தளர்வுகளற்ற ஊரடங்கு – போலீசார் கண்காணிப்பு – வெறிச்சோடும் சாலைகள்!

politics

இந்தியாவில் கொரோனா ஜெட் வேகத்தில் பரவி வரும் நிலையில் இன்றைய நிலவரப்படி புதிதாக 1.59 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதனால் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 5,90,611ஆக உள்ளது. நாடு முழுவதும் 3,623 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்றைய தகவல்படி தமிழகத்தில் புதிதாக 10,978 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 40,260 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுபோன்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு ஊரடங்கில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்தது. கடந்த 6ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், ஞாயிற்றுக் கிழமையான இன்று முழு ஊரடங்கு அமலில் உள்ளது.

இதனால் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

**சென்னை**

முழு ஊரடங்கையொட்டி, சென்னையில் 300க்கும் மேற்பட்ட இடங்களில் போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 38 பெரிய பாலங்கள் நேற்று இரவில் மூடப்பட்டன. இன்று காலை முதலும் அதில் செல்ல முடியாதவாறு போலீசார் தடுப்புகளை அமைத்துள்ளனர். அதுபோன்று முக்கிய சாலைகளிலும் போலீசார் தடுப்பு அமைத்துள்ளனர்.

அண்ணா சாலை, வேப்பேரி ரித்தர்டன் சாலை, புரசைவாக்கம் டானா தெரு ஆகிய பகுதிகளில் பேரிகார்டுகள் மூலம் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. முன் களப்பணியாளர்களான மருத்துவர்கள், வருவாய்த் துறையினர், தூய்மை பணியாளர்கள் மற்றும் மருந்தகம், மருத்துவமனைக்கு செல்வோரின் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. அதுபோன்று ஊரடங்கு விதிகளை மீறி வெளியே வருபவர்களை போலீசார் அறிவுறுத்தி அனுப்புகின்றனர்.

இதனிடையே, இன்று காலை வெளியூர்களிலிருந்து சென்னை திரும்பிய பயணிகள் சென்ட்ரல், எழும்பூர், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் போதிய போக்குவரத்து வசதி இன்றி தவித்து நின்றதையும் காணமுடிந்தது.

இதுபோன்ற பயணிகள் பயண டிக்கெட்டுடன் வாடகை வாகனங்களில் செல்ல அனுமதி அளிக்கப்பட்டிருந்தாலும், சில ஆட்டோ ஓட்டுநர்கள் அவர்களை அழைத்துச் செல்ல முன்வரவில்லை. பயணிகளை அழைத்துச் செல்லும் போது போலீசாரிடம் டிக்கெட்டுகளை காண்பித்துச் சென்றுவிடலாம். ஆனால் மீண்டும் திரும்பி வரும் போது, போலீசார் டிக்கெட் கேட்பார்கள் என்பதால் சிலர் சவாரிக்கு வரவில்லை. மேலும் இந்த சூழ்நிலையை பயன்படுத்தி ஒரு சிலர் கூடுதல் கட்டணம் வசூலித்ததாகவும் பயணிகள் வேதனை தெரிவித்தனர்.

இதுபோன்ற காரணங்களால் பயணிகள் தங்களது உறவினர்களையும், நண்பர்களையும் வரவழைத்துச் சென்றதைக் காண முடிந்தது.

**கோவை**

கோவை முழுவதும் 2500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் அணை பூங்கா, குரங்கு நீர்வீழ்ச்சி, ஆனைமலை புலிகள் காப்பகம், வால்பாறை, கோவை குற்றாலம் ஆகிய சுற்றுலாத் தளங்கள் பொதுமக்கள் வருகையின்றி அமைதி பூங்காவாகக் காட்சியளிக்கிறது.

மேட்டுப்பாளையம் சாலை, அவினாசி சாலை, பொள்ளாச்சி சாலை உள்ளிட்ட சாலைகள் வாகன போக்குவரத்து குறைந்து வெறிச்சோடி காணப்படுகிறது.

**சேலம்**

சேலம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகம், ஐந்து சாலை, புதிய பேருந்து நிலையம், ஜங்சன் ஏற்காடு பிரதான சாலைகளில் ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. அதேசமயத்தில் அத்தியாவசிய தேவையின்றி வெளியே வரும் வாகனங்களை நிறுத்தி போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர். மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதுபோன்று மாநகரில் உள்ள முக்கிய பாலங்கள் மூடப்பட்டுள்ளது.

**நெல்லை**

திருநெல்வேலி மாவட்டத்தில் நெல்லையப்பர் கோயில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முழு ஊரடங்கு காரணத்தால் பக்தர்கள் இன்றி கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது, மாவட்டத்தில் நகரப்பகுதிகளில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ள நிலையில், புதிய பேருந்து நிலையம், சந்திப்பு பேருந்து நிலையம், நகரம் ரத வீதிகள், திருநெல்வேலி சந்திப்பு, பாளையங்கோட்டை தெற்கு கடைவீதி, மேலப்பாளையம் ஆகிய பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

20க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை சாவடிகளை அமைத்து மாநகர காவல் துணை ஆணையர்கள் சுரேஷ்குமார், டி.பி. சுரேஷ்குமார் ஆகியோர் தலைமையில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

**ஈரோடு**

ஈரோட்டில் ஜவுளி சந்தை, வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளதால் ஈரோட்டின் அனைத்து வீதிகளும் வெறிச்சோடி காணப்படுகிறது. பத்திரிகைகளுடன் திருமணத்துக்குச் செல்வோர்கள், மருந்தகம் மற்றும் மருத்துவமனைக்குச் செல்வோர்களைத் தவிர மற்றவர்களை போலீசார் எச்சரித்து அனுப்புகின்றனர்.

**விழுப்புரம்**

தென்மாவட்டங்களை இணைக்கக் கூடிய முக்கியமான மாவட்டம் விழுப்புரம் ஆகும். அதுபோன்று சென்னை, புதுச்சேரி செல்வதற்கும் விழுப்புரத்தைக் கடந்து தான் செல்ல வேண்டும். இதனால் எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் விழுப்புரம் மாவட்டம் போக்குவரத்து இன்றி அமைதியாகக் காணப்படுகிறது.

ஊரடங்கு விதிமுறைகளில் கொடுக்கப்பட்டுள்ள படி, பத்திரிகை, மருத்துவ சீட்டு மற்றும் உரிய அனுமதிச் சீட்டு இல்லாமல் செல்பவர்களை போலீசார் நிறுத்தி திருப்பி அனுப்பி வைத்து வருகின்றனர். மாவட்டம் முழுவதும் 1200க்கும் மேற்பட்ட போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 60 செக் போஸ்ட் அமைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி எல்லைப் பகுதிகளில் தனி செக் போஸ்ட் அமைக்கப்பட்டுப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்றைய தினத்தை விடுமுறை தினமாகக் கருதி வெளியே வராமல் மக்கள் ஊரடங்கு கட்டுப்பாட்டுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று விழுப்புரம் போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

**மதுரை**

மதுரையில் வாகன தணிக்கையில் ஈடுபடும் போலீசார் கூறுகையில், பெரும்பாலும் வேலைக்கு செல்லக் கூடியவர்கள் தான் சாலைகளில் சென்றுகொண்டிருக்கின்றனர். ஆனால் ஒருசிலர் மாஸ்க் அணிவதில்லை. அவர்களை மாஸ்க் அணியும்படி அறிவுறுத்தி வருகிறோம். இந்த ஊரடங்கின் முக்கியத்துவம் குறித்து மக்களுக்குத் தெரிந்திருக்கிறது. அதனால் அநாவசியமாக யாரும் வெளியே வரவில்லை” என்று கூறுகின்றனர்.

பைபாஸ் சாலை, பெரியார் பேருந்து நிலையம் மதுரை- சிவகங்கை சாலை ஆகிய பகுதிகள் வாகனப் போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

இதுபோன்று தமிழகத்தின் திருச்சி, தஞ்சை, கள்ளக்குறிச்சி, வேலூர் என பல்வேறு பகுதிகளிலும் வாகன போக்குவரத்து குறைவாகவே காணப்படுகிறது.

**-பிரியா**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *