80% பேருக்கு ஒமிக்ரான்: அமைச்சர் மா.சு

politics

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 80 சதவிகிதம் பேர் ஒமிக்ரானால் பாதிக்கப்படுகின்றனர் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை குரோம்பேட்டையில் உள்ள எம்ஐடி கல்வி நிறுவனத்தில் 81 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதித்த மாணவர்கள் அங்கு உள்ள விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று (ஜனவரி 6) உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் எம்ஐடி கல்லூரி விடுதிக்குச் சென்று பாதிக்கப்பட்ட மாணவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பொன்முடி, “அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த எம்ஐடியில் படிக்கும் 81 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எம்ஐடி கல்லூரி விடுதியில் தங்கியிருந்த 1,659 மாணவர்களுக்குப் பரிசோதனை நடத்தப்பட்டது. இன்னும் 262 மாணவர்களின் பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது. தொற்று பாதிக்கப்பட்ட 81 பேரில் 41 பேர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 40 பேர் விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதுபோன்று 81 பேரில் 66 பேருக்கு எஸ்-ஜீன் டிராப் கண்டறியப்பட்டுள்ளது.

முதல்வர் உத்தரவின்படி சட்டப்பேரவை முடிந்தவுடன், நாங்கள் இங்கு வந்து மாணவர்களைச் சந்தித்தோம். பாதிக்கப்பட்டவர்களில் 39 பேர் தடுப்பூசியின் இரண்டு தவணையும் செலுத்திக் கொண்டவர்கள். மூன்று பேர் மட்டுமே 18 வயதுக்குக் குறைவானவர்கள் என்பதால் தடுப்பூசி போடாமல் உள்ளனர். அனைவரும் நலமுடன் உள்ளனர். அதேகல்லூரியில் மேலும் 762 பேருக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.

செமஸ்டர் தேர்வுகள் குறித்து பேசிய அவர், “ஜனவரி 20ஆம் தேதிக்குக்குப் பிறகு கல்லூரி தேர்வுகள் நடத்தப்படும். தேர்வுக்குப் படிப்பதற்காக தற்போது மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை கொரோனா பாதிப்பு மேலும் அதிகரித்தால் தேர்வு தேதிகள் மீண்டும் ஒத்திவைக்கப்படும். அரசு உத்தரவை மீறி கல்லூரி நடத்தப்பட்டால் கல்லூரி மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

இதையடுத்து பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழ்நாட்டில் டெல்டா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு மிகவும் அதிகமாக உள்ளது. இவை இரண்டும் சுனாமி வேகத்தில் பரவி வருகிறது. இதனால், மக்கள் பயப்படத் தேவையில்லை. ஆனால், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

கொரோனா பரிசோதனை எடுத்தவர்கள் முடிவு வரும்வரை, முடிந்தவரை வீட்டில் தனிமை படுத்திக்கொள்ள வேண்டும், இல்லாதபட்சத்தில், அரசு ஏற்படுத்தியிருக்க கூடிய இடங்களில் தனிமைப்படுத்திக் கொள்ளலாம்.

சென்னையில் 30 இடங்களில் கொரோனா சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 80 விழுக்காட்டினர் ஒமிக்ரானால் பாதிக்கப்படுகின்றனர்” என்று கூறினார்.

தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 6,983 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 3,759 பேரும், செங்கல்பட்டில் 816 பேரும்,திருவள்ளூரில் 444 பேரும், கோவையில் 390 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

**-வினிதா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *