மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 7 ஜன 2022

செந்தில்பாலாஜியிடம் ஸ்மைல் பண்ணாத அமைச்சர்கள்: பின்னணி இதுதான்!

செந்தில்பாலாஜியிடம் ஸ்மைல் பண்ணாத அமைச்சர்கள்: பின்னணி இதுதான்!

சட்டமன்றக் கூட்டத் தொடர்களில் அமைச்சர்களை சுற்றி சட்டமன்ற உறுப்பினர்கள் சூழ்ந்துகொண்டு சாதாரண வணக்கம் வைப்பதும், தங்களுக்கு ஆக வேண்டிய காரியங்களுக்காக வெயிட்டான வணக்கம் வைப்பதும் வழக்கமான காட்சிகள்தான்.

அதேபோல கடந்த ஜனவரி 5 தொடங்கி இன்று (ஜனவரி 7) நிறைவுற்ற சட்டமன்றக் கூட்டத் தொடரிலும் ஆளுங்கட்சியான திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களைப் பார்த்து வணக்கம் வைத்து புன்னகைப்பதும் பல கோரிக்கைகளை தனிப்பட்ட முறையில் வைப்பதும் நடந்தன.

அதேநேரம் மதுவிலக்குத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை கண்டு பல்வேறு திமுக மாசெக்களான எம்.எல்.ஏ.க்களும், ஏன் அமைச்சர்களுமே கூட வழக்கமான புன்னகையை இம்முறை உதிர்க்கவில்லை. அவர் அருகே இருக்கும் சில அமைச்சர்கள் பேசிக் கொண்டார்களே தவிர, தேடி வந்து வணக்கம் வைத்து சிரித்துப் பேசும் பலர் செந்தில்பாலாஜியிடம் இம்முறை அதை தவிர்த்துவிட்டார்கள்.

என்ன காரணம் என்று அமைச்சர்கள் வட்டாரத்திலேயே விசாரித்தோம்.

“வேறு என்ன காரணமாக இருக்க முடியும்? சமீபத்தில் நடந்து முடிந்த மதுபான பார்கள் டெண்டரில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் நடவடிக்கைகள்தான் இதற்குக் காரணம். கடந்த கால வழக்கப்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பார்கள் அந்தந்த மாவட்டச் செயலாளர் அல்லது அமைச்சரின் பரிந்துரைப்படி நகர செயலாளர், ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளுக்கு டெண்டர் மூலமாக ஒதுக்கப்படும். அவர்களும் அதை வைத்து நாலு காசு சம்பாதித்து, ஆங்காங்கே கட்சி கூட்டங்களுக்கு நிகழ்ச்சிகளுக்கு செலவு செய்வார்கள். மாவட்டச் செயலாளர்களாக இருக்கும் அமைச்சர்களுக்கும் அந்த மாவட்டத்தில் இது ஒரு மரியாதையாக பார்க்கப்படும்.

ஆனால் இப்போதைய மதுபான டெண்டரில் இதெல்லாம் முற்றிலும் காணாமல் போய்விட்டது. முக்கியமான அமைச்சர்களுக்குக் கூட அவர்களின் மாவட்டங்களில் பார்கள் ஒதுக்கப்படவில்லை. முதல்வருக்கு மிகவும் நெருக்கமான ஒரு அமைச்சர் தனது மாவட்டத்தின் மாசெ என்கிற முறையில் நகர செயலாளர்களுக்கு இத்தனை, ஒன்றிய செயலாளர்களுக்கு இத்தனை என்று அவர்களிடமே பேசி பட்டியல் தயார் செய்துவைத்துக் கொண்டு... செந்தில்பாலாஜியிடம் பட்டியலை அனுப்பி வைத்திருக்கிறார். அதில் 80 பார்கள் இருந்தன. ஆனால் அந்த முக்கிய அமைச்சரின் பரிந்துரையில் விண்ணப்பித்தவர்களுக்கு வெறும் 10 பேருக்கு மட்டுமே பார்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த முக்கியமான அமைச்சருக்கு மட்டுமல்ல... பல அமைச்சர்களுக்கும் இதுதான் நிலைமை.

கடந்த ஆட்சியில் டாஸ்மாக் நிர்வாகத்தால் பார்கள் ஒதுக்கப்படாத கடைகளுக்கு அருகே கூட அதிமுக நிர்வாகிகள் அனுமதி இல்லாமலே பார்களை நடத்தி அதன் மூலம் பெரும் பணம் பார்த்து வந்தனர். இப்போது அப்படி கூட நாங்கள் கேட்கவில்லை. டாஸ்மாக் நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பார்களைதான் கட்சி நிர்வாகிகளுக்கு ஒதுக்கித்தருமாறு கேட்கிறோம். ஆனால் செந்தில்பாலாஜி இதில் வேறு விதமான, ‘சென்ட்ரலைசுடு’ உத்தியை பின்பற்றி கட்சியினருக்கு எதுவும் கிடைக்காமல் பார்த்துக் கொள்கிறார்.

’இது வெறும் பணம் சம்பந்தப்பட விஷயமில்லீங்க. இனிமே மாவட்டத்துல நகர செயலாளரோ, ஒன்றிய செயலாளரோ என்னைப் பத்தி என்ன சொல்வான்? ஒரு பார் எடுத்துத் தர முடியல. இவரெல்லாம்.....’னு பேசமாட்டானா?’ என்று தலைமைச் செயலகத்திலேயே ஒரு மாவட்டச் செயலாளரான அமைச்சர் தனது நெருக்கமான சட்டமன்ற உறுப்பினர்களிடம் மனம் விட்டுப் பேசியிருக்கிறார்.

இந்த கொதிப்புதான் சட்டமன்றத்தில் பல அமைச்சர்கள் செந்தில்பாலாஜியிடம் முகம் கொடுத்து பேசாததற்கும், வணக்கம் வைக்காததற்கும் காரணம்” என்கிறார்கள் நம்மிடம் பேசிய அமைச்சர்கள் வட்டாரத்தினர்.

-வேந்தன்

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

10 நிமிட வாசிப்பு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் ...

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் திட்டம்!

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

வெள்ளி 7 ஜன 2022