மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 5 ஜன 2022

ராஜேந்திர பாலாஜி கைது!

ராஜேந்திர பாலாஜி கைது!

ஆவினில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த ராஜேந்திர பாலாஜி இன்று (ஜனவரி 5) கைது செய்யப்பட்டார்.

ஆவின் உள்ளிட்ட அரசு துறைகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி 3 கோடி ரூபாய் பணமோசடி செய்ததாக முன்னாள் பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது, விருதுநகரைச் சேர்ந்த ரவீந்திரன் மற்றும் விஜய நல்லதம்பி ஆகியோர் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் பேரில் ராஜேந்திர பாலாஜி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கில் கைது நடவடிக்கையைத் தவிர்க்க ராஜேந்திர பாலாஜி முன் ஜாமின் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இவ்வழக்கில் கடந்த டிசம்பர் 17ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய நீதிபதி நிர்மல்குமார் ராஜேந்திர பாலாஜியின் மனுவைத் தள்ளுபடி செய்தார். அன்றைய தினம் விருதுநகரில் திமுக அரசுக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த நிலையில் தீர்ப்பு வெளியானதும் தலைமறைவானார் ராஜேந்திர பாலாஜி.

இதனால் அவரை தேட விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் கணேஷ் தாஸ் தலைமையில் மொத்தம் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. டெல்லி, கேரளா, பெங்களூரு, சென்னை, கோவை, திருச்சி என பல்வேறு இடங்களுக்கும் சென்று தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.

அதுபோன்று, முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனின் உதவியாளர் பொன்னுவேல் மற்றும் ஓட்டுநர் ஆறுமுகம் இருவரும் தொடர்ந்து ராஜேந்திர பாலாஜியுடன் இருந்தது போலீசார் கண்காணிப்பில் தெரியவந்தது.

அவர்களோடு ராஜேந்திர பாலாஜி ஜோலார்பேட்டை வரை காரில் சென்றதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து பொன்னுவேலுவை அழைத்து சென்று கடந்த டிசம்பர் 29ஆம் தேதி தர்மபுரி மாவட்டத்தில் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை செய்தனர். அப்போது, “ராஜேந்திர பாலாஜி தர்மபுரி வந்தது உண்மைதான். ஆட்சியர் அலுவலகம் எதிரில் அரை மணி நேரம் காரில் இருந்தபடி பேசிவிட்டுப் புறப்பட்டு விட்டார். கே.பி. அன்பழகனின் ஓட்டுநர் ஆறுமுகம் தான் அழைத்து வந்தார்” என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

இதுபோன்று அடிக்கடி தங்கியிருக்கும் இடத்தை மாற்றி, காரில் சுற்றி வந்த ராஜேந்திர பாலாஜி இன்று கர்நாடாகாவில் கைது செய்யப்பட்டார்.

கர்நாடகாவில் உள்ள ஹாசன் என்ற பகுதியில் பி.எம்.சாலையில் காரில் சென்றுகொண்டிருந்தபோது ராஜேந்திர பாலாஜியை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். அதுதொடர்பான வீடியோ ஒன்றும் தற்போது வெளியாகியுள்ளது.

“கர்நாடகாவில் உள்ள ஒரு அரசியல் பிரமுகர் உதவியோடு ராஜேந்திர பாலாஜி இடம் மாறிக்கொண்டிருந்தார் என்றும் அவர் இன்று ஹாசன் செக் போஸ்ட்டை கடந்த போது சிசிடிவியில் பதிவான காட்சிகளைக்கொண்டு பின்தொடர்ந்து சென்று கைது செய்ததாகவும்” போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

தொடர்ந்து அவரை தமிழகத்துக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளையும் போலீசார் மேற்கொண்டுள்ளனர்.

முன் ஜாமின் கேட்டு ராஜேந்திர பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

-பிரியா

டிஜிட்டல் திண்ணை: விலைபோய் விடாதீர்கள்-கமல் உருக்கம்!

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  விலைபோய் விடாதீர்கள்-கமல்  உருக்கம்!

முருகன் மேல் பாசம் உண்டு: மணமேடையில் ஸ்டாலின் சிலேடை!

12 நிமிட வாசிப்பு

முருகன் மேல் பாசம் உண்டு: மணமேடையில் ஸ்டாலின் சிலேடை!

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

புதன் 5 ஜன 2022