மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 8 ஜன 2022

நீட் அனைத்துக் கட்சிக் கூட்டம்: பாஜக வெளிநடப்பு!

நீட் அனைத்துக் கட்சிக் கூட்டம்: பாஜக வெளிநடப்பு!

கடந்த செப்டம்பர் மாதம் 19 ஆம்தேதி தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா ஆளுநரால் இன்னும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படாத நிலையில், அடுத்த கட்டம் குறித்து விவாதிக்க இன்று (ஜனவரி 8) சட்டமன்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கூட்டினார்.

தலைமைச் செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகையில் இந்த கூட்டம் இன்று காலை முதல்வர் தலைமையில் தொடங்கியது. சட்டமன்றத்தில் அங்கம் வகிக்கும் 13 கட்சிகளின் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

திமுக சார்பில் அமைச்சர் துரைமுருகன், அதிமுக சார்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர், மனோஜ் பாண்டியன் கலந்துகொண்டனர். பாஜக சார்பில் வானதி சீனிவாசன் கலந்துகொண்டார். ஆனால் அவர் வெளிநடப்பு செய்துவிட்டார்.

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் பிரதமரை நேரில் சந்தித்து நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என நான் கோரிக்கை விடுத்தேன். நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் நீட் விலக்கு கோரி வலியுறுத்தினார்கள்.

இதனைத் தொடர்ந்து, நீட் விலக்கு சட்ட முன்வடிவு செப்டம்பர் 13 ஆம் தேதி சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேற்றினோம். அதன் பின்னர் இந்த சட்டமுன் வடிவை குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற ஆளுநருக்கு அனுப்பி வைத்தோம். ஆனால், அதை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பாமலேயே ஆளுநர் வைத்துள்ளார். மாநில உரிமையும், சட்டமன்றத்தின் அதிகாரமும் கேள்விக்குறியானதால் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் அவசரமாக, அவசியத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

அதிமுக சார்பில் பேசிய முன்னாள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “நீட் தேர்வு விவகாரத்தில் அரசு மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும் அதிமுக துணை நிற்கும். நீட் விலக்கு பெறும் வரை மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் பயிற்சி மையங்களை அதிகரிக்க வேண்டும். மாணவர்கள் தவறான எண்ணங்களுக்கு செல்வதை தவிர்க்க உளவியல் பயிற்சிகள் அளிக்க வேண்டும்”என்று கோரிக்கை வைத்தார். மற்ற கட்சி பிரதிநிதிகளும் பேசினார்கள்.

அனைத்துக் கட்சிக் கூட்டம் முடிந்து செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பற்றி கூறினார்.

“நமது மாநிலமும் இன்று அடைந்துள்ள இந்த வளர்ச்சியை சமூக நீதிக்கான அரசியல், சட்ட மற்றும் மக்கள் போராட்டங்களின் மூலம் மட்டுமே பெற்றுள்ளோம் என்பதன் அடிப்படையில், நீட் தேர்வு முறையை முழுமையாக நீக்கிட சட்டரீதியாக தேவையான நடவடிக்கைகளை மூத்த சட்ட வல்லுநர்களை கலந்தாலோசித்தப் பிறகு, தமிழ்நாடு சட்டப்பேரவையிலுள்ள அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து மேற்கொள்வது எனவும், நீட் தேர்வு பாதகங்களை நாட்டின் மற்ற மாநிலங்களும் உணரும் வகையில் ஒருமித்த கருத்தை உருவாக்க தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வது என ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டது”என்று கூறினார் அமைச்சர்.

இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக பிரதிநிதி வானதி சீனிவாசன் வெளிநடப்பு செய்தார். வெளிநடப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

“நீட் தேர்வை ஒன்றிய அரசு மாநிலங்கள் மீது திணிக்கிறது என்பது உள்ளிட்ட பல தவறான தகவல்களை எதிர்த்து பாஜக வெளிநடப்பு செய்கிறது”என்று கூறினார்.

-வேந்தன்

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ...

4 நிமிட வாசிப்பு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ஆபரேஷன்

டிஜிட்டல் திண்ணை: சசிகலா- தினகரன் இடைவெளி: தூது போன குடும்பப் ...

7 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சசிகலா- தினகரன் இடைவெளி: தூது போன குடும்பப் பிரமுகர்!

சனி 8 ஜன 2022