மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 4 ஜன 2022

துப்பாக்கிக் குண்டு பாய்ந்த புதுக்கோட்டைச் சிறுவன் உயிரிழப்பு!

துப்பாக்கிக் குண்டு பாய்ந்த புதுக்கோட்டைச் சிறுவன் உயிரிழப்பு!

புதுக்கோட்டையில் தலையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தமலை அருகே அம்மாசத்திரம் என்ற கிராமம் உள்ளது. இங்கு அரசு துப்பாக்கிச் சுடும் பயிற்சி மையம் உள்ளது. இந்த மையத்தில் மத்திய மாநில காவல் துறையினர் துப்பாக்கி சுடும் பணியில் ஈடுபடுவார்கள்.

அதுபோன்று கடந்த டிசம்பர் 30ஆம் தேதி துப்பாக்கிச் சுடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இந்தப் பயிற்சி மையத்தையும் தாண்டி இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நார்த்தமலை கிராமத்தில் தனது வீட்டில் சாப்பிட்டுக்கொண்டிருந்த சிறுவன் புகழேந்தி தலையில் தோட்டா பயந்தது. இதனால் படுகாயம் அடைந்த சிறுவன் கீரனூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

அங்கு சிறுவனுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிறுவனின் நிலைமை கவலைக்கிடமானது. இதையடுத்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

அங்கு சிறுவனின் மூளைக்கு அருகே தோட்டா பாய்ந்து இருப்பதாக மருத்துவக்குழுவினர் தெரிவித்தனர். அந்த தோட்டா அகற்றப்பட்டுத் தொடர்ந்து சிறுவனுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தொடர்ந்து நான்கு நாட்களாகத் தீவிர சிகிச்சை பெற்று வந்த சிறுவன் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சிறுவன் உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினரும் உறவினர்களும் சிறுவனின் உயிர் இழப்புக்கு நீதி கேட்டு மருத்துவமனைக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது சிறுவனின் தாய், 'எப்படியும் கண் முழித்துவிடுவான் என்று நம்பிக்கையிலிருந்தேன். மீண்டு வந்து அம்மா என அழைப்பான் என்று காத்துக்கொண்டிருந்தேன். ஆனால் கடைசி வரைக்கும் கண் முழிக்காமலே போயிட்டானே’ என்று கதறி அழுதது அங்கிருந்தவர்களைச் சோகத்தில் ஆழ்த்தியது.

இந்த நிலையில் இத்துயர சம்பவத்தை அறிந்து மிகவும் வேதனை அடைந்ததாகச் சிறுவனின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இச்சம்பவத்துக்கு காரணமானவர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் விசாரணையின் முடிவில் சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே புதுக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. அதே சமயத்தில் சம்பந்தப்பட்ட துப்பாக்கிச் சுடும் தளத்தைத் தற்காலிகமாக மூடவும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

-பிரியா

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

பிரதமர் பேச்சில் தடுமாற்றம் ஏன்? உண்மை இதோ...

6 நிமிட வாசிப்பு

பிரதமர் பேச்சில் தடுமாற்றம் ஏன்?   உண்மை இதோ...

செவ்வாய் 4 ஜன 2022