மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 5 ஜன 2022

தாய்மண்: வெளிநாடுவாழ் தமிழர்களின் மூலம் புதிய திட்டம்!

தாய்மண்: வெளிநாடுவாழ் தமிழர்களின் மூலம் புதிய திட்டம்!

புத்தாண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் இன்று (ஜனவரி 5) ஆளுநர் உரையுடன் தொடங்கியது. காலை 10 மணிக்கு தொடங்கிய பேரவைக்கூட்டம், முற்பகல் 11.30 மணியளவில் நிறைவுபெற்றது.

தமிழ்நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வசித்துவரும் தமிழர்கள் மூலம் மாநிலத்தை மேம்படுத்த, புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

“ஜனவரி 12 அன்று அயலகத் தமிழர் நாள் இனி ஆண்டுதோறும் கொண்டாடப்படும். அயலகத் தமிழர்களுக்கு தாய்த் தமிழக உறவு வலுப்படுவதுடன், தமிழ்நாட்டுக்கு அதிக அளவில் முதலீடுகளை ஈர்க்கவும் உதவும். அயலகத் தமிழர்கள் அவர்களின் சொந்த ஊர்களில் கட்டமைப்புகளின் மேம்பாட்டுக்கு உதவுவதற்கு ’தாய் மண்’ திட்டம் வழிவகை செய்யும்.

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் திட்டத்தின் மூலம் தமிழ்ப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் புதிய வழிகாட்டி நெறிமுறைகள் வகுக்கப்படும். தமிழ்வழியில் படிக்கும் மாணவர்களுக்காக மருத்துவம், பொறியியல் போன்ற படிப்புகளுக்கான 100 பாடப்புத்தகங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுவருகின்றன.” என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற பல முக்கிய அம்சங்கள்

* இலவச கால்நடை மருத்துவ வசதிகளை வழங்க, குறிப்பாக தொலைதூர கிராமங்களில் 7, 760 சிறப்பு கால்நடை மருத்துவ விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படும்.

* கொரோனா காலத்தில் ஏற்பட்ட கற்றல் இழப்பைச் சரிசெய்ய 12 மாவட்டங்களில் இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் மூலம் இதுவரை 80 ஆயிரத்து 138 மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

* இடைநின்ற குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்துவருவதற்காக பெருமளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பல்வேறு துறைகளைச் சார்ந்த 80 ஆயிரம் அலுவலர்களைப் பயன்படுத்தி, ஜிபிஎஸ் செயலி மூலமாக முறையாகக் கணக்கெடுத்து ஒரு இலட்சத்து 73 ஆயிரத்து 792 குழந்தைகள், அவர்களின் வயதுக்கு ஏற்ற வகுப்புகளில் வெற்றிகரமாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

* மாநிலக் கல்வி அமைப்பின் முதுகெலும்பாகத் திகழும் அரசுப் பள்ளிகளை நவீனமாக்கிட ஒரு மாபெரும் திட்டம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் செயல்படுத்தப்படும்.

* 24ஆயிரத்து 345 அரசுத் தொடக்கப் பள்ளிகள் அனைத்திலும் ஸ்மார்ட் வகுப்பறைகள், புதிய கட்டடங்களிலும், 6ஆயிரத்து 992 நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் உயர்தொழில்நுட்பக் கணினி ஆய்வகங்கள், நவீன அறிவியல், மொழி ஆய்வகங்கள், அனைத்து பள்ளிகளுக்கும் அகன்ற அலைக்கற்றை இணையவசதி, தூய்மைப் பராமரிப்புடன் சுகாதார வளாகங்களும் உருவாக்கப்படும்.

* நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டம் தொடங்கப்பட்டு இதுவரை 31, 620 பேருக்கு வேலைக்கான அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

* கொரோனா தொற்றால் பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு மின்விசை நிதிநிறுவனத்தில் தலா 5 இலட்சம் ரூபாய் வைப்புநிதியாக அரசு வைத்துள்ளது. இதுவரை 287 குழந்தைகள் பயனடைந்துள்ளனர். பெற்றோரில் ஒருவரை இழந்த 7, 513 குழந்தைகளுக்கு தலா மூன்று இலட்சம் ரூபாய் உடனடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

* இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு, கோயில்களுக்குச் சொந்தமான ஆயிரத்து 628.61 கோடி ரூபாய் மதிப்புள்ள 432.82 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

* பொதுவாக நுழைவுத்தேர்வுகள் கிராமப்புற மாணவர்களுக்கு சமனற்ற தளத்தையும் பாதிப்புகளையும் ஏற்படுத்துகின்றன. எனவே, தொழிற்படிப்புகளில் மாணவர்களின் சேர்க்கைக்கு நீட் போன்ற நுழைவுத்தேர்வுகள் தேவையற்றவை எனும் இந்த அரசின் நிலைப்பாட்டை தொடர்ந்து வலியுறுத்துவோம் என்றும் ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

-முருகு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

10 நிமிட வாசிப்பு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் ...

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் திட்டம்!

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

புதன் 5 ஜன 2022