மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 4 ஜன 2022

நிகழாத புத்தகத் திருவிழா: தமிழின் உயிர்மூச்சான பதிப்புத் துறையை பாதுகாப்பது எப்படி?

நிகழாத புத்தகத் திருவிழா: தமிழின் உயிர்மூச்சான பதிப்புத் துறையை பாதுகாப்பது எப்படி?

ராஜன் குறை

மீண்டும் துவங்கிவிட்ட கொரோனா தொற்று அலையால் சென்னை புத்தக சந்தை என்று அழைக்கப்படும் புத்தகத் திருவிழா, ஜனவரி 6-ஆம் தேதி துவங்க இருந்தது, தமிழக முதலமைச்சரால் திறந்துவைக்கப்பட இருந்தது, அவ்விதம் துவங்கப்பெறாது என்று தெரிகிறது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளில் பணத்தை முதலீடு செய்துவிட்ட பதிப்பகங்கள் பல கடும் அதிர்ச்சியடைந்துள்ளன. ஏற்கனவே இரண்டாண்டுகளாக தொற்று பரவலால் பல இன்னல்களை அனுபவித்துவிட்ட பதிப்புத்துறை மீண்டெழ எத்தனிக்கும் போது மீண்டும் புத்தாண்டு தினத்தன்று ஒரு அதிர்ச்சி செய்தியாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னை புத்தக திருவிழா அல்லது சந்தை, புக் ஃபேர் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுவது, எந்த பெயரில் அழைக்கப்பட்டாலும் தமிழகத்தின் மிக முக்கியமான கலாசார நிகழ்வு என்றால் மிகையாகாது. இங்கே புத்தக விற்பனை மட்டும் நிகழ்வதில்லை. ஏராளமான பொதுமக்கள் புத்தகங்களின் இருப்பை, அளப்பரிய பன்மைத்துவம் கொண்ட எழுத்துச் செயல்பாட்டினை, அவற்றின் வெளிப்பாட்டினை அறிந்துகொள்கிறார்கள். நேரில் வரமுடியாதவர்களும்கூட தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்துகொள்கிறார்கள். எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், வாசகர்கள் எல்லாம் சந்தித்துக் கொள்கிறார்கள். உரையாடுகிறார்கள். பல்வேறு நிகழ்ச்சிகளும் விழா அரங்கத்தில் நடக்கின்றன. இப்படியாக எழுத்துலகம் உயிர்பெற்று எழுந்து அனைத்து மக்களுக்கும் காட்சி தரும் அருமையான நிகழ்வாக இது விளங்குகிறது. உரிய எச்சரிக்கையுடன், பாதுகாப்பு விதிகளுடன் இந்த விழா கூடியவிரைவில் நடக்குமென்றால் பதிப்பகங்கள் இழப்பிலிருந்து தங்களை காத்துக்கொள்ள முடியும். இந்த நேரத்தில் தமிழ் பதிப்புத்துறையை குறித்தும், அது சந்திக்கும் சவால்களை குறித்தும் நாம் சிந்திக்கவேண்டும்.

பதிப்புத்துறையின் முக்கியத்துவம் என்ன?

பதிப்புத்துறை என்பதை வர்த்தகம், தொழில் என்று மட்டும் காண முடியாது. அதில் வர்த்தகமும், தொழிலும் கலந்திருந்தாலும் அடிப்படையில் அது ஒரு சமூகத்தின் கலாசார வாழ்வின் உயிர்மூச்சு. தமிழ் சமூகம் நவீனமடைய துவங்கிய பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி, இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் எழுதப் படிக்க தெரிந்தவர்கள் சதவீதம் மிகவும் குறைவாக இருந்தது. தமிழ் சமூகத்தை ஒருங்கிணைக்கும் கலானுபவத்தை தருவதாக இசை நாடக மரபு தோன்றியது. இத்தாலிய ஓபரா போல தொடர்ந்து பாடல்களாலேயே கதையை நகர்த்திச்செல்லும் இந்த மரபு பெரும்பாலும் வள்ளி திருமணம் போன்ற புராண கதைகளையே அரங்கேற்றினாலும் அதில் சமகால செய்திகளும் நேரடியாகவும், மறைமுகமாகவும் இடம்பெற்றன. அச்சில் வெளிவந்த சிந்து முதலிய பாடல் வடிவங்களில் கதைகளை, செய்திகளை கூறும் முறையும் ஒருவர் வாசித்துப் பாட, பலர் கேட்பதை மனதில் கொண்டே உருவானதாகக் கூறலாம். இசை நாடகம் பாய்ஸ் கம்பெனி நாடகமாக, பின்னர் வசனம் பேசும் சமூக நாடகங்களும் தோன்ற, அதற்கிடையே ஊமையாக இருந்த திரைப்படம் பேசும் படமாக மாறியது. எழுத்தறிவு பரவலாகாத சமூகத்திற்கு நவீனத்தின் நுழைவாயில்களாக திரைப்படங்களே அமைந்தன. அதனூடாகவே உரைநடையும், சமூக அரசியல் சிந்தனைகளும் தமிழ் சமூகத்தில் பரவின.

இந்தியா சுதந்திரம் அடைந்தபிறகு பள்ளிக்கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, கிராமப்புறங்களில் ஆரம்பக் கல்விக்கூடங்கள் பரவலாக உருவாக்கப்பட்டன. காங்கிரஸ் ஆட்சியிலே துவங்கிய இந்த கல்விப் பரவலாக்கம், திராவிட இயக்க ஆட்சியிலே வேகம் கொண்டு, உயர் நிலைப்பள்ளிகளில் இரண்டாம் நிலைக் கல்வி, கல்லூரிகளில் மூன்றாம் நிலைக் கல்வி ஆகியவையும் பரவலாகத் துவங்கின. சுருக்கமாகச் சொன்னால் சுதந்திரமடைந்த எழுபத்தைந்து ஆண்டுகளில் கல்விப்பரவலில் முன்னணியில் இருக்கும் மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் விளங்குகிறது. பொருளாதார வளர்ச்சியில் மட்டுமன்றி, அதன்மூலம் மனித வள மேம்பாட்டினை சாதிப்பதிலும் தமிழகம் இந்திய மாநிலங்களில் முன்னணி வகிக்கிறது. இது நிகழக் காரணங்களில் ஒன்று, பதிப்புத்துறை என்றால் மிகையாகாது. பதிப்பக செயல்பாடுகளே மக்கள் மனங்களை விகசிக்கச்செய்யும் கவிதை நூல்களையும், உரை நடை ஆக்கங்களையும், பொது அறிவு புகட்டும் அருமையான பல நூல்களையும் மக்களிடையே கொண்டு சேர்த்தன. ஒன்பது வயதில் நான் “அருங்கலைச் செல்வர் நால்வர்” என்ற பெயரில் தாமஸ் ஆல்வா எடிசன், ஜகதீஷ் சந்திர போஸ் உள்ளிட்ட நான்கு அறிவியலாளர்களின் வாழ்க்கை வரலாற்று சுருக்கங்களை படித்தது என் மீது செலுத்திய தாக்கம் நினைவில் இருக்கிறது. யார் எழுதியது, எந்த பதிப்பகம் என்பது மறந்துவிட்டது. என் உறவினர் ஒருவர் கொடுத்தார். அதேபோல ஆல்பர்ட் ஷ்வைட்சரின் வாழ்க்கை வரலாற்றையும் ஒரு சிறு நூலாக தமிழில் படித்தேன். இவை உதாரணங்கள் மட்டுமே.

திராவிட இயக்கம்

தமிழகத்தின் கல்விப் பரவலுக்கும், மனித வள மேம்பாட்டிற்கும் முக்கிய காரணம் வெகுஜன அரசியல் இயக்கமாக இருந்த திராவிட இயக்கம் அறிவியக்கமாகவும் இருந்ததுதான். சுயமரியாதை இயக்கமாகவும், திராவிடர் கழகமாகவும், திராவிட முன்னேற்ற கழகமாகவும் வடிவங்கள் கண்ட இயக்கம் ஏராளமான எழுத்தாளர்களையும், ஏடுகளையும், நூல்களையும் உருவாக்கியது. நவீன சிந்தனைகளின் அடிப்படைகளை புனைவின் மூலமாகவும், உரை நடை எழுத்து வடிவங்கள் மூலமாகவும் மக்களிடையே கொண்டு சேர்த்தன இந்த இயக்கங்கள். திராவிட இயக்கத்தவர்கள் பிள்ளைகளுக்கு சாக்ரடீஸ் என்றும், ரூஸோ என்றும் பெயர்களை வைத்தார்கள். வெகுஜன தளத்தில் சிந்தனையாளர்கள் மீதும், அறிவியக்கத்தின் மீதும் திராவிட இயக்கம் மக்களை ஈர்த்ததன் சான்றுகள்தாம் இந்தப் பெயர்கள். அதற்குக் காரணமாக பதிப்புச் செயல்பாடே விளங்கியது. எண்ணற்ற சிறு நூல்கள் எழுதப்பட்டன, அச்சிடப்பட்டன. பயிர்களுக்கு இட்ட உரம் போல நவீன தமிழகத்திற்கு உரமிட்டவையாக அந்த நூல்கள் இருந்தன. விளைந்த பயிரில் உரத்தினை நாம் காண முடியாதது போல, தங்கள் அரும் உழைப்பை நல்கிய அந்த ஏராளமான எழுத்தாளர்களும், பதிப்பாளர்களும் சமூக நினைவில் இடம்பெறாதவர்களாக உள்ளார்கள். திராவிட இயக்க தலைவர்களாக உருவானவர்களை அறிவோம். தலமட்டத்தில் இயங்கியவர்கள் எத்தனையோ பேர். அத்தனை குரல்களை, சிந்தனைகளை அச்சிட்டு மக்களிடையே கொண்டு சென்றது பதிப்புத்துறை.

நூலக வலைப்பின்னல்

என்னுடைய வளரும் பள்ளி பருவத்தில் எழுபதுகளில் அரசு நூலகங்களின் வலைப்பின்னல் சிறப்பாக விளங்கியது. திராவிட ஆட்சி அதற்கு ஆக்கமும், ஊக்கமும் அளித்தது. நூலக வசதியில்லாத அரசு மானியம் பெறும் தனியார் பள்ளி ஒன்றில் படித்த எனக்கு கிளை நூலகங்களே உலகின் சாளரமாக இருந்தன. புனைவிலக்கியத்தை, நாவல்களை அதிகம் படித்தாலும், கூடவே கலைக்களஞ்சியங்களையும், வரலாற்று நூல்களையும், பொது அறிவு நூல்களையும் கிளை நூலகங்களில் படிக்கும் பழக்கம் எனக்கு இருந்தது. உதாரணத்திற்கு சொல்லவேண்டும் என்றால் கா.அப்பாதுரையார் எழுதிய “தென்னாட்டு போர்க்களங்கள்” என்ற நூலை முழுமையாக ஒருமுறைக்கு இருமுறை படித்தேன். தமிழ் மன்னர்களிடையே நிகழ்ந்த போர்களை குறித்த செய்திகள் என்னுள் தீவிர சிந்தனையை உருவாக்கியது. போர்களை வெறும் வீரம், சாகசம் என்று பார்க்கமல் அதற்கான அரசியல் தேவை என்ன என்று யோசிக்க வைப்பதாக அந்த நூல் விளங்கியது.

பிற்காலத்தில் 2010-ஆம் ஆண்டு நான் கிராமங்களில் கள ஆய்வு மேற்கொண்டபோது கலைஞர் ஆட்சியின் முன்னெடுப்பால் கிராமங்களில் சமூக நூலகங்கள் அமைக்கப்பட்டிருப்பதை கண்டேன். விழுப்புரம் மாவட்டத்தின் குக்கிராமம் ஒன்றில் காலச்சுவடு வெளியிட்ட சுந்தரராமசாமியின் “புளியமரத்தின் கதை” நூலை நான்கைந்து பேர் எடுத்துப் படித்திருப்பதை பதிவேட்டில் கண்டேன். மனம் பெரிதும் உவகை கொண்டது. என்றாவது ஒரு நாள் அவர்களில் ஒருவர் அந்த நூல் குறித்த என் விமர்சனத்தையும் வாசிக்கக் கூடும். திராவிட முன்னேற்ற கழகம் தன் பெயரிற்கு ஏற்றாற்போல ஒவ்வொரு காலகட்டத்திலும் தொடர்ந்து தமிழ்ச் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு வித்திட்டு வந்துள்ளது என்பதற்கு இந்த கிராமப்புற நூலகங்கள் என்ற முன்னெடுப்பு ஒரு உதாரணம்.

பதிப்புத்துறை இன்று சந்திக்கும் சவால்கள்

தமிழ் சமூகம் பொருளாதார ரீதியில் வளர்ந்ததன், அதனுடன் இணைந்த மனித வள மேம்பாட்டின் பலன் அந்த வளர்ச்சிக்கு ஒரு பக்கபலமாக இருந்த, காரணமாக இருந்த, பதிப்புத்துறைக்கு இன்னம் கிடைக்கவில்லை. கிட்டத்தட்ட இரண்டு கோடி குடும்பங்கள், இல்லங்கள் உள்ள தமிழகத்தில் சராசரியாக ஒரு புத்தகம் ஐநூறு பிரதிகள் விற்குமா என்பதே கேள்விக் குறியாகத்தான் இருக்கிறது. இன்று அனேகமாக சமூகத்தின் முழுமைக்கும் எழுத்தறிவு உண்டு. மூன்றாம் நிலையான கல்லூரிக்கல்வியே கணிசமானவர்களுக்கு கிடைக்கிறது. ஆனாலும் வாசிப்புப் பழக்கம் வேரூன்றாதது, புத்தகங்களுக்கு விலை கொடுத்து வாங்குமளவு பொருளாதார தன்னிறைவை பெரும்பாலான குடும்பங்கள் அடையாமலிருப்பது போன்ற காரணங்களால் மக்கள் தொகையும், கல்வி கற்றவர்களின் எண்ணிக்கையும் பெருகிய அளவு நூல்கள் விற்பனை பெருகவில்லை. இதனால் கணிசமான இலாபத்தில் இயங்கும் பதிப்பகம் என்று ஒன்று இருக்குமா என்று தெரியவில்லை. நட்டத்தில் இயங்காமல், தங்கள் இருப்பை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளும் அளவு ஒரு சில பதிப்பகங்களால் இயங்க முடிகிறது. ஆனால் பெரும்பாலான பதிப்பகங்கள் ஆர்வத்திற்காகவும், அர்ப்பணிப்பினாலும் நடத்தப் படுகின்றனவே அல்லாமல் பொருளீட்டுவதற்காக நடத்தப்படுவதில்லை.

இது பதிப்பாளர்கள், புத்தக கடை உரிமையாளர்கள் தொடர்பான பிரச்சினை மட்டுமல்ல. இவ்வாறு நட்டத்திலோ, குறைந்த இலாபத்திலோ இயங்கும் பதிப்பகங்களால் எழுத்தாளர்களுக்கு உரிய சன்மானம் தரமுடிவது இல்லை. அதனால் தமிழில் எவ்வளவு ஆற்றல் மிகு எழுத்தாளரானாலும் அதை மட்டும் நம்பி வாழ முடியுமா என்பது கேள்விக்குறிதான். மிக, மிக எளிமையாக சன்னியாசி போல வேண்டுமானால் வாழலாமே தவிர, ஒரு குடும்பத்தை நல்லபடி நடத்தி பிள்ளைகளை வளர்க்குமளவு எழுத்தின் மூலம் பொருளீட்ட முடியாது. ஆனால் பொருளாதார ரீதியாக வளர்ந்த மேலை நாடுகளில் இது சாத்தியம். ஓரு நூல் பத்தாயிரம் பிரதிகள், இருபதாயிரம் பிரதிகள் விற்குமென்றால் அதிலிருந்து கிடைக்கும் சன்மானத்தில் எழுத்தாளர்கள் வாழ முடியும். ஒரு இலட்சம் பிரதிகள் விற்றால் பதிப்பகங்கள் முன்பணம் கொடுத்து வாங்கிக்கொள்வார்கள். ஆனால் அத்தகைய நிலை ஒரு கனவாகத்தான் தமிழகத்தில் இருக்கிறது.

அரசே பதிப்புத்துறையின் புரவலர்!

ஒரு புறம் அறிவுத்தாகமிக்க, கல்வி கற்ற இளைஞர்களும், குடும்பங்களும் பெரும் எண்ணிக்கையில் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் விரும்பினாலும் விலை கொடுத்து நூல்களை வாங்க முடியாமல் இருக்கிறார்கள். சென்னை புத்தக சந்தையில் ஏக்கத்துடன் நூல்களை எடுத்து புரட்டிப் பார்த்துவிட்டு வைப்பவர்களின் பெருமூச்சினால் அரங்கில் வெப்பம் கடுமையாக அதிகரிப்பதை காணலாம்.

மற்றொருபுறம் ஆற்றல்மிகு எழுத்தாளர்கள் முழு நேரமாக தங்கள் ஆற்றலை அதற்கு தர முடியாமல் வருமானத்திற்காக பல தொழில்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. புத்தகங்களை அச்சிடுவதற்கு பதிலாக மின்னூலாக வெளியிடுவதன் மூலம் பிரச்சினை தீராது. ஏனெனில் ஒரு நூலின் விலையில் எழுத்தாளரின் வாழ்வாதாரமும் அடங்கியுள்ளது என்பதை நாம் மறந்துவிட முடியாது. புனைவெழுத்தாளர் மட்டுமல்ல. என்னைப் போல ஆய்வாளர்களும் கூட பேராசிரியராக பணியாற்றாமல் எழுத்தில் ஈடுபட முடியாது. இதில் என்ன முரண்பாடு என்றால், அந்த ஆசிரியப் பணியினால் எழுத போதுமான அவகாசம் கிடைக்காது. என்னால் அறிவுத்துறைகள் சார்ந்த பயனுள்ள ஒரு நூலை ஒவ்வொரு மாதமும் தமிழில் எழுத முடியும் என்றாலும் கூட, எந்த பதிப்பதிகத்தாலும் அதை விற்று எனக்கு போதுமான மாதாந்திர வருவாயை தரமுடியாது.

இந்த நிலையில் பொது நூலக இயக்கத்தை, நூலக வலைப்பின்னலை அரசு மேலும் வலுப்படுத்தாமல், கிராமப்புற நூலக திட்டத்தை விரிவாக்காமல், பதிப்பகங்களிடமிருந்து நூல்களை பெற்று அந்த நூலகங்கள் மூலம் மக்களுக்கு கிடைக்கப்பெற செய்யாமல், பதிப்புத்துறையினை பாதுகாப்பது என்பது சாத்தியமில்லை. தொலைக்காட்சி பெட்டிகள் தரும் கேளிக்கையில் மூழ்கிவிடும் குடும்பங்களையும் வாசிப்பின் பெரும்பரப்பினை எட்டச் செய்ய முடியாது. இது கலாசாரம் சார்ந்த பிரச்சினை அல்ல. உலகின் பிற சமூகங்கள் எவற்றையும் விட தமிழர்கள் நன்றாக அறிந்த உண்மை ஒன்று உண்டு. அது என்னவென்றால் கலாசாரம் என்பதன் மறுபெயர்தான் அரசியல் என்பது. எனவே மக்களாட்சியினை வலுப்படுத்த விரும்பும் அரசு அதன் உயிர்மூச்சான பதிப்புத்துறையை பாதுகாக்க முனைவது இன்றியமையாதது.

கட்டுரையாளர் குறிப்பு:

ராஜன் குறை கிருஷ்ணன் - பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: [email protected]

டிஜிட்டல் திண்ணை: விலைபோய் விடாதீர்கள்-கமல் உருக்கம்!

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  விலைபோய் விடாதீர்கள்-கமல்  உருக்கம்!

முருகன் மேல் பாசம் உண்டு: மணமேடையில் ஸ்டாலின் சிலேடை!

12 நிமிட வாசிப்பு

முருகன் மேல் பாசம் உண்டு: மணமேடையில் ஸ்டாலின் சிலேடை!

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

செவ்வாய் 4 ஜன 2022