மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 2 ஜன 2022

என்னதான் செய்ய...? - புத்தகக் காட்சி ரத்து!

என்னதான் செய்ய...? - புத்தகக் காட்சி ரத்து!

தலைநகர் சென்னையில் இன்னும் நான்கு நாள்களில் 45ஆவது புத்தகக்காட்சியை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கிவைப்பதாக இருந்தது. ஒமிக்ரான் கட்டுப்பாடுகளில் புத்தகக்காட்சிகளுக்கு 10ஆம் தேதிவரை அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டிருப்பதால், அதிர்ச்சியில் உறைந்துபோய் இருக்கிறார்கள், புத்தகப் பதிப்பாளர்கள். என்னதான் டிஜிட்டல் உலகம் என்றாலும் தாளைக் கைவைத்துப் புரட்டிப் படிக்கும் மனநிலை கொண்ட தீராத புத்தக ஆர்வலர்களும் ஆழ்ந்த வருத்தம் அடைந்துள்ளனர்.

ஜனவரி 6ஆம் தேதி தொடங்கி இந்த மாதம் 23ஆம் தேதிவரை இந்தப் புத்தகக் காட்சியை நடத்துவதற்கான ஏற்பாடுகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன என்று கூறலாம்.

மொத்தம் 800 புத்தகக் கடைகள் அமைக்க முடிவுசெய்யப்பட்டு, அதற்கான பாதைகள், இடைவெளி விடப்பட்டு, ஸ்டால் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுவிட்டது. ஒரே அரங்கு-நான்கு கடை எனும் பெரிய கடைகள் அமைக்கப்பட்டுவிட்டன. இந்த ஆண்டு 52 நான்குகடை அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

அடுத்ததாக, ஒற்றைக்கடை அரங்கு, இருகடை அரங்குகள் அமைக்கும் பணி தொடங்கியது. அதுவும் தொடர்ந்து நடைபெற்று விரைவில் முடிவடைய இருந்தது.

இவை தவிர, அரசின் பல அரங்குகளும் இந்தப் புத்தகக் காட்சியில் பெரிய அளவில் அமைக்கப்பட்டன.

இதுவரை இல்லாதபடி, தமிழ்நாட்டு அரசின் 5 அரங்குகள் இந்த ஆண்டு புத்தககக் காட்சியில் இடம்பெற முடிவுசெய்யப்பட்டது. அவற்றை அமைப்பதற்கான பணியும் தொடங்கப்பட்டு, ஏறத்தாழ நிறைவுக் கட்டத்தை நெருங்கிவிட்டது.

கீழடி தொல்லியல் அகழாய்வை கடந்த ஆண்டு பொதுமக்களுக்கு எளிதில் புரியவைத்த தொல்லியல் துறையின் அரங்குக்கு, இந்த ஆண்டு 5 ஆயிரம் சதுர அடி ஒதுக்கப்பட்டது.

கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் அவசியமான சுகாதாரத் துறையின் அரங்குக்கும் இடமளிக்கப்பட்டது.

கொரோனா தடுப்பூசிக்கென ஓர் அரங்கு, நடுவண் அரசின் ’இயல்பான தொடுதல், கெட்டநோக்கில் தொடுதல்‘ பற்றிய விழிப்பூட்டல் அரங்கு, பொது சுகாதார விழிப்பூட்டல் அரங்குகளுக்கும் விசாலமாக இடமளிக்கப்பட்டது.

பெரும்பாலான பணிகள் முடிக்கப்பட்ட நிலையில், முக்கியமாக பேரிடர் மேலாண்மைத் துறையின் ஒப்புதலுக்காக புத்தகக்காட்சி ஏற்பாட்டாளர்கள் அளித்த விண்ணப்பம் மட்டும் நிலுவையில் இருந்தது. வழக்கமான தீயணைப்பு, மின்சாரம் போன்ற அத்தியாவசிய அனுமதிகளை அடுத்து, இதுவும் கிடைத்துவிடும் என்கிற நம்பிக்கையில் தென்னிந்தியப் புத்தகப் பதிப்பாளர், விற்பனையாளர் சங்க - பபாசி பொறுப்பாளர்கள், செயற்பாட்டாளர்கள் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர்.

ஆனால், அரசின் புதிய கொரோனா கட்டுப்பாடானது, சென்னைப் புத்தகக் காட்சி பற்றிய மொத்தக் கனவையும் கலைத்துப்போட்டுவிட்டது.

கடைசி நேரத்தில் அமைச்சகத்தைத் தாண்டி மேலிடத்துக்கு அனுமதிக் கோப்பு அனுப்பப்பட்டபோது, தடங்கல் ஏற்பட்டது.

இதனால், வாசகர்கள், எழுத்தாளர்கள் ஒருபுறமும் பதிப்பாளர்கள், அச்சகத்தார், விற்பனையாளர்கள் மறுபுறமுமாக பெரும் அதிர்ச்சியில் உறைந்துபோய் உள்ளனர்.

பபாசியின் சார்பில் புத்தகக்காட்சி குறித்து திட்டவட்டமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை. உறுப்பினர்களுக்கு உள்வட்ட அளவில் பூடகமாக நிலவரத்தைத் தெரிவித்திருக்கிறார்கள்.

” நேற்று தமிழ்நாடு அரசு அறிவித்து இருக்கும் தகவல் நமது பதிப்புத்துறைக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. இருந்தும் அதை ஏற்றுதான் நடந்துகொள்ளவேண்டும். புத்தககாட்சி அனுமதி சிறிது தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அரசும் பப்பாசியும் சேர்ந்து கண்டிப்பாக நமது பதிப்புத் தொழிலின் வாழ்வாதாரம் மேம்பட இந்த மாதம் புத்தகக் காட்சி நடைபெற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.” என்று பபாசி சங்க உறுப்பினர்களிடம் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா கட்டுப்பாட்டை எல்லாரும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது என்பதை புத்தகத் தொழில்துறையினர் முழுமையாக ஏற்றுக்கொள்கின்றனர்.

சிக்கல் என்னவென்றால், சென்னைப் புத்தகக்காட்சிதான் மாநிலம் முழுவதும் உள்ள எழுத்தாளர், பதிப்பாளர், அச்சாளர், விற்பனையாளர் அடங்கிய புத்தகத் துறையினருக்கு முதன்மையான வருவாய் ஆதாரம். இதில் கிடைக்கக்கூடிய தொகையை வைத்து ஆறு மாதங்களுக்காவது சுழற்சி முதலீடாக வைத்துக்கொண்டு, கொரோனா காலத்தில் கொஞ்சம் மூச்சுவிட்டுக் கொண்டு, வண்டியை ஓட்டமுடியும் என்பது பெரும்பாலான சிறு பதிப்பாளர்களின் அழுத்தமான கருத்து.

வரக்கூடிய வருமானம், அதன் பயன் ஒருபக்கம் இருக்க, இப்போது அச்சடித்துமுடித்த புத்தகங்களுக்கு நூல்விற்பனைத் தொகைதான் எப்போதும் கைகொடுக்கும். காட்சி நடக்குமா நடக்காதா என அந்தரத்தில் விடப்பட்டுள்ளதால், அச்சாளர்களுக்கு எதைவைத்து அச்சுப்பணத்தைக் கொடுப்பது என திணறிப்போய் இருக்கிறார்கள், பதிப்பாளர்கள்.

அச்சாளர்களும் பதிப்புத்துறையைப் போலத்தான் பெரும்பாலும் சிறுதொழில் பட்டறைகளாகவே நடத்தப்படுகின்றன; இதை நம்பி ஆயிரக்கணக்கிலான அச்சக ஊழியர்களின் வாழ்வாதாரமும் கொரோனா நெருக்கடியில் கேள்வியாகியுள்ளது.

புத்தகக்காட்சியில் 800 அரங்குகள் இடம்பெறுகின்றன எனும்போது, 500 பதிப்பகங்களாவது கடை வைக்கும்; சராசரியாக 2- 5 இலட்சம் ரூபாய் சென்னைக் காட்சி வருவாய் என்று கணக்கிட்டால், அதில் பாதிப்பு என்றால், ஒட்டுமொத்தமாக 10 கோடி ரூபாய் அளவுக்கான ஒரு பெரும் தொழில் விழா முடங்கும் என்பதும் கசப்பான உண்மை. இவ்வளவு தொகை என்பதைவிட, இதன் மூலம் எத்தனை குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதே கருதப்படவேண்டும் என்கிறார்கள், புத்தகத் துறையினர்.

முந்தைய கொரோனா அலைகளில் சமூகத்தொற்றுக்குக் காரணமான குளிரூட்டப்பட்ட அரங்க நிகழ்வுகள், திறந்தவெளி அரசியல் கூட்டங்கள், அரசு விழாக்கள் இப்போது கட்டுப்பாட்டுடன் நடத்தப்படுகின்றன. இந்த நிலையில், புத்தகக் காட்சிக்கு வரக்கூடியவர்களை ஓரளவு கட்டுப்பாடுகள் மூலம் நோய்ப்பரவல் அச்சமின்றி பாதுகாப்பாகவும் நடத்திமுடிக்கலாம் என்பது அவர்களின் பொதுவான கருத்தாக இருக்கிறது.

இதைத்தாண்டி, சென்னைப் புத்தகக் காட்சிக்காகவே வெளிநாடுகளிலிருந்து, வெளி மாநிலங்களிலிருந்து வருபவர்கள், பிற மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் என பெரும் திரளான புத்தக ஆர்வலர்களுக்கு, இரண்டு ஆண்டு கொரோனா வெறுமை விலக இந்த ஆண்டு ஆற்றுப்படுத்தலுடன் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

அது நடக்குமா?

-முருகு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ...

4 நிமிட வாசிப்பு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ஆபரேஷன்

டிஜிட்டல் திண்ணை: சசிகலா- தினகரன் இடைவெளி: தூது போன குடும்பப் ...

7 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சசிகலா- தினகரன் இடைவெளி: தூது போன குடும்பப் பிரமுகர்!

ஞாயிறு 2 ஜன 2022