மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 6 ஜன 2022

வேதிக் ராமச்சந்திரன்

வேதிக் ராமச்சந்திரன்

ஸ்ரீராம் சர்மா

HAARP குறித்த எனது கட்டுரையை பலர் பாராட்டினாலும், வேதிக் ராமச்சந்திரன் அவர்கள் அழைத்துப் பாராட்டியது எனக்குப் பெரிது !

நன்றி சொன்ன கையோடு காரசாரமாக சில கேள்விகளை அவரிடம் அடுக்கினேன்.

ஒரு ஹை டெக் சோலார் டெலஸ்கோப் கூட இல்லாத வீட்டுக்குள் இருந்தபடி உலக வானிலை அற்புதங்களை உங்களால் சொல்லிவிட முடியுமா சார் ? உங்கள் தரவுகள் 50% கடந்து சாதிக்கிறது என்றாலும், ஓஸியில் ஜெயித்த ஜோஸியக்காரன் என ஏன் உங்களை சொல்லக் கூடாது ?

ஓராண்டுக்கு முன்பே வானிலை நிலவரங்களை பதிவிட்டு விடுகிறீர்களே, உங்களுக்கு அதிபுத்திசாலி என்ற நினைப்பா ?

23 பில்லியன் டாலர்கள் செலவில், 17 ஆயிரம் பணியார்களைக் கொண்ட பேரமைப்பு NASA ! அந்த நாஸாவே கணிக்க முடியாத ஒன்றை உங்களால் கணிக்க முடியும் என்றால் அதை நம்பச் சொல்கிறீர்களா சார் ?

வரம்பு மீறிய கேள்விகளால் அவரை உசுப்பினேன்.

பாட்டன் முதுகேறி பிடறி முடி பற்றி இழுக்கும் பேரனுக்கு நல்ல கதை சொல்லியபடி தவ்வி நடக்கும் தகவோடு, மெல்ல மெல்ல விளக்கினார் வேதிக் ராமச்சந்திரன். எனக்குத்தான் தலை சுற்றிப் போனது.

அவரது ஆய்வின் விளக்கத்தை என்னளவில் உள்வாங்கி, அதனை இயன்ற வரை எளிமையாக்கி, எனதருமை மின்னம்பல வாசகர்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

அவரை, புயல் ராமச்சந்திரன், கோளறிஞர் ராமச்சந்திரன் எனப் பலபெயர் கொண்டு அழைத்தாலும், ‘ட்வீட்டர்’ உள்ளிட்ட சோஷியல் மீடியாக்களில் தன்னை ‘வேதிக் ராமச்சந்திரன்’ என்றுதான் அடையாளப்படுத்திக் கொள்கிறார் !

அதன் காரண, வீரியத்தைப் போகப் போக பார்ப்போம்.

வேதம் !

‘வேதம்’ என்ற சொல்லுக்கு ‘ஆழ்ந்த அறிவு’ அல்லது ‘ஆழ்ந்த ஞானம்’ எனப் பொருள். அதற்கு, புனிதம் ஏற்றிப் பார்ப்பது அவரவர் உணர்வு நிலையை சார்ந்ததாகிறது !

உதாரணமாக, ‘தாய்மை’ என்ற சொல்லுக்கு ‘ஆழ்ந்த அன்பு’ எனப் பொருள் கொள்ளலாம். அதற்கு, புனிதம் ஏற்றி உருகுவது அவரவர் உணர்வு நிலை சார்ந்து விடுகிறதல்லவா ? அப்படித் தான் வேதம் என்பதும் !

வேதம் என்னும் அந்த பேரறிவு அனாதி காலம் தொட்டு பற்பல இடர்ப்பாடுகளுக்கிடையே வழி வழியாக தொடர்ந்து வருவது !

இந்திய வேதங்களின் அகண்ட அறிவியல் கோட்பாடுகளைக் கண்டு பிரமித்த ஆங்கிலேய அறிவியல் அறிஞர்கள், இந்துமதம் எனும் புதுப் பிம்பத்தைக் கற்பித்து, அதனோடு வேத விஞ்ஞானத்தையும் இணைத்து உலகம் எங்கும் பரப்பினார்கள்.

அவர்களின் நோக்கம் நல்லதாக இருந்தது எனக் கொண்டாலும் கூட, அதன் விளைவுகள் வேறு விதமாகத் திரிந்து போயின !

அந்தக் கால இந்திய வாழ்வியலில் கீழ்மைகள் பல இருந்தன. மொத்தமும் இந்து மதம் என்னும் ஒற்றை அடையாளத்தின் கீழ் அடங்கிப்போய் விட,

மனித குலத்துக்கு எதிரான அந்த கீழ்மைகளை தீவிரமாக எதிர்த்த நன்மக்களில் சிலர், பண்டைய விஞ்ஞானத்தையும் சேர்த்தே எதிர்த்துவிட, இந்த மண்ணின் ஞான மேன்மைகள் அனைத்தும் காரணமின்றி நைந்து நலிந்து போயின.

ஆயினும், வேத விஞ்ஞானக் கணக்குகள் இம்மியளவும் மாறு பாடு கொண்டு விடாமல் காலம் காலமாக கடத்தப்பட்டு வருவது அதன் சிறப்பு.

திருக்குரானின் எந்தவோர் சொல்லையும் மாற்றச் சம்மதிக்காமல் உள்ளது உள்ளபடி இன்றளவும் காப்பாற்றும் இஸ்லாமியர்களின் பிடிவாதத்தில் அடங்கும் அந்தக் கணக்கு !

போனவை போகட்டும். கட்டுரைக்குள் போவோம் !

வேத விஞ்ஞானம் !

அன்றைய பாரத மண்ணில் ‘பராசர ஸ்மிருதி’ என்னும் நூலைப் படைத்த மகரிஷி பராசரா, உஜ்ஜையினி வராஹமிகிரா போன்ற எண்ணற்ற ஞானக் குரிசிலார்கள்…

அகண்டு ஆயாசம் தரும் பேரண்டவெளி பற்றியும், உயிர்கள் வாழும் பூமி குறித்தும் ஆழ ஆழ ஆய்ந்து ஆயிரமாயிரம் பக்கங்களை எழுதிக் குவித்தார்கள்.

வெறும் ஜோதிடக் குறிப்புகளாகத்தான் இன்று சிலர் அதை வழி மொழிகின்றார்கள். அல்ல, அல்ல, கற்பனைக்கெட்டாத ஞானப் புதையல்கள் அடங்கிய ஆழமாங்கடல் அது என அலறிச் சொல்கிறார் வேதிக் ராமசந்திரன் !

முன்னோர்கள் எழுதிச் சொன்னவைகளில் காலத்தால் அழிந்து போனவைகள் எத்துனையோ நாமறியோம் எஞ்சியவற்றை விரித்துப் பார்த்தால் இன்னமும் அது நவீன விஞ்ஞானத்துக்கு சவால் விட்டபடியேதான் ஒளிர்கிறது என்கிறார் !

ஜியோ சென்ட்ரிக் !

நாம் வாழும் இந்த பூமிப் பந்தை மையமாக வைத்து விஞ்ஞானம் அளக்கும் முறையே ஜியோ சென்ட்ரிக் எனலாம்.

ஜியோ சென்ட்ரிக் என்னும் இந்த கோட்பாட்டைப் பற்றி இந்திய பண்டைய வேத விஞ்ஞானம்தான் முதன் முதலில் பேசியது. இன்றைய நவீன அறிவியலும் அதை வழிமொழிந்து நிற்கிறது.

ஆனால், இரண்டு கொள்கைக்கும் இடையே இருக்கும் தூரம் ஜென்ம தூரமாகி விரிகிறது. அதனால்தான் நவீன அறிவியலை வேத விஞ்ஞானம் வென்று நிற்கிறது.

ஜியோ சென்ட்ரிக் என்பதை ஆழப் புரிந்து கொண்டால் இந்த உலகில் நிகழும் அசம்பாவிதங்களில் இருந்து நம்மால் தப்பித்துக் கொண்டு விட முடியும் என அடித்துச் சொல்கிறார் வேதிக் ராமசந்திரன்.

கொஞ்சம் கவனியுங்கள்…

சுழலும் இந்த பூமி ஏறத்தாழ 23 டிகிரி சாய்ந்திருக்கிறது என்கிறது வேத விஞ்ஞானம் ! நவீன அறிவியல் அதை அப்படியே ஏற்கிறது. ஆயினும், அந்த அளவிலேயே நின்று தன் ஆய்வினைத் துவங்கி விடுகின்றது.

ஆனால், அந்த 23 டிகிரி சாய்வை விண்ணுக்குக் கொடுத்து விட்டு உயிர்கள் வாழும் இந்த பூமியை நேர்படுத்திக் கொண்டு பார்க்கிறது இந்திய வேத விஞ்ஞானம் !

அடடா, முன்னோர்கள் கண்டதன் சூட்சுமம் புரிகிறதா ?

அப்படிப் பார்க்கும் போது, பூமியின் அச்சிலிருந்து – சூரியனும், சூரிய மண்டலத்தின் மற்ற பிற கிரகங்களும் பால்வெளி மண்டலத்தோடு சேர்ந்தபடி ஏறக்குறைய அதே 23 டிகிரி சாய்ந்திருந்தபடி…

பூமியை நோக்கிச் சுழலும் அத்தருணத்தில் சிலபல நுண்ணிய பரிபாஷைகளை வெளியிட அந்த பரிபாஷைகள் பூமியைப் பாதிக்கிறது என்கிறது வேத விஞ்ஞானம்.

அதை ஆழப் புரிந்து கொண்டவராகவே வேதிக் ராமச்சந்திரன் நிமிர்ந்து நிற்கிறார் எனப் புரிந்து கொள்ள முடிகிறது !

காலண்டரும் - வேத விஞ்ஞானமும் !

இன்றைய காலண்டரின் வரலாறு பரிதாபமானது. ஆரம்பத்தில், வருடத்துக்கு பத்து மாதங்கள் என்றது. பிறகு, ஜூலை மற்றும் ஆகஸ்டை சேர்த்து பனிரெண்டு என மற்றிக் கொண்டது. பிறகும் சரிப்படாமல் போக செப்டம்பரில் பத்து நாட்கள் கழித்த பின்பு நிலை பெற்றதே இன்றைய கிரிகோரியன் காலண்டர்.

ஆனால், பண்டைய வேத விஞ்ஞானக் கணக்குகள் துளியும் மாற்றப்படாமல், மரபுவழி கடத்தப்பட்டுக் கொண்டு இருப்பதை நாம் குறித்துக் கொண்டாக வேண்டும் !

கவனியுங்கள்…

ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் பிறக்கும் தேதியை நாம் பொங்கலாக கொண்டாடுகிறோம். அந்தத் தேதியை சுவற்றில் தொங்கும் சாதாரணக் காலண்டர் காட்டி விடுகிறது.

தைப் பொங்கல் நாளை அடையாளம் காட்டுவதைக் கடந்து அந்த நவீன காலண்டர் அந்த நாளில் சூரியன் எந்த நொடியில் உதிக்கும் என்பதையும் மிகச் சரியாக சொல்லி விடுகிறது.

உதய நேரம் ஆண்டுக்காண்டு மாறும் எனினும் அதையும் கூட துல்லியமாக குறித்து சொல்லும் வல்லமை கொண்ட அந்த காலண்டர் அந்த அளவிலேயே நின்றுகொண்டு விடுகிறது !

ஆனால், வேத விஞ்ஞானம் என்பது பலபடி கடந்து நின்று பிரமிக்க வைக்கிறது !

வேத விஞ்ஞானத்தின் பார்வை !

ஆண்டுதோறும் பிறக்கும் அந்த தை மாதத்தின் முதல் நாள், அதன் சீதோஷ்ண குணத்தில் மட்டும் ஏன் விதம் விதமாக மாறுபட்டுப் போகிறது என கவனித்தது வேத விஞ்ஞானம் !

சென்ற ஆண்டின் தை முதல் தேதியின் குளிர் அளவு இந்த ஆண்டு இல்லையே ? சென்ற ஆண்டின் தை முதல் தேதியின் வெப்பம் இந்த ஆண்டு மாறுபட்டு விட்டதே ?

காலம் தவறாது வந்து நிற்கும் நாள் ஒன்றை கலைத்துப் போட்டுக் காட்டும் சக்தி எதுவென சிந்திக்க சொன்னது வேத விஞ்ஞானம் !

.

அதற்கு மேல் ஒன்றை அறிவுறுத்தியது.

உலகுக்கு ஒளி தரும் காரணத்தால் சூரிய உதயம் மட்டுமே மனிதர்களுக்குப் பிரதானமாக இருந்து விடுகிறது.

ஆனால், ஒரு வேத விஞ்ஞான அறிஞன் மற்ற மற்ற கிரகங்களின் சூட்சும உதயங்களை, பூமியை நோக்கிய அவைகளின் பரிபாஷைகளை எல்லாம் கணக்கில் கொள்ள வேண்டும். அப்போதுதான் உண்மையான விடிவு கிடைக்கும் என்றது !

தலை சுற்ற வைக்கும் அந்த சூட்சுமக் கணக்குகளை எல்லாம் எப்படியோ கண்டு கொண்டதால்தான் ஓராண்டுக்கு முன்பே தனது வானிலை அறிவிப்புகளை வெளியிட்டு விடுகிறார் வேதிக் ராமச்சந்திரன் !

அப்படித்தானே சார் என்றால், சலனமே இல்லாமல் உற்றுப் பார்க்கிறார். அரசாங்கத்திடம் சொல்ல வேண்டிய ரகஸிய தரவுகளை உன்னிடம் சொல்ல எனக்கொன்றும் அவசரமில்லை என்பது போல் மெல்ல சிரிக்கிறார் ! கழுத்தை நெறித்து கேட்டு விடலாம். களி தின்ன முடியாதே !

அந்தப் பேரறிஞர் ‘ஆர்கனைஸ்டு கேயாஸ்’ எனும் தத்துவம் ஒன்றையும் சொல்கிறார். அது இன்னும் சுவாரஸியமானது.

ஆர்கனைஸ்டு கேயாஸ்

அகண்டு சுழலும் அண்டவெளியைப் பொறுத்தவரை நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த பூமி ஒரு கொசுவின் இறக்கை துகளுக்குள் அடங்கிப் போகுமளவுக்கு துக்குணூண்டு.

இந்த சின்னஞ்சிறு பூமிக் கோளைச் சுற்றி இருக்கும் அந்தப் பேரண்ட வெளியானது கணக்கற்ற, பெயரிடப்படாத, பற்பல வஸ்துக்களோடும், பூமியின் புலன்களுக்கு எட்டாத பேரோசையோடும், அனாதி காலமாக, ஆகாகாரமாக சுழன்று கொண்டே இருக்கிறது.

அதைக் கூர்ந்து கவனித்து ‘ஒழுங்கின் குழப்பம்’ என வர்ணிக்கும் வேத விஞ்ஞானம் அதை ‘ஒழுங்கற்றதோர் ஒழுங்கு’ எனவும் புரிந்து கொண்டது.

அதாவது, அந்தக் குழப்பத்தில் தெளிவு ஒன்று இருக்கின்றது அந்த பேரொழுங்கு வழியே பேரண்டவெளியின் செயற்பாடுகள் யாவும் பூமியை நோக்கித் தன் பரிபாஷைகளை இடைவிடாது வெளியிட்டு எச்சரிக்கிறது.

அந்த நுண்ணிய எச்சரிக்கைகளை பரிபூரணமாக உணர்ந்து கொண்டது நமது முன்னோர்களின் வேத விஞ்ஞானம். அதன் வழியே ஒழுகி நிற்பதுதான் எனது வானிலை ஆய்வு.

வானிலை குறித்த எனது முடிவுகளின் ‘சக்ஸஸ் ரேட்’ இதுவரை 50 % ஐ கடந்திருக்கிறது என்றால் அந்தப் பெருமை நமது முன்னோர்களுக்கே உண்டானது.

தனி ஒருவனாக இவ்வளவுதான் முடிந்திருக்கிறது. அரசாங்கம் சில வசதிகள் மட்டும் செய்து கொடுத்து விட்டால், இந்த சமூகத்துக்கு பல நல்ல விஷயங்களை செய்து கொடுத்து விட முடியும் என நம்பிக்கை பொங்க சொல்கிறார் வேதிக் ராமசந்திரன்.

இது போதும்…

சூரியனின் டால்ஃபின் டான்ஸ் தியரி - திருவாதிரை நட்சத்திர வெடிப்பு - நாஸா ஜகா வாங்கிய அழகு – VORTEX - 2022 ல் தமிழகம் சந்திக்கப் போகும் மழை ஆபத்துக்கள் பற்றி வேதிக் ராமச்சந்திரன் அவர்களின் எச்சரிக்கைகள் அனைத்தையும்…

அடுத்த பதிவில் விரிவாக, வீரியமாக சொல்கிறேன் !

கட்டுரையாளர் குறிப்பு

வே.ஸ்ரீராம் சர்மா - எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டுக் கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். அதைத் திரைப்படமாக்கும் வேலையில் இருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார். திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன்.

டிஜிட்டல் திண்ணை: விலைபோய் விடாதீர்கள்-கமல் உருக்கம்!

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  விலைபோய் விடாதீர்கள்-கமல்  உருக்கம்!

முருகன் மேல் பாசம் உண்டு: மணமேடையில் ஸ்டாலின் சிலேடை!

12 நிமிட வாசிப்பு

முருகன் மேல் பாசம் உண்டு: மணமேடையில் ஸ்டாலின் சிலேடை!

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

வியாழன் 6 ஜன 2022