிப்படையாகவே எடப்பாடிக்கு தெரிந்திருக்கிறது.

இதையெல்லாம் பற்றி தனக்கு நெருக்கமான முன்னாள் அமைச்சர் தங்கமணியிடம் பகிர்ந்துகொண்டிருக்கிறார் எடப்பாடி. ‘எனக்கு ஈகுவலான அதிகாரத்தோடு இருந்தவர் வேலுமணி. இப்ப என்னடானா இப்படி பண்ணிக்கிட்டிருக்காரே’ என்று தங்கமணியிடம் குமுறியுள்ளார். இதுகுறித்து தங்கமணியும் வேலுமணியிடம் பேச்சுக் கொடுத்திருக்கிறார். ‘என்னங்க இது... நான் யாரோட போயிட்டேன். நம்ம ஒருங்கிணைப்பாளர்கிட்டதானே பேசிக்கிட்டிருந்தேன். நம்ம சொன்னதையெல்லாம் கேட்டிருந்தா இன்னிக்கு பல பிரச்சினை வந்திருக்காதுங்க. அவர் (எடப்பாடி) நம்ம சொன்னதை விட அந்த ஆத்தூர் காரர் (இளங்கோவன்) சொன்னதைதானே கேட்டாரு. என்னமோ போங்க’என்று தன் குமுறலைக் கொட்டியிருக்கிறார்.

எடப்பாடிக்கு எல்லாமுமாக இருந்த எஸ்.பி. வேலுமணி தற்போது எடப்பாடி மீது இருக்கும் சில வருத்தங்களால் ஓபிஎஸ்சுடன் முழு இணக்கமாகிவிட்டார். இதன் விளைவுகள் அதிமுகவில் அடுத்தடுத்து எதிரொலிக்கும்” என்ற மெசேஜை சென்ட் செய்துவிட்டு ப்ளூ டிக்குக்காக காத்திருக்காமல் சைன் அவுட் ஆனது வாட்ஸ் அப்.

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக காத்திருக்கும் விஜய்

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக காத்திருக்கும் விஜய்

பொறியாளரை தாக்கிய திமுக எம்எல்ஏ: கட்சிப் பதவி பறிப்பு!

6 நிமிட வாசிப்பு

பொறியாளரை தாக்கிய திமுக எம்எல்ஏ: கட்சிப் பதவி பறிப்பு!

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன் திடீர் முடிவு! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன்  திடீர் முடிவு!

ஞாயிறு 9 ஜன 2022