எவரெஸ்ட் போன்று உயரும் கொரோனா!

politics

எவரெஸ்ட் சிகரம் போன்று கொரோனா தொற்று தொடர்ந்து உயர்ந்துக் கொண்டே செல்கிறது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் நாளை முழு ஊரடங்கு என்பதால் இன்று(ஜனவரி 8) 18வது தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. சென்னையில் 1600 முகாம்களில் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

சென்னை அடையாறில் நடைபெற்று வரும் தடுப்பூசி சிறப்பு முகாமை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தனர்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் பூஸ்டர் தடுப்பூசி திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜனவரி 10ஆம் தேதி தொடங்கி வைக்கிறார். தடுப்பூசியின் இரண்டு தவணையும் செலுத்திக் கொண்டு ஒன்பது மாதங்கள் ஆனவர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்படும். 35 லட்சத்து 46 ஆயிரம் பேருக்கு பூஸ்டர் டோஸ் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போதுவரை, 21 லட்சம் சிறுவர்களுக்கு வெற்றிகரமாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. பொது இடங்களுக்கு செல்பவர்கள் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.

முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டதின் கீழ் கொரோனா, கருப்பு பூஞ்சை உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் இணைவதற்கு ரூ.72 ஆயிரம் வருமான உச்சவரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டின் பத்திரிகையாளர்களுக்கு இந்த உச்ச வரம்பிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன்மூலம் சுமார் 1,440 பத்திரிகையாளர்கள் பயன்பெறுவார்கள். இவர்களுக்கான சிறப்பு அடையாள அட்டையை முதல்வர் ஜனவரி 10ஆம் தேதி வழங்குவார்” என்று கூறினார்.

கொரோனா பரவும் வேகம் குறித்து பேசிய அவர்,” தமிழ்நாட்டில் இரவுநேர ஊரடங்கு கடந்த இரண்டு நாட்களாக சிறப்பாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மக்களுமே ஊரடங்கை ஏற்று ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். 10 மணிக்கு மேல் டாஸ்மாக் கடைகள் எதுவும் திறந்திருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் உயிர் சம்பந்தமான விஷயம் என்பதால் அனைவரும் ஊரடங்கிற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

உலக வரலாற்றில் கொரோனா தொற்று ஏற்பட்ட காலத்திலிருந்து கடந்த 24 மணி நேரத்தில் உலக முழுவதும் 26 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்தாண்டு ஏப்ரல் 25 ஆம் தேதி உலகளவில் மிக அதிக பாதிப்பு வெறும் 9 லட்சம்தான். ஆனால் தற்போது 26 லட்சமாக அதிகரித்துள்ளது. அதாவது, எவரெஸ்ட் சிகரம்போன்று வேகமாக கொரோனா உயர்ந்து கொண்டு செல்கிறது. அதனால், மக்கள் அரசின் விதிமுறைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும்” என்று கூறினார்.

மருத்துவ கலந்தாய்வு குறித்து பேசிய அவர்,” உச்ச நீதிமன்றத்தில் 27 சதவிகித இடஒதுக்கீடு விவகாரத்திற்கு நல்ல தீர்ப்பு கிடைத்திருக்கிறது. திமுகவும், தமிழ்நாடு அரசும் எடுத்த நடவடிக்கைகளின் விளைவாக ஓபிசி பிரிவினர் மாணவர்களுக்கு மிகப் பெரிய அளவிலான வாய்ப்பாக இந்த தீர்ப்பு அமைந்துள்ளது. 15 சதவிகித மாணவர்களுக்கான மருத்துவ கலந்தாய்வை மத்திய அரசு நடத்த முற்படும். அது 15 நாட்களில் நடந்துமுடிந்துவிடும்.

இதன்பிறகு, ஜனவரி மூன்றாவது வாரத்தில் தகுதிப் பட்டியலை வெளியிடவுள்ளோம். தொடர்ந்து நான்காவது வாரத்தில் தமிழ்நாட்டில் கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

தமிழ்நாட்டில் மொத்தமாக 5,175 மாணவர்கள் சேர்க்கைக்கான வாய்ப்பு உள்ளது. இதில் 15 சதவிகிதம் மத்திய அரசு ஒதுக்கீடு தவிர, 4,319 மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. மேலும் சுயநிதி கல்லூரிகளிலிருந்து 1580 இடங்களையும் சேர்த்து, 5,899 மருத்துவ இடங்களுக்கான கலந்தாய்வு ஜனவரி நான்காவது வாரத்தில் தொடங்கவுள்ளது. அதுபோன்று தமிழ்நாடு அரசின் 7.5 சதவிகித இடஒதுக்கீட்டின்படி, 439 மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவுள்ளது” என்று கூறினார்.

ஒரு வாரத்திற்கு முன்னதாக, கொரோனாவும், டெல்டாவும் இணைந்து சுனாமி போல் பரவி வருகிறது என்று அமைச்சர் கூறியிருந்த நிலையில், தற்போது எவரெஸ்ட் சிகரம் போன்று பரவி வருகிறது என்று கூறி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளார்.

சமீபத்தில் சட்டமன்றத்தில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், இரண்டு டோஸ் செலுத்திக் கொண்டவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டால் அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளலாம். தொற்று உறுதி செய்யப்பட்டவுடனே அனைவரும் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்று கட்டாயமில்லை. வீட்டில் போதிய வசதி இல்லாதவர்கள் கொரோனா சிகிச்சை மையங்களில் தனிமைப்படுத்திக் கொள்ளலாம். தமிழ்நாட்டில் போதுமான அளவு சுகாதார கட்டமைப்பு உள்ளது. அதனால் மக்கள் கொரோனா தொற்று குறித்து பெரியளவில் பதற்றமடைய தேவையில்லை என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

**-வினிதா**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *