மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 6 ஜன 2022

நீட் விலக்கு : ஜனவரி 8ல் அனைத்துக்கட்சி கூட்டம்!

நீட் விலக்கு : ஜனவரி 8ல் அனைத்துக்கட்சி கூட்டம்!

நீட் நுழைவுத் தேர்வுக்கு எதிராக அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுப்பது குறித்து, ஜனவரி 8ஆம் தேதி சட்டமன்ற அனைத்துக் கட்சிகளின் கூட்டம் நடைபெறும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இரண்டாவது நாளாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. அப்போது 110 விதியின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டார்.

அவர் பேசுகையில், “கல்வி என்பதை அடிப்படை உரிமையாகச் செயல்படுத்திக் காட்ட நினைக்கக்கூடிய அரசாக தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது.

எந்தவொரு கல்லூரிச் சேர்க்கையாக இருந்தாலும், அதற்கு வைக்கப்படும் நுழைவுத் தேர்வானது ஏழை எளிய, கிராமப்புற விளிம்பு நிலை மாணவ சமுதாயத்தைப் பாதிக்கும். அதனால் அந்தத் தேர்வுகளைத் தவிர்த்து, 12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே கல்லூரி மாணவர் சேர்க்கை அமைய வேண்டும் என்பதில் இந்த அரசு உறுதியாக உள்ளது.

இந்த அடிப்படையில்தான், கலைஞர் மாநில அளவில் நடத்தப்பட்டு வந்த நுழைவுத் தேர்வுகளை, 2007 ஆம் ஆண்டு அகற்றி, அதற்காகத் தனிச் சட்டம் இயற்றினார். அச்சட்டத்திற்குக் குடியரசுத் தலைவருடைய ஒப்புதலையும் பெற்று, கல்லூரி மாணவர்கள் சேர்க்கையில், ஏழையெளிய கிராமப்புற மாணவர்களின் நலன் காக்கப்படுவதை உறுதிசெய்தார்.

ஆனால், கடந்த காலத்தில் ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்ட நீட் தேர்வுக்கான திருத்தச் சட்டம், அதன்பிறகு கொண்டுவரப்பட்ட தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் ஆகியன நமது மாணவர்களை வெகுவாக பாதித்துள்ளன.

மாநில அரசு நிதியிலிருந்து, மாநில அரசுகளால் தொடங்கப்படக்கூடிய மருத்துவக் கல்லூரிகளில், எவ்வாறு அம்மாநில மாணவர்களைச் சேர்க்க வேண்டும் என்பது குறித்து முடிவு செய்யக்கூடிய உரிமையை மாநில அரசுகளிடமிருந்து பறித்துவிட்டது ஒன்றிய அரசு.

இதுமட்டுமன்றி, நுழைவுத் தேர்வுக்கான சிறப்புப் பயிற்சிகளைப் பெறுவதற்கு வசதி வாய்ப்புகள் உள்ள மாணவர்களுக்கு மட்டுமே சாதகமாகவும், மருத்துவ மாணவர் சேர்க்கையில் 12 ஆண்டுகள் படிக்கக்கூடிய பள்ளிக் கல்வியால் எவ்விதப் பயனும் இல்லை என்ற நிலையை உருவாக்கி, பள்ளிக் கல்வி அமைப்பையே அர்த்தமற்றதாக ஆக்குவதாகவும் இந்த நீட் தேர்வு முறை உள்ளது.

மாணவர்களின் எதிர்காலம் பாழாகி வருவதைக் கண்டும் காணாமல் நாம் இருந்து விடமுடியாது. இதனைச் சரிசெய்து, மாநில உரிமைகளையும் நமது மாணவர்களுடைய நலனையும் மீண்டும் நிலைநிறுத்தும் நோக்கத்தோடு இந்த அவையால் ஒருமனதாக 19-9-2021 அன்று ஒரு சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தச் சட்டமுன்வடிவு இன்னமும் ஆளுநர் அவர்களால், குடியரசுத் தலைவருடைய ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படாமல் இருக்கிறது. இதுகுறித்து, ஆளுநரை நானே நேரில் சென்று சந்தித்து வலியுறுத்தியிருக்கிறேன்.

இதனைத் தொடர்ந்து, கடந்த 28-12-2021 அன்று நாடாளுமன்ற திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் டி.ஆர். பாலு தலைமையிலே, தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கட்சியைச் சார்ந்த எம்.பி.க்கள், குடியரசுத் தலைவர் அலுவலகத்தில், நீட் தேர்வால் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகள் குறித்தும், இந்தச் சட்டமுன்வடிவுக்கு ஒப்புதல் பெறப்படுவதில் ஏற்படக்கூடிய காலதாமதம் குறித்தும் விரிவாக எடுத்துரைக்கக்கூடிய மனு ஒன்றை அளித்திருக்கிறார்கள். பின்னர், அம்மனு மேல் நடவடிக்கைக்காக ஒன்றிய உள் துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளதாகக் குடியரசுத் தலைவருடைய செயலகத்தின் சிறப்புப் பணி அலுவலர் தெரிவித்திருக்கிறார்.

எனவே, இதுகுறித்து மேலும் வலியுறுத்திட, அனைத்துக் கட்சி எம்.பி.க்களும் உள்துறை அமைச்சரை நேரிலே சந்திக்க நேரம் கேட்டனர். ஆனால், இதுவரையிலே, அவர்களைச் சந்திக்க மத்திய உள்துறை அமைச்சர் மறுத்து வருகிறார். மக்கள் பிரதிநிதிகளை மத்திய உள் துறை அமைச்சர் சந்திக்க மறுப்பது, மக்களாட்சியினுடைய மாண்புக்கு எதிரானதாகும்.

எட்டரை கோடி தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளையும், நமது மாணவர்களுடைய கனவுகளையும் நிறைவு செய்வதற்கான இந்த அரசின் முயற்சிகள் வெற்றி பெற வேண்டும். அதற்காகவே இவ்வாறு பல வகைகளில் இந்த அரசு அயராது முயற்சி செய்து வருகின்றது. பல நாட்கள் கடந்தும், உள் துறை அமைச்சர் நேரிலே சந்திக்க நேரம் ஒதுக்காத நிலையிலே, அவரிடம் கொடுக்கப்பட வேண்டிய மனு, அவரது அலுவலகத்திலே நேற்றையதினம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

‘நீட்’ போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கு எதிரான நமது இந்தப் போராட்டத்தையும், நமது சமூகநீதி இயக்கத்தின் அடுத்த கட்டப் போராட்டம் எனக் கருதி, நாம் நமது கொள்கையிலிருந்து எள்முனையளவு கூட பின்வாங்காமல் முன்னெடுத்துச் செல்வோம்.

எனவே, அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து நாம் ஒருமித்த நிலைப்பாட்டினை எட்டுவதற்கு, நமது சட்டமன்றத்தில் இருக்கக்கூடிய அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தை நாளை மறுநாள், அதாவது, 8-1-2022 அன்று கூட்டுவது என்று முடிவு செய்திருக்கிறோம். அந்தக் கூட்டத்தில் நீங்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமென்று சட்டமன்றக் கட்சிகளுடைய தலைவர்களை நான் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறினார்.

முதல்வரின் இந்த அறிவிப்புக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

-பிரியா

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ...

4 நிமிட வாசிப்பு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ஆபரேஷன்

டிஜிட்டல் திண்ணை: சசிகலா- தினகரன் இடைவெளி: தூது போன குடும்பப் ...

7 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சசிகலா- தினகரன் இடைவெளி: தூது போன குடும்பப் பிரமுகர்!

வியாழன் 6 ஜன 2022