மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 1 ஜன 2022

விஜயகாந்த் கொடுத்த அதிர்ச்சி!

விஜயகாந்த் கொடுத்த  அதிர்ச்சி!

தேமுதிக நிறுவனப் பொதுச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் இன்று (ஜனவரி 1) புத்தாண்டு தினத்தை ஒட்டி தனது கட்சித் தொண்டர்களை சந்தித்தார்.

கேப்டன் விஜயகாந்த் சில வருடங்களாகவே தனது வழக்கமான அரசியல் பணிகளில் இருந்து ஒதுங்கி ஓய்வெடுக்கும் நிலையிலேயே அவரது உடல் நிலை இருக்கிறது. வெளிநாடுகளுக்கு சென்று சிகிச்சை செய்து வந்த நிலையில் முழு ஓய்வில்தான் இருக்கிறார் விஜயகாந்த்.

கடந்த டிசம்பர் 6 ஆம் தேதி தேமுதிகவின் தலைமை அலுவலகத்தில் நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய விஜயகாந்தின் மனைவியும் அக்கட்சியின் பொருளாளருமான பிரேமலதா, “இந்த கூட்டத்தில் நமது தலைவர் கேப்டனின் உடல் நிலையைப் பற்றி உங்களிடம் வெளிப்படையாக தெரிவிக்கப்போகிறேன். இதற்காகத்தான் உங்கள் எல்லாரையும் கூப்பிட்டிருக்கிறேன். உங்க எல்லாருக்கும் தெரியும்.. கேப்டனுக்கு கிட்னி மாற்றம் செய்யப்பட்டுள்ளது, ஹார்ட் பை பாஸ் ஆப்ரேஷன் செய்யப்பட்டுள்ளது. மேலும் மூளைக்கு செல்லும் நரம்பு ஒன்று செயலிழந்துவிட்டது என்று டாக்டர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் தீவிரமாக மருத்துவ சிகிச்சையும் அளித்துவருகிறோம். இன்று சரியாகிவிடும், நாளை சரியாகிவிடும், இன்று வந்துவிடுவார், நாளை வந்துவிடுவார் உங்களையெல்லாம் பார்ப்பார், பேசுவார் என்று நம்பிக்கையுடன் இருந்தேன்”என்று கண் கலங்க, மாசெக்கள் சிலர் எழுந்து, “அண்ணி இனி கேப்டன் வரமாட்டாரா?” என்று குரல்கள் எழுப்பினர். கேப்டன் வரமுடியவில்லை என்றால் நீங்களே (பிரேமலதா) தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

இந்த நிலையில்தான் நேற்று மாலையே சென்னை தேமுதிக மாசெக்களுக்கு “நாளை கேப்டன் கோயம்பேடு கட்சி அலுவலகத்துக்கு வருகிறார்” என்று தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படியே நிர்வாகிகளும் தொண்டர்களூம் அலுவலகத்தில் கூடினார்கள். இன்று காலை 11.30க்கு பிரேமலதாவுடன் விஜயகாந்த் காரில் கட்சி அலுவலகத்துக்கு வந்து இறங்கினார்.

விஜயகாந்த் தனியாக அமர வைக்கப்பட்டு அவர் பின்னால் அவரது மகன் விஜய பிரபாகரன் நின்றிருந்தார். விஜயகாந்த் அமரவைக்கப்பட்ட இடத்துக்கு முன்னால் மேசைகள் போடப்பட்டு அதற்கு அந்தப் பக்கத்தில் இருந்து தொண்டர்கள் அவரை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது. தொண்டர்களை பிரேமலதா வரவேற்று ஒவ்வொருவர் கையிலும் நூறு ரூபாய் நோட்டை புத்தாண்டு அன்பளிப்பாக கொடுத்துக் கொண்டிருந்தார்.

விஜயகாந்த் கையை கூப்புவதும் அசைப்பதும் பின் கீழே இறக்குவதுமாக அமர்ந்திருந்தார். தொண்டர்கள் கேப்டன் கேப்டன் என்று உற்சாகக் குரலையும் ஆதங்கக் குரலையும் எழுப்பியபடியே அவரை பார்த்தபடி கடந்து சென்றனர். அவ்வப்போது விஜயகாந்தின் தலை பின்னோக்கி விழுவதும், முன்புறம் விழுவதுமாக இருக்க கவனமாக அவரது மகன் பிடித்து சரி செய்து கொண்டிருந்தார். இதைப் பார்த்த தேமுதிக தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்து, , ‘என்னப்பா கேப்டன் இப்படி ஆயிட்டாரே?”என்று வேதனையில் ஆழ்ந்தனர்.

ஆனால், ‘கேப்டன்’ ‘கேப்டன்’ என்ற ஒவ்வொரு குரலுக்கும் விஜயகாந்தின் கண்களில் ஆர்வமும் நம்பிக்கையும் பொங்கியது.இன்று (ஜனவரி 1) விஜயகாந்தின் நிலையை தொண்டர்கள் நேரடியாக கண்ட நிலையில் சில தினங்களில் பிரேமலதாவுக்கு புதிய பொறுப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-வேந்தன்

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

பிரதமர் பேச்சில் தடுமாற்றம் ஏன்? உண்மை இதோ...

6 நிமிட வாசிப்பு

பிரதமர் பேச்சில் தடுமாற்றம் ஏன்?   உண்மை இதோ...

சனி 1 ஜன 2022