மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 2 ஜன 2022

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து: விரைவில் விசாரணை அறிக்கை!

குன்னூர்  ஹெலிகாப்டர் விபத்து: விரைவில் விசாரணை அறிக்கை!

கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி குன்னூர் அருகே இந்தியாவின் முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்டோர் பயணம்செய்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில், பயணம் செய்த அனைவரும் உயிரிழந்தனர்.

நாடு முழுதும் தாண்டி உலக நாடுகள் பலவற்றையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த விபத்து குறித்து இந்திய முப்படை விசாரணை நடத்தப்படுமென்று மக்களவையில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்தார். அதன்படியே முப்படைகளின் விசாரணைக்கு ஏர் மார்ஷல் மன்வேந்திர சிங் தலைமை தாங்கினார்.

இந்த விசாரணைக் குழுவினர் குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய நஞ்சப்பன் சத்திரம் கிராமத்தில் விசாரணை நடத்தினார்கள். அங்கே சேகரிக்க‌ப்பட்ட ஹெலிகாப்டரின் கருப்புப் பெட்டி மற்றும் உதிரி பாகங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

இந்நிலையில் ஏர்மார்ஷல் மன்வேந்திர சிங் குழுவின் விசாரணை முடிந்து தற்போது அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாகவும் இந்த வாரத்தில் அறிக்கையை விமானப் படை தலைமையகத்தில் மன்வேந்திர சிங் சமர்ப்பிப்பார் என்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பத்திரிகைகள் விமானப் படை வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளன.

" குன்னூரில் கடந்த மாதம் நடந்த ஹெலிகாப்டர் விபத்து தொடர்பான விசாரணை அறிக்கை அடுத்த வாரம் விமானப்படை தலைமையகத்தில் சமர்ப்பிக்கப்படும் என தெரிகிறது. முப்படைகளின் கூட்டுக் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட இந்த விசாரணை கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளது. விசாரணைக் குழு தற்போது பல பக்க அறிக்கையை இறுதி செய்து வருகிறது. இந்த விபத்தில் மனித தவறு உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் ஏர் மார்ஷல் மன்வேந்திர சிங் தலைமையிலான விசாரணைக் குழு ஆய்வு செய்தது. இதுவரை விமானப்படையிலிருந்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை. ஆனால், மனித அல்லது தொழில்நுட்ப பிழை ஏதும் இல்லை என்றும், ஹெலிகாப்டர் பறக்கத் தகுதியானதுதான் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்து நடந்த குன்னூர் பகுதியில் மோசமான வானிலை காரணமாக பார்வைத்திறன் குறைந்திருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் யூகங்கள் நிலவுகின்றன. இறுதி அறிக்கையின் மூலம் விபத்து குறித்த விவரங்கள் தெரியவரும்" என்று அந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.

தமிழகத்தில் இந்த ஹெலிகாப்டர் விபத்தை அடிப்படையாக வைத்து அரசியல் ரீதியாகவும் மோசமான விமர்சனங்கள் வெளியிடப்பட்ட நிலையில், முப்படை விசாரணைக் குழுவின் இறுதி அறிக்கை எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

-வேந்தன்

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ...

4 நிமிட வாசிப்பு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ஆபரேஷன்

டிஜிட்டல் திண்ணை: சசிகலா- தினகரன் இடைவெளி: தூது போன குடும்பப் ...

7 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சசிகலா- தினகரன் இடைவெளி: தூது போன குடும்பப் பிரமுகர்!

ஞாயிறு 2 ஜன 2022