’நல்லா இருக்கு நியாயம்’… ’கோ பேக் மோடி’ கோஷம்; வறுபடும் டி.ஆர்.பாலு

politics

இரண்டாவது முறையாக பிரதமர் பதவியில் அமர்ந்துள்ள பிரதமர் மோடி, கடந்த முறை ஆட்சியில் இருந்தபோது தமிழ்நாட்டுக்கு வந்த பல சமயங்களில் எதிர்ப்பியக்கம் நடத்தப்பட்டது. அப்போது அதில் முக்கியமாகப் பங்கேற்ற திமுக, இப்போது ஆட்சிக்கு வந்தபின் நேரெதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளது என எழுந்துள்ள விமர்சனக் கணைகள் நின்றபாடாக இல்லை.

புதிய மருத்துவக் கல்லூரிகள் திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக வரும் 12ஆம் தேதி பிரதமர் மோடி, விருதுநகருக்கு வருகிறார். இந்தத் தகவல் கடந்த வாரக் கடைசியில் வெளியிடப்பட்டதுமே சமூக ஊடகங்களில் பழைய எதிர்ப்பியக்கத்தினர் சிறிது சிறிதாக எதிர்ப்புத் தெரிவிக்கத் தொடங்கினார்கள்.

கோபேக் மோடி என்கிற ஆங்கில வாசகத்தை மைய முழக்கமாக ஹேஷ்டேக் செய்து பிரச்சாரத்தை ஆரம்பித்தார்கள். இது நடந்தது, டிசம்பர் 28ஆம் தேதி.

முன்னைய பல கோபேக் மோடி எதிர்ப்பியக்கங்களில் முக்கிய எதிர்க்கட்சியாக இருந்த திமுகவும் பங்கேற்றது. ட்விட்டர், முகநூல் போன்ற சமூக ஊடகங்களில் மட்டுமில்லாமல், களத்திலும் இறங்கி திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டது, வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.

இந்திய பாதுகாப்புத் துறையின் பத்தாவது கண்காட்சியைத் தொடங்கிவைப்பதற்காக, 2018 ஏப்ரல் 18ஆம் தேதி வியாழனன்று பிரதமர் மோடி சென்னைக்கு வந்தார். அப்போது, காவிரி விவகாரத்தில் மேலாண்மை ஆணையம் அமைக்கப்படாமல் தமிழகத்துக்கு மத்திய அரசு பாதகம் செய்வதாக மாநிலம் முழுவதும் விவசாய அமைப்புகள் மட்டுமின்றி, அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகளும் போராட்டத்தில் இறங்கியிருந்தன.

அப்போது, சென்னையில் மட்டுமல்லாமல் மாவட்டத் தலைநகரங்கள் அளவிலும் திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் கோபேக் மோடி முழக்கத்தை முன்வைத்து போராட்டம் செய்தன.

அதில், திமுக தலைவர் ஸ்டாலின், மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

பிறகு, 2019 ஜனவரி 27ஆம் தேதியன்று மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பங்கேற்கவும், தேர்தல் நெருக்கத்தில் பிப்ரவரி 10ஆம் தேதி அன்று திருப்பூருக்கும் பின்னர் மார்ச்சில் கன்னியாகுமரிக்கும் பிரதமர் மோடி வருகை தந்தார். அந்த சமயங்களிலும் இதைப்போலவே கோபேக் மோடி கோஷம் வலுவாக ஒலித்தது.

அதே ஆண்டு செப்டம்பர் 30 அன்று சென்னை, ஐஐடி கல்வி நிறுவனத்தின் 56ஆவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க பிரதமர் வந்திருந்தார். அப்போதும் கோபேக் மோடி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தமிழ்நாட்டின் நலனுக்கு பாதகமாக மைய அரசு இருக்கிறது என்பதுதான் இந்த எதிர்ப்பு இயக்கத்துக்காரர்களின் கோபத்துக்கு காரணம்.

இந்தச் சூழலில் டெல்லியில் உள்துறை அமைச்சரைச் சந்திக்கச் சென்ற தமிழக எம்.பிக்கள் குழுவுக்குத் தலைமை வகித்த திமுகவின் டி.ஆர். பாலுவிடம், கோபேக் மோடி கோஷம் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

சர்வசாதாரணமாக பதிலளித்த அவரோ, “வெள்ளித்தட்டில் 11 மருத்துவக் கல்லூரிகளை வைத்து மோடி, ஸ்டாலின் ஆட்சியில் அரசாங்கத்துக்கு தரப்போகிறார். அதை வேண்டாம் என்பீர்களா?” என எதிர்க்கேள்வி கேட்டார்.

பல நேரங்களில் போராட்டக் குரலாக ஒலிக்கும் கூட்டணிக் கட்சித் தலைவரான திருமாவளவன், இந்தக் கேள்வி வந்தபோதே ஒவ்வாமையுடன் அதை எதிர்கொண்டார்.

பாலுவின் இந்தப் பேட்டி வெளியானதும், ஜனவரி 2ஆம் தேதி மதியம் முதல், திமுகவுக்கு எதிரான பிரச்சாரம் சமூக ஊடகங்களில் பரவலாகத் தொடங்கியது. இரண்டு நாட்கள் முடிந்தும் அது இன்னும் நிற்பதாகத் தெரியவில்லை.

இதில் குறிப்பாக, நாம் தமிழர் கட்சியினர் ஏராளமானவர்கள் பங்கெடுத்துள்ளனர். பொதுவாக, இணையம் தரும் கட்டற்ற சுதந்திரம் இப்படியான விவாதங்களில் வைக்கப்படும் வார்த்தைகளை வரம்பில்லாமலும் கொண்டுசெல்வது வழக்கம். ஆனால் இந்த முறை திமுகவுக்கு எதிராக நறுக்கெனக் கேள்விகளை முன்வைக்கிறார்கள், எதிர்ப்பியக்கத்தில் உள்ள திமுக எதிர்ப்புக்காரர்கள்.

இதனிடையே இணையத்தில் திமுகவுடன் நேரெதிராக மல்லுக்கட்டிக்கொண்டிருக்கும் நாம் தமிழர் கட்சியினர், ஆர்வம் கொப்பளிக்க, டி.ஆர்.பாலுவுக்கு எதிரான பிரச்சாரத்தைத் தீவிரமாக்கி வருகிறார்கள்.

வழக்கமாக, நா.த.க ஆட்களுக்கு பாய்ந்து பாய்ந்து பதிலடி கொடுக்கும் தி.மு.க. இணையத்தரப்பு வாதிகளோ, இதில் கனத்த மௌனம் காக்கிறார்கள். முக்கிய புள்ளிகள் பலரும் தங்களின் பழைய கோபேக் மோடி முழக்க வாசகங்களை அகற்றியும் மறைத்தும் வருகிறார்கள். அதைப் பற்றியும் மீண்டும் தனியாக பிரச்சாரத்தைச் செய்துவருகிறார்கள், எதிர்த் தரப்பில்.

இதன் நிறைவாக, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, திமுகவைப் பற்றி சொன்ன கமெண்ட்டை புதிய டிரெண்ட் ஆக அவர்கள் இணைத்துப் பரப்பிக்கொண்டு இருக்கிறார்கள்.

இரண்டு நாள்களாக சமூக ஊடகத்தில் களைகட்டிவரும் ‘கோபேக் மோடி’ கோஷத்துடன், ‘அதைக் கைவிட்ட திமுக’ என்கிற பிரச்சாரமும் பிரதமர் வந்துபோகும்வரை தூக்கலாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

**-முருகு**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *