மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 6 ஜன 2022

சட்டப்பேரவை லைவ்: எம்.எல்.ஏ.க்களின் கேள்விகளும், அமைச்சர்களின் பதிலும்!

சட்டப்பேரவை லைவ்: எம்.எல்.ஏ.க்களின் கேள்விகளும், அமைச்சர்களின் பதிலும்!

தமிழக வரலாற்றில் முதல் முறையாகச் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கேள்வி நேரம் மக்களுக்கு நேரடியாக இன்று (ஜனவரி 6) ஒளிபரப்பு செய்யப்பட்டது.

அவை தொடங்கியதும், சபாநாயகர் அப்பாவு ” தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வண்ணம், இன்று வினா விடை நேரம் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது” என்று அறிவித்தார்.

இதையடுத்து முதலாவதாக மெட்ரோ ரயில் விரிவாக்கம் தொடர்பாக பல்லாவரம் திமுக எம்.எல்.ஏ. கருணாநிதி எழுப்பிய கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலளித்தார்.

“வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் சென்னை மாநகருக்கான புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருவதன் காரணமாக மெட்ரோ ரயில் இணைப்பை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை நீட்டிக்க வேண்டிய அவசியம் உள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான பணிகள் பன்னாட்டு நிறுவனத்தின் மூலமாக முடிக்கப்பட்டுள்ளது. இந்த விரிவான திட்ட அறிக்கை அரசின் ஆய்வில் தற்போது இருக்கிறது. இந்த அறிக்கையின் அடிப்படையில் பணிகளைச் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு தொடங்கியுள்ளது” என்றார்.

முதல்வர் பதிலைத் தொடர்ந்து எம்.எல்.ஏ கருணாநிதி, என் தொகுதி மக்களின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறி அமர்ந்தார்.

கீழ்வேளூர் தொகுதியில் திருப்பூண்டி அருகே உள்ள கீரனேரி ஏரியை ஆழப்படுத்த உறுப்பினர் நாகை மாலி கோரிக்கை விடுத்தார்.

இதற்குப் பதிலளித்த நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், “ கீரனேரி ஏரி 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரி. அந்த ஏரியைத் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும். உறுப்பினரின் கோரிக்கை ஏற்கப்படுகிறது” என்று கூறினார்.

பட்டுக்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ.அண்ணாதுரையின் வினாக்கு பதிலளித்துப் பேசிய நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, தஞ்சை மாவட்டத்துக்குட்பட்ட அதிராம்பட்டு பேரூராட்சி நகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. அதிராம்பட்டு நகராட்சியில் மக்கள் தொகை 2011ஆம் ஆண்டு கணக்கின் படி, 31,066ஆகும். தற்போதைய மக்கள் தொகை 34,122ஆகும். இங்கு, 49.92 கி.மீ தூரத்திற்குச் சாலைகள், 7.83 கி.மீ தொலைவிற்கு வடிகால்கள் பராமரிக்கப்பட்டு வருவதோடு, 7,226 குடியிருப்புகள் உள்ளது” என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து, புதிதாக உருவாக்கப்பட்ட நகராட்சிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தச் சிறப்புக் கவனம் செலுத்தி பணிகளை முடிக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அந்த பணிகள் முடிக்கப்படும்” என்றார்.

இதையடுத்து, திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கு பாதாளச் சாக்கடை திட்டம் தொடர்பாகக் கோரிக்கை வைத்துப் பேசினார்.

அவர் பேசுகையில், “மதுரை மாநகராட்சியின் தென்பகுதியில், 13 வட்டங்களில் பாதாளச் சாக்கடை திட்டம், விரிவான திட்ட அறிக்கை நிலையிலேயே உள்ளது. கடந்த ஆட்சியின் போது மதுரை சட்டமன்ற உறுப்பினர்கள், இன்றைய வணிக வரித்துறை அமைச்சர் உட்படப் பல பேரின் வேண்டுகோளுக்கு இணங்க மதுரை மாநகராட்சியின் வட பகுதியில் அம்ருத் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட திட்டம் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது” என்று பேசிக்கொண்டே இருந்தார்.

அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, ஒரு வரியில் கேள்வியைக் கேளுங்கள் என்றார். இதை ஏற்றுக்கொண்ட ராஜன் செல்லப்பாவும், பாதாள சாக்கடை திட்டத்தை விரைவு படுத்த வேண்டும் என்றார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் கே.என்.நேரு, “மதுரை மட்டுமல்லாமல் தமிழகத்தின் அனைத்து பெருநகரங்களிலும் கழிவுநீர் கால்வாய் திட்டம், பாதாளச் சாக்கடை பணிகளை விரைந்து முடிக்குமாறு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். மதுரை மாநகராட்சியில் விரிவுபடுத்தப்பட்டுள்ள 13 வட்டங்களிலும் பாதாளச் சாக்கடை திட்டத்தை விரைந்து நிறைவேற்றுவதற்கு மீண்டும் ஒரு திட்டம் வகுக்கப்படும்” என்றும் பதிலளித்தார்.

கீழ்பெண்ணாத்தூர் எம்.எல்.ஏ கு.பிச்சாண்டி, கீழ்பெண்ணாத்தூர் தொகுதி திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம் வெறையூரில் மத்திய கூட்டுறவு வங்கி கிளை தொடங்கப்படுமா எனக் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, வெறையூரில் வணிக வங்கிகள் இல்லை. எனவே மக்கள் பயன்பெறும் வகையில் கூட்டுறவு வங்கி துவங்கப்படும். இதற்கு வாடகை கட்டிடம் பார்க்கப்பட்டு, துறையின் மாவட்ட வங்கி மேலாளர் வாயிலாக பணிகள் நடைபெற்று வருகிறது” என்று கூறினார்.

இதுபோன்று தொடர்ந்து உறுப்பினர்கள் தொகுதி பிரச்சினைகளை குறிப்பிட்டு கேள்வி எழுப்பினர். இதற்கு முதல்வரும் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.

-பிரியா

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

பிரதமர் பேச்சில் தடுமாற்றம் ஏன்? உண்மை இதோ...

6 நிமிட வாசிப்பு

பிரதமர் பேச்சில் தடுமாற்றம் ஏன்?   உண்மை இதோ...

வியாழன் 6 ஜன 2022