மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 6 ஜன 2022

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும்: சுகாதாரச் செயலாளர்

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும்: சுகாதாரச் செயலாளர்

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரிக்கும், அதனால் மக்கள் பதற்றமடைய தேவையில்லை என்று சுகாதாரச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் குறைந்து வந்து கொண்டிருந்த கொரோனா பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வந்த நிலையில், திடீரென்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தைத் தாண்டியது. நேற்று ஒரே நாளில் 4,862 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 2,481 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக, கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 16,577 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று (ஜனவரி 5) சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், “நேற்று வரை உலக அளவில் 26 லட்சம் பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பெருநகரங்களில் டெல்டா மரபணு வைரஸை காட்டிலும் ஒமிக்ரான் பாதிப்பு தற்போது அதிகரித்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட இடங்களில் கொரோனா தொற்று ஏறும்முகத்தில் உள்ளது. இதனால் மக்கள் பதற்றமடைய வேண்டாம். தொற்று அறிகுறி தென்பட்டால் ஸ்கிரீனிங் சென்டர்களில் சென்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். லேசான அறிகுறி இருப்பவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்கள். வீட்டுத் தனிமை குறித்து மாநில அரசு ஏற்கனவே அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. அதனுடன் இன்று (நேற்று) மத்திய அரசும் புதிய வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.

அதுபோன்று நம்மிடம் சுகாதார கட்டமைப்பும் நல்லமுறையில் உள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா சிகிச்சைக்கு என்று தற்போது வரை 1,16,587 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. இதில் தற்போது 5 சதவிகிதத்துக்கும் குறைவாகதான் படுக்கைகள் நிரம்பியுள்ளன. ஒமிக்ரான் மற்றும் எஸ்-ஜீன் டிராப் கண்டறியப்பட்டவர்களுக்கு இதுவரை சுவாச உதவி தேவைப்படவில்லை. ஆக்சிஜன் தேவைப்படாது என்ற நிலை அப்படியே இருக்கும் எனக் கூற முடியாது. ஒமிக்ரான் காரணமாக நுரையீரலில் தீவிர பாதிப்பு கண்டறியப்படவில்லை. இருப்பினும், நம்மிடம் 1730.97 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கையிருப்பில் உள்ளது. 217 பிராண வாயுவை உருவாக்கும் கருவி உள்ளது” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “கொரோனா தொற்று அதிகரித்து, பின்பு படிப்படியாகக் குறையும். பண்டிகைகள் நெருங்கும் நேரத்தில் கவனக்குறைவாக இருந்தால் தொற்று பாதிப்பு பன் மடங்கு உயரும். தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த இன்று முதல் தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அரசின் அனைத்து விதிமுறைகளையும் மக்கள் முறையாகப் பின்பற்றி, தொற்று பரவல் சங்கிலியை உடைக்க உதவ வேண்டும். கொரோனா, ஒமிக்ரான் பரவலைத் தடுக்கவே கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்பதை உணர்ந்து மக்கள் செயல்பட வேண்டும். மக்கள் அனைவரும், பயணம் செய்யும்போது முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். ஓட்டுநர்கள், நடத்துநர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். அவர்கள் மட்டுமன்றி, அனைத்துத்தரப்பினரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். இதுவரை போடாதவர்கள், இனிமேலும் காலம் தாழ்த்தாமல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். இரு கைதட்டினால்தான் ஓசை வரும் என முதல்வரே கூறியுள்ளார். இதை மக்கள் உணர வேண்டும்.

தமிழ்நாட்டில் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் நபர்களில், சுகாதாரத் துறை செயலாளராக 15-18 வயதினரை பாராட்டக் கடமைப்பட்டுள்ளேன். ஏனெனில், கடந்த மூன்று நாட்களில் இப்பிரிவினரில் 12 லட்சம் தடுப்பூசி போட்டுள்ளனர். பள்ளிக்கல்வித் துறையினரும் சேர்ந்து செயல்பட்டதில், மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது. இவர்களை கண்டு, பெரியவர்களும் தடுப்பூசி போட தாமாக முன்வர வேண்டும். முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திவிட்டு, இரண்டாவது டோஸ் செலுத்திக்கொள்ளாமல் இருந்தால், அவர்களால் நோய் பரவும் அபாயம் உள்ளது. ஆகவே அனைவரும் இரண்டு டோஸையும் செலுத்திக்கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த இன்று (ஜனவரி 6) முதல் இரவு ஊரடங்கு உட்பட பல்வேறு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

-வினிதா

டிஜிட்டல் திண்ணை: விலைபோய் விடாதீர்கள்-கமல் உருக்கம்!

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  விலைபோய் விடாதீர்கள்-கமல்  உருக்கம்!

முருகன் மேல் பாசம் உண்டு: மணமேடையில் ஸ்டாலின் சிலேடை!

12 நிமிட வாசிப்பு

முருகன் மேல் பாசம் உண்டு: மணமேடையில் ஸ்டாலின் சிலேடை!

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

வியாழன் 6 ஜன 2022