மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 5 ஜன 2022

ஆளுநர் உரை- ஆயிரம் தொகை: சட்டமன்றம் ஏற்படுத்தும் எதிர்பார்ப்பு!

ஆளுநர் உரை- ஆயிரம் தொகை: சட்டமன்றம்  ஏற்படுத்தும் எதிர்பார்ப்பு!

தமிழ்நாடு சட்டமன்றத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடர் இன்று (ஜனவரி 5) சென்னை கலைவாணர் அரங்கத்தில் கூடுகிறது.

கடந்த மே மாதம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வந்து திமுக ஆட்சிஅமைத்து மு.க.ஸ்டாலின் முதல்வரான நிலையில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக இருந்தது. அதனால் முந்தைய ஆட்சியில் பின்பற்றியது போலவே சட்டமன்றத்தை சமூக இடைவெளியோடு நடத்துவதற்காக கலைவாணர் அரங்கத்திலேயே நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன் பின் தமிழ்நாடு அரசின் உறுதியான நடவடிக்கைகளாலும் மக்களின் ஒத்துழைப்பாலும் கொரோனா கட்டுக்குள் வந்த நிலையில்... புத்தாண்டுக்கான சட்டமன்றக் கூட்டத் தொடரை வழக்கம்போல செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலேயே நடத்தலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. கடந்த டிசம்பர் 13 ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு, ‘ஜனவரி 5 ஆம் தேதி 2022 ஆம் ஆண்டுக்கான சட்டமன்றத்தின் முதல் கூட்டத் தொடர் தொடங்கும். கொரோனா கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதால் இந்தத் தொடர் செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலேயே நடைபெறும்”என்று அறிவித்தார்.

நீண்ட இடைவேளைக்குப் பின், பாரம்பரிய பெருமை மிக்க கோட்டையில் அமைந்திருக்கும் சட்டமன்றத்துக்குள் முதல் முறையாக பங்கேற்கலாம் என்று முதல்வர் ஸ்டாலின் முதல் மற்ற உறுப்பினர்கள் வரை ஆர்வமாய் இருந்த நிலையில்தான்....தற்போதைய ஒமிக்ரான் தொற்று எண்ணிக்கை அதிகரிப்பால் மீண்டும் கலைவாணர் அரங்கிலேயே கூடுகிறது சட்டமன்றம்.

இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றித் தொடங்கி வைப்பது மரபு. பொதுவாகவே ஆளுநர் உரை என்பது மாநில அரசாங்கத்தின் கொள்கை சார்ந்த, செயல் திட்டங்கள் சார்ந்த உரையாகவே அமையும். இதுதான் வழக்கம். அதேநேரம் இன்று நடக்க இருக்கும் ஆளுநர் உரை, அரசாங்கத்தின் உரையாக இருக்குமா அல்லது ஆளுநரின் திருத்தங்களுக்கு உட்பட்ட உரையாக இருக்குமா என்ற விவாதமும் அரசியல் அரங்கத்தில் எழுந்துள்ளது.

ஆர்.என். ரவி ஆளுநராக நியமிக்கப்படும்போதே, அவரது காவல்துறை பின்னணி பற்றிய சர்ச்சைகள் எழுந்தன. முதல்முதலில் இதை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரிதான் எழுப்பினார். அடுத்தடுத்து ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் இடையிலான உறவு பற்றிய வெவ்வேறு விதமான செய்திகள் வெளிவந்தன.

டிஜிபியை ஆளுநர் அழைத்துப் பேசியது. துறை சார்ந்த திட்டங்களின் நிலை குறித்து ஆளுநருக்கு அறிக்கை அனுப்பத் தயாராக வேண்டும் என்று தலைமைச் செயலாளர் துறைச் செயலாளர்களுக்கு அறிவுறுத்தியது போன்ற விஷயங்கள் மாநில அரசுக்கும் ஆளுநருக்கும் இடையிலான ’உறவு’ எப்படிப்பட்டது என்ற விவாதங்களை எழுப்பின. தை முதல் தேதியை தமிழ்ப் புத்தாண்டு என அறிவிப்பதற்கும் கூட ஆளுநர் எதிர்ப்பு தெரிவித்ததாகவே இன்றுவரை தகவல் பரவிக் கிடக்கிறது.

அதேநேரம் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில், ‘சக்திவாய்ந்த முதல்வரே’ என்று ஆளுநர் முதல்வரை விளித்து பேசியதும் அரசியல் அரங்கில் உற்று நோக்கப்பட்டது.

இந்தப் பின்னணியில் இன்றைய சட்டமன்றத்தில் ஆளுநரின் உரை, வழக்கம்போல தமிழக அரசின் உரையாகவே இருக்குமா அல்லது ஆளுநரின் தலையீடுகள், திருத்தங்களுடன் கூடிய உரையாக இருக்குமா என்பதை தமிழ்நாடு அறியக் காத்திருக்கிறது.

‘அரசியல் ரீதியான கருத்து வேறுபாடுகளை ஆளுநர் தன் உரையில் எதிரொலிக்க முடியாது. மாநில அரசின் உரையை ஆற்றுவதே அவருக்கு முன் உள்ள வாய்ப்பு’ என்று ஒரு சாராரும், ‘பாஜக ஆட்சியிலே ஆளுநர்களின் அரசியல் விளையாட்டுகள் ;பல மாநிலங்களில் வெளிப்படையாக நடந்து வருகின்றன. எனவே வழக்கம், மரபு என்பதையெல்லாம் ஆளுநர் ஆர்.என்.ரவி பின்பற்றாமலும் இருக்கக் கூடும்’ என்று இன்னொரு சாராரும் கருத்துகளை முன் வைக்கின்றனர்.

அதேநேரம் கடந்த ஜனவரி 3ஆம் தேதி சட்டமன்றத்தில் உரையாற்றுவதற்காக ஆளுநரை நேரில் சென்று அழைத்த சபாநாயகர் அப்பாவு, “அனைத்து ஆளுநர்களும் எப்படிச் சிறப்பாக பட்ஜெட் உரையை நடத்தினார்களோ. அதுபோன்று ஆளுநர் ஆர்.என்.ரவியும் சிறப்பாக நடத்துவார் , சட்டப்பேரவையை சுமுகமாக நடத்துவதற்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு கொடுக்கிறார்கள். ஏற்கனவே நடந்த கூட்டத்தொடரின் போது எதிர்க்கட்சித் தலைவர்கள், உறுப்பினர்கள் எல்லோருமே சட்டப்பேரவை செயல்பாட்டை மிகவும் பாராட்டினர். கடந்த ஆண்டு ஒத்துழைப்பு கொடுத்தது போல் இந்த ஆண்டும் ஒத்துழைப்பு கொடுப்பார்கள். இன்று ஆளுநரைச் சந்தித்த போது கூட அவர் நமது முதல்வரைப் பாராட்டிப் பேசினார்” என்று கூறியிருந்தார்.

இந்த பின்னணியில்தான் இன்றைய தமிழ்நாடு சட்டமன்றம் கூடுகிறது. இதையெல்லாம் தாண்டி இந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் தேர்தல் வாக்குறுதி தொடர்பான சில முக்கிய அறிவிப்புகளை முதல்வர் வெளியிடலாம் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

பொங்கல் பரிசுத் தொகையில் ரொக்கத்தை சேர்க்கச் சொல்லி எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியும் அதற்கு இசையவில்லை தமிழக முதல்வர். இந்த நிலையில் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தது போன்று, ‘பெண்களுக்கான் உரிமைத் தொகை மாதம் ஆயிரம் ரூபாய்’ அறிவிப்பு இந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் அறிவிக்கப்படலாம் என்று கோட்டை வட்டாரத்தினர் குறிப்பு கொடுக்கிறார்கள். நிதி நெருக்கடி காரணமாக, பயனாளிகள் தேர்வில் கடுமையான நிபந்தனைகளோடு இந்த வாக்குறுதி செயல்படுத்தப்படலாம் என்கிறார்கள்.

ஆளுநர் உரையும், ஆயிரம் தொகையும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. அடுத்தடுத்து உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இந்த சட்டமன்றக் கூட்டத் தொடர் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது.

-ஆரா

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ...

4 நிமிட வாசிப்பு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ஆபரேஷன்

டிஜிட்டல் திண்ணை: சசிகலா- தினகரன் இடைவெளி: தூது போன குடும்பப் ...

7 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சசிகலா- தினகரன் இடைவெளி: தூது போன குடும்பப் பிரமுகர்!

புதன் 5 ஜன 2022