மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 5 ஜன 2022

நகர்ப்புறங்களில் நாய்க்கடித் துயரம் - அமைச்சரை இரவில் அலையவைத்த வீடியோ!

நகர்ப்புறங்களில் நாய்க்கடித் துயரம் - அமைச்சரை இரவில் அலையவைத்த வீடியோ!

சரிபாதி அளவு நகர்மயமாகிவிட்ட தமிழ்நாட்டில் இரவு நேரங்களில் நாய்க்கடி தொல்லை பரவலாகக் காணப்படுகிறது. குறிப்பாக, மார்கழி மாதத்தையொட்டி ஏராளமானவர்கள் நாய்க்கடிக்கு ஆளாகிவருகின்றனர்.

அண்மையில், கடலூர் மாவட்டம் நெய்வேலியில் நிகழ்ந்த நாய்க்கடி பாதிப்பு இப்போது பரவலாக கவனத்தை ஈர்த்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுவனை அமைச்சர் நேரில் சென்று பார்த்ததால், இந்த ஒரு சம்பவத்துக்கு முக்கியத்துவம் கிடைத்தது.

கடந்த 30ஆம் தேதியன்று மூன்று வயது சிறுவன், அங்குள்ள பூங்காவில் தாத்தாவுடன் விளையாடச் சென்றான். அப்போது, தாத்தா தண்ணீர்க் குடுவையை எடுக்கச்சென்ற சமயத்தில் அந்தச் சிறுவனை நாய்கள் கடித்தன. மிரண்டுபோய் கத்திய சிறுவனை பல நாய்களும் கடித்துக் குதறியதில் அவன் படுகாயம் அடைந்தான்.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்தச் சிறுவனுக்கு 60 தையல்கள் போடப்பட்டன. புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் அந்தச் சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. குழந்தையின் அவதியைப் பார்த்து துயரமடைந்த அவனுடைய தாய் தமிழரசி, யாருக்கும் இப்படியொரு துன்பம் நேரக்கூடாது என்றும் அரசாங்கம் இது தொடர்பாக தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் குறிப்பாக முதலமைச்சர் ஸ்டாலின் இதில் உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரிக்கைவிடுத்தார்.

தமிழரசி பேசிய காணொலி சமூக ஊடகங்களில் பரவலானது. அது, முதலமைச்சர் ஸ்டாலினின் கவனத்துக்கும் சென்றதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சிறுவனைச் சென்று பார்க்குமாறு அமைச்சர் சி.வி. கணேசனிடம் அறிவுறுத்தினார்.

அதன்படி, அமைச்சர் கணேசன் நெய்வேலியில் உள்ள குழந்தையின் தாத்தா வீட்டுக்குச் சென்றுபார்த்தார். ஆனால், குழந்தையின் பெற்றோர் அவனை ஒசூரில் உள்ள தங்கள் வீட்டுக்கு கூட்டிச்சென்றுவிட்டனர். உடனே அமைச்சரும் இரவோடு இரவாக அங்கிருந்து ஒசூருக்குச் சென்றார்.

கடந்த ஜனவரி 3ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு ஒசூரை அடைந்த அவர், பின்னர் சிறுவனின் வீட்டுக்குச் சென்றார். பாதிக்கப்பட்ட சிறுவனை நேரில் பார்த்து, அவனுடைய பெற்றோர் தமிழரசி - சேகர் ஆகியோரிடம் குழந்தையைப் பற்றி கேட்டறிந்தார். குழந்தையின் சிகிச்சைக்கான அரசின் உதவியையும் அவர் வழங்கினார்.

சென்னை

முன்னதாக, சென்னையை அடுத்த பூவிருந்தவல்லி அருகே கடந்த ஆகஸ்ட்டில் ஏழு வயது சிறுவன் மோனிஷ், நாய்கடித்ததில் படுகாயம் அடைந்தான். அந்தச் சிறுவனைக் கடித்த நாய்க்கு வெறி நோய் இருந்ததால், அவனுக்கும் அந்த பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் சென்னை, எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் அவன் உயிரிழந்தான்.

கோவை

கோவை நகரில் மட்டும் 2020 ஆம் ஆண்டில் நாய்க்கடியால் பாதிக்கப்பட்ட 12 வயதுக்கும் குறைவான 500 குழந்தைகள், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். அவர்களில் 350 பேர் கடுமையான காயம் அடைந்தவர்கள் என்று அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

தலைநகர் சென்னையில் கடந்த அக்டோபர் மாதத்தில் அரசு மருத்துவக் கல்லூரி சார்பில் எடுக்கப்பட்ட மாதிரி ஆய்வு ஒன்றில், 50 சதவீத நாய்களுக்கு வெறிநோய்த் தடுப்பூசி செலுத்தப்படவில்லை என்பது தெரியவந்தது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், சென்னை மாநகராட்சியின் சார்பில் வெறிநாய்க் கடியின் பாதிப்பைத் தடுக்கும்வகையில், நாய்களுக்கு வெறிநோய்த் தடுப்பூசி செலுத்தப்பட்டது. மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்ட புறநகர்ப் பகுதிகளிலும் சேர்த்து, 15 மண்டலங்களிலும் சேர்த்து 68 ஆயிரம் நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதைப்போல மீண்டும் ஒரு தடுப்பூசி இயக்கம் மேற்கொள்வதன் அவசியம் எழுந்துள்ளது.

நகர்ப்புறங்களில் அதிகரித்துவரும் நாய்க்கடி பிரச்னைக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும் என்று மாநிலம் முழுவதும் இரண்டு மாதங்களாக கோரிக்கைகள் எழுந்துவருகின்றன.

-முருகு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

10 நிமிட வாசிப்பு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் ...

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் திட்டம்!

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

புதன் 5 ஜன 2022