மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 4 ஜன 2022

அம்மா கிளினிக்குகள் மூடல்: ஈபிஎஸ், டிடிவி கண்டனம்!

அம்மா கிளினிக்குகள் மூடல்: ஈபிஎஸ், டிடிவி கண்டனம்!

அம்மா கிளினிக்குகள் மூடப்படும் என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்த நிலையில், இதற்கு ஈபிஎஸ், டிடிவி தினகரன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் 2000 மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டன. இதில் அந்தந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தற்போது திமுக ஆட்சி அமைத்துள்ள நிலையில், அம்மா கிளினிக்குகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வேப்பேரி பெரியார் திடலில் கொரோனாவுக்கான சித்த மருத்துவ சிறப்பு மையத்தைத் திறந்து வைத்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், அம்மா கிளினிக்குகள் தொடங்கும் போதே, ஓராண்டுக்காலம் என்ற அடிப்படையில் தற்காலிக அமைப்பாகத்தான் தொடங்கப்பட்டிருக்கிறது. 1820 மருத்துவர்கள் மட்டுமே நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்கள். செவிலியர்கள் கூட நியமிக்கப்படவில்லை.

இங்கு பணிபுரிந்த மருத்துவர்கள் எல்லாம் இரண்டாம் அலைக்குச் சிகிச்சை அளிக்க பயன்படுத்திக்கொள்ளப்பட்டார்கள். தற்போது மார்ச் 31 வரை அவர்களுக்குப் பணி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள்.

அம்மா கிளினிக்குகளை திறந்திருக்கிறார்களே தவிர, பயன்பாட்டிலிருந்ததா என்பதுதான் கேள்வி. அது தற்காலிக அமைப்பு என்பதால் மனிதாபிமான அடிப்படையில் கிளினிக்குகளில் வேலை செய்த மருத்துவர்களுக்குப் பணி வழங்கப்பட்டிருக்கிறது. இத்திட்டம் முடிந்துவிட்டது” என்று தெரிவித்தார்.

அம்மா கிளினிக்குகள் திட்டம் முடிந்துவிட்டதாக அமைச்சர் தெரிவித்ததற்குக் கண்டனம் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, "ஏழை, எளிய மக்கள் கிராமப்புறங்களிலும், நகரப் பகுதிகளிலும், தாங்கள் குடியிருக்கும் பகுதிக்கு அருகிலேயே சிகிச்சை பெறுவதற்காக அம்மா மினி கிளினிக் திட்டம் துவங்கப்பட்டது. இத்திட்டத்திற்கு ஜெயலலிதா பெயர் சூட்டப்பட்டுள்ளது என்ற ஒரே அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன், இத்திட்டம் இந்த விடியா அரசால் மூடப்படுகிறது என்ற அறிவிப்பு வன்மையான கண்டனத்திற்குரியது. ஏழை எளிய மக்களின் நலனில் அக்கறையில்லாத அரசு என்பதை இந்த விடியா அரசு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், "அரசியல் காழ்ப்புணர்ச்சியால் மேற்கொள்ளப்படும் இத்தகைய நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. அந்த கிளினிக்குகள் ஓராண்டு திட்டமாக ஆரம்பிக்கப்பட்டதாக அமைச்சர் கூறியிருப்பது உண்மையாக இருந்தாலும்கூட மக்கள் நலன் கருதி அவற்றை நீட்டித்துச் செயல்படுத்தக் கூடாதா? அப்படிச் செய்வதுதானே ஓர் அரசாங்கத்தின் சரியான பணியாக இருக்க முடியும்?. அம்மா பெயரிலான திட்டங்களை எல்லாம் மூடுவதிலேயே தி.மு.க. அரசு குறியாக இருப்பது தவறானது. அம்மா மினி கிளினிக்கை தொடர்ந்து, ஏழை, எளிய மக்களின் பசியாற்றி வரும் அம்மா உணவகங்களும் மூடப்படுமோ? என்ற கவலை ஏற்படுகிறது" என்று தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

-பிரியா

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

பிரதமர் பேச்சில் தடுமாற்றம் ஏன்? உண்மை இதோ...

6 நிமிட வாசிப்பு

பிரதமர் பேச்சில் தடுமாற்றம் ஏன்?   உண்மை இதோ...

செவ்வாய் 4 ஜன 2022