மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 2 ஜன 2022

பொங்கல் கரும்பு: அரசுக்கு சசிகலாவின் கோரிக்கை!

பொங்கல் கரும்பு: அரசுக்கு சசிகலாவின் கோரிக்கை!

தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நாளை முதல் தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது.

கரும்பு, பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொங்கல் தொகுப்புடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு போன்ற சமையல் பொருட்களும் வழங்கப்படவுள்ளன.

பொங்கல் தொகுப்பில் இடம்பெற்றுள்ள கரும்புக்கு ரூ.71.10 கோடி தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது. இந்நிலையில் கரும்பு கொள்முதல் செய்யும் போது இடைத்தரகர்கள் தலையீடு இல்லாமல் அரசு விவசாயிகளிடம் நேரடியாகக் கொள்முதல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் சசிகலா.

அதிமுக பொதுச்செயலாளர் எனக் குறிப்பிட்டு அவர் இன்று (ஜனவரி 2) வெளியிட்டுள்ள அறிக்கையில், “கரும்பு விவசாயிகளிடமிருந்து, பொங்கல் சிறப்புத் தொகுப்பாக, செங்கரும்பு கொள்முதல் செய்வதில், இடைத்தரகர்களின் தலையீடு இல்லாமல், விவசாயிகளிடம் தமிழக அரசே நேரடியாகக் கரும்பை கொள்முதல் செய்து, சேர வேண்டிய தொகையையும் விவசாயிகளுடைய வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரியலூர், விழுப்புரம், சேலம், மதுரை, நெல்லை உள்ளிட்ட சில மாவட்டங்களில் 10,000 ஏக்கருக்கும் அதிகமாகச் செங்கரும்பு பயிரிடப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு இதன் மூலம் கணிசமான அளவில் வருவாய் பெற்று தங்களது அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்கின்றனர். அதே சமயம், விவசாயிகளிடமிருந்து இக்கரும்பைக் கொள்முதல் செய்யும் போது இடைத்தரகர்கள் தலையிட்டு, கரும்பிற்குக் கிடைக்க வேண்டிய நியாயமான விலை பெறமுடியாமல் போவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். மேலும், தமிழக அரசு ஒரு கட்டு கரும்பிற்கு ரூபாய் 400 வழங்க வலியுறுத்தியும் விவசாயிகள் சாலைகளில் நின்று போராடி வருகின்றனர்.

விவசாயிகள் ஏற்கனவே மழை, வெள்ளம் மற்றும் இடுபொருள்களின் விலை ஏற்றம், தட்டுப்பாடு போன்ற பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் தான் இந்த கரும்பைச் சாகுபடி செய்துள்ளனர். ஆகையால் கடந்த ஆண்டைவிட அதிகமான கொள்முதல் விலை கிடைத்தால்தான் தங்களால் சமாளிக்க முடியும் என்ற நிலையில் பரிதவிக்கின்றனர். எனவே, விவசாயிகள் தங்கள் விளைவித்த கரும்பை, இடைத்தரகர்கள் இல்லாமல், அரசே நேரடியாகக் கொள்முதல் செய்து, தங்களுக்குச் சேர வேண்டிய தொகையையும் அரசே நேரடியாக தங்களது வங்கிக் கணக்கில் சேர்க்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கின்றனர்.

இவற்றையெல்லாம், தமிழக அரசு கவனத்தில் கொண்டு கரும்பு விவசாயிகளின் நியாயமான கோரிக்கைக்குச் செவி சாய்க்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

-பிரியா

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

10 நிமிட வாசிப்பு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் ...

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் திட்டம்!

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

ஞாயிறு 2 ஜன 2022