மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 9 ஜன 2022

கொரோனா அச்சத்தால் இருவர் தற்கொலை!

கொரோனா அச்சத்தால் இருவர் தற்கொலை!

தமிழ்நாட்டில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டு வரும் நிலையில், அதன் பரவலைக் கட்டுப்படுத்த இன்று(ஜனவரி 9) மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.

இந்த நிலையில், கொரோனா அச்சம் காரணமாக மதுரையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை கல்மேடு அருகே எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த ஜோதிகா, அவரது தாய் லட்சுமி, மூன்று வயது மகன் ரித்தீஸ் மற்றும் அவரது தம்பி சிபிராஜ் ஆகியோருடன் வசித்து வந்தார். ஜோதிகாவின் வருமானத்தில்தான் குடும்பம் நடைபெற்று வந்த நிலையில், அவருக்கு சமீபத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனால், வீட்டிலுள்ள மற்றவர்களுக்கும் கொரோனா வந்துவிடுமோ என்ற அச்சத்தில் நான்கு பேரும் சாணி பவுடரை கரைத்து குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தனர். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் நால்வரையும் மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதில் ஜோதிகா மற்றும் அவரது மகன் ரித்தீஸ் உயிரிழந்த நிலையில், லட்சுமியும், சிபிராஜூம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தந்தி டிவிக்கு பேட்டி அளித்துள்ள சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,”இன்று முதல்நாள் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. பல இடங்களிலிருந்து வந்த தகவலின் அடிப்படையில் முழு ஊரடங்கிற்கு பொதுமக்கள் சிறப்பாக ஒத்துழைப்பு அளித்து வருகிறார்கள். இது மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த நான்கைந்து நாட்களாக தமிழ்நாட்டில் தொற்றுபாதிப்பு தினந்தோறும் இரண்டாயிரம் என்ற அளவில் அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா,டெல்லி போன்ற மாநிலங்களில் பாதிப்பு ஒருநாள் 10 ஆயிரம் என்றால், மறுநாள் 20 ஆயிரமாக அதிகரித்து வருகிறது. தொற்று வேகமாக பரவிக் கொண்டிருக்கிற சூழலில், ஊரடங்கு என்பது தவிர்க்க முடியாத ஒன்று” என்று கூறினார்.

மதுரையில் நடைபெற்ற சம்பவம் உண்மையிலே வருத்தமளிக்கிறது என்று கூறிய அவர், “கொரோனா வந்துவிடும் என்பதற்காக தற்கொலைக்கு முயற்சி செய்வது என்பது தேவையற்ற ஒன்று. எதுவாக இருந்தாலும், அதை எதிர்கொள்வதுதான் மனிதனின் சிறப்பு விஷயமாகும். ஒமிக்ரான் உலகளவில் வேகமாக பரவி வந்தாலும், பெரியளவில் உயிர் பாதிப்பு இல்லை, மிதமான அளவில் மட்டுமே பாதிப்பு உள்ளது. இதற்காக பயந்து தங்களின் இன்னுயிரை விடுவது என்பது அவசியமற்ற ஒன்று. வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற எண்ணம் அனைவரிடமும் இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் சாணிபுவுடர் விற்க முழுமையாக தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.

ஊரடங்கு குறித்து பேசிய அவர், “ஊரடங்கு மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்பதால் அதிக கவனம் செலுத்தி முடிவு எடுக்கப்படுகிறது. அதில் வாரத்திற்கு ஒருநாள் ஊரடங்கு என்பது அவசியமானதாக கண்டறியப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு மற்றும் இரவுநேர ஊரடங்கு ஆகியவற்றின் மூலம் கொரோனா பரவல் குறைவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது என்பதுதான் நிதர்சமான உண்மை. பிப்ரவரி வரை தொற்று அதிகரிப்பு இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆனால், எந்தளவுக்கு உயர்ந்து குறையும் என்பதை கணிக்கமுடியவில்லை. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது உச்சபட்ச நேரம் என்பதால் மக்கள் கவனத்துடன் அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

அதுபோன்று கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்பைத் தடுக்க வேண்டுமென்றால் அனைவரும் தயக்கமின்றி தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். நேற்றுவரை 9 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று கூறினார்.

-வினிதா

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

பிரதமர் பேச்சில் தடுமாற்றம் ஏன்? உண்மை இதோ...

6 நிமிட வாசிப்பு

பிரதமர் பேச்சில் தடுமாற்றம் ஏன்?   உண்மை இதோ...

ஞாயிறு 9 ஜன 2022