மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 2 ஜன 2022

சுனாமி போல் பரவும் மூன்றாவது அலை: எச்சரிக்கும் மா.சு

சுனாமி போல் பரவும் மூன்றாவது அலை: எச்சரிக்கும் மா.சு

தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை பரவ தொடங்கியிருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மீண்டும் கொரோனா அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் நேற்று மாலை நிலவரப்படி மொத்தம் 1,489 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முந்தைய நாள் எண்ணிக்கையை விடக் கூடுதலாக 334 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

சென்னை, திருவள்ளூர் , வேலூர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கொரோனா அதிகமாக பரவி வருகிறது. இதுதவிர, 33 மாவட்டங்களில் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியிருப்பது சுகாதாரத் துறை தகவல் மூலம் தெரியவருகிறது.

சென்னையில் மட்டும் புதிதாக 682 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது மாநிலத்தில் பதிவான மொத்த எண்ணிக்கையில் 46 சதவிகிதமாகும். டிசம்பர் 31ஆம் தேதியை விட ஜனவரி 1ஆம் தேதி சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16சதவிகிதம் அதிகரித்திருக்கிறது.

இந்நிலையில் கொரோனா திரிபுகளான ஒமிக்ரான் மற்றும் டெல்டா இணைந்து மூன்றாம் அலையாக பரவத் தொடங்கியுள்ளது எனச் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டையில் மெகா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ உலகளவில் 2021 ஏப்ரல் மாதம் ஒருநாள் தொற்று 29,04,000 ஆக இருந்தது. அதுதான் உச்ச பட்சமாகவும் இருந்தது. தற்போது, டெல்டாவும், ஒமிக்ரானும் இணைந்து மூன்றாவது அலை பரவிக்கொண்டிருக்கிறது. சுனாமி போன்று மூன்றாவது அலை இருக்கும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருக்கிறது. ஒரேநாளில் உலகம் முழுவதும் 18,091,000 ஆயிரம் பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது.

நேற்று மகாராஷ்டிராவில் 22 ஆயிரத்துக்கும் அதிகமானோர் ஒரே நாளில் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் ஒரு வாரக் காலமாகப் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. நாளை மாந்தோப்பு ஆண்கள், பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட இருக்கிறது.

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் 26 லட்சம் மாணவர்கள் படிக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும். பொறியியல் கல்லூரிகளில் 4 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். அவர்களில் 46 சதவிகிதம் பேருக்கு முதல் டோஸும், 12 சதவிகிதம் பேருக்கு 2ஆவது டோஸும் போடப்பட்டுள்ளது.

2021 மே 21ஆம் தேதி தமிழகத்தில் ஒரேநாளில் 36,084 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது. 3ஆவது அலையில் அந்த அளவுக்கு மீண்டும் போகுமா? என்ற அச்சமும் உள்ளது. ஆனால் ஒமிக்ரான் தொற்று ஏற்பட்டவர்களுக்கு 3 அல்லது 4 நாட்களில் நெகட்டிவ் வந்துவிடுகிறது. இருந்தாலும் 5 நாட்கள் வரை மருத்துவமனையில் தங்க வைத்து மீண்டும் டெஸ்ட் எடுக்கப்படுகிறது. அதன்பின் நெகட்டிவ் என்று ரிசல்ட் வந்தால் அவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அனைவரும் மருத்துவமனைக்கு வர வேண்டுமா என்ற கேள்வியும் எழுகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் தொற்றால் பாதிக்கப்படுபவர்களை வீடுகளிலேயே கண்காணிக்க அந்தந்த அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதாவது பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்ஸ் ஆக்ஸிமீட்டர் அரசால் வழங்கப்பட்டு, உடலின் ஆக்சிஜன் அளவை குறிப்பிட்ட நேர இடைவெளியில் குறித்து வைக்க நோட்டுப் புத்தகமும் கொடுக்கப்படுகிறது. இதில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது ஆக்சிஜன் அளவை குறிப்பிட வேண்டும். இதனை விர்ச்சுவல் மானிட்டரிங் அடிப்படையில் மருத்துவர்கள் கண்காணிக்கின்றனர். இதில் ஆக்சிஜன் அளவு 92க்கு கீழ் இருந்தால் மட்டும் மருத்துவமனைக்கு வரச் சொல்கிறார்கள். இதேபோன்ற முறையைத் தமிழகத்திலும் பின்பற்றத் திட்டமிடப்பட்டு வருகிறது.

சென்னையில் ஈஞ்சம்பாக்கம், மஞ்சம்பாக்கம், கொடுங்கையூர் ஆகிய பகுதிகளில் 1000 படுக்கைகளுடன் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. சென்னை வர்த்தக மையத்தில் 800 படுக்கைகளுடனும், வீட்டு வாரிய குடியிருப்பில் 2 ஆயிரம் படுக்கைகளுடனும் முகாம் தயாராகி வருகிறது. அதுபோன்று கல்லூரி விடுதிகளை காலி செய்து கூடுதலான படுக்கைகளுடன் முகாம்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பூஸ்டர் டோஸ் தடுப்பூசியைப் பொறுத்தவரை ஏற்கனவே இரண்டு டோஸும் செலுத்திக்கொண்டு 9 மாதங்கள் கடந்தவர்களுக்கு ஜனவரி 10ஆம் தேதி முதல் போடப்படும். ஏற்கனவே 2 டோஸும் , கோவாக்சின் போட்டவர்களுக்கு கோவாக்சின் தான் போட வேண்டுமா? அல்லது வேறு ஊசி போடலாமா? அதேபோல் கோவிஷீல்டு போட்டவர்களுக்கு கோவிஷீல்டுதான் தான் போட வேண்டுமா? என்ற விவரங்களை மத்திய அரசு தெரிவித்ததும் அறிவிக்கப்படும் என்று கூறினார்.

-பிரியா

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக காத்திருக்கும் விஜய்

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக காத்திருக்கும் விஜய்

பொறியாளரை தாக்கிய திமுக எம்எல்ஏ: கட்சிப் பதவி பறிப்பு!

6 நிமிட வாசிப்பு

பொறியாளரை தாக்கிய திமுக எம்எல்ஏ: கட்சிப் பதவி பறிப்பு!

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன் திடீர் முடிவு! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன்  திடீர் முடிவு!

ஞாயிறு 2 ஜன 2022