மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 1 ஜன 2022

அமித்ஷாவுக்கு ஸ்டாலின் கடிதம்!

அமித்ஷாவுக்கு ஸ்டாலின் கடிதம்!

தமிழ்நாட்டில் அடிக்கடி வெள்ளம், பெருமழை போன்ற இயற்கை இடர்பாடுகளால் பாதிப்பு ஏற்படும் நிலையில், தக்க நேரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க, சென்னை வானிலை ஆய்வு மையத்தை மேம்படுத்தவேண்டும் என்றும் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மைய அரசை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது குறித்து மைய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு அவர் இன்று காலையில் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், “பெருமழைக் கால சூழலில் மாநில அரசு அதை எதிர்கொள்வது குறித்த ஒரு முக்கியமான விஷயத்தை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். பெருமழை, கடும் புயல் போன்ற இயற்கை இடர்பாடுகளை எதிர்கொள்ள மாநில அரசு இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையைச் சார்ந்திருக்கிறது என்பதை அறிவீர்கள். உரிய காலத்தில் இந்த மையத்திலிருந்து பெறப்படும் முன்னெச்சரிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தை தயார்நிலையில் வைத்திருக்கவும் அதன் மூலம் மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும் ஏதுவாக அமைகிறது. ஆனால், பெருமழை குறித்த அறிவிப்புகள் உரியநேரத்தில் சென்னை வானிலை ஆய்வு மையத்தால் வழங்க இயலாதநிலை உள்ளதைக் காண்கிறோம்.

உதாரணமாக, கடந்த 30ஆம் தேதி மதியம் 12 மணி நிலவர சென்னை வானிலை ஆய்வு மையத்தின் ஆய்வறிக்கையில், இடியுடன் கூடிய மிதமான மழை காலையில் தமிழ்நாட்டில் சில பகுதிகளில் குறிப்பாக விழுப்புரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் பெய்யும் என்றும் அதே சமயம், இடியுடன்கூடிய இலேசான, மிதமான மழை சென்னையில் சில இடங்களில் பெய்யும் எனவும் தெரிவித்திருந்தது.

பின்னர் மாலை 3.40 மணிக்கு தந்த எச்சரிக்கையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அடுத்த ஓரிரு மணி நேரங்களில் இடியுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனக் குறிப்பிட்டிருந்தது. ஆனால், சென்னையிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் மதியம் முதல் இரவுவரை மிகக் கடுமையான மழை பெய்தது.

மாலை 4.15 மணிக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் ’ஆரஞ்ச் அலர்ட்’ வெளியிட்டது. அதற்குள் மிக அதிக கன மழை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பெய்து பல பகுதிகள் மூழ்கி அதனால் சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

சென்னை வானிலை ஆய்வு மையத்தில் மழை குறித்து உரிய நேரத்தில் சரியாகக் கணக்கிட்டு எச்சரிக்கை அளிக்க, போதுமான திறன் குறைபாடாக உள்ளதால் மாநில, மாவட்ட நிர்வாகங்களால் தக்க நேரத்தில் உரிய முன்னேற்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள இயலாத நிலை அடிக்கடி ஏற்பட்டுவிடுகிறது. இது பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை, மருத்துவ சேவைகள் வழங்கலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அத்துடன், உயிர், உடைமை இழப்புகள் ஏற்படுவதற்கும் முக்கியமான கட்டமைப்புகள் சேதமடைவதற்கும் காரணமாக அமைந்துவிடுகிறது.

இந்த நிகழ்வுகள், சென்னை வானிலை ஆய்வுமையத்தின் வானிலை அறிக்கை தயாரிக்கும் அமைப்பை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் அதன் தொழில்நுட்பத்தைச் செம்மைப்படுத்துவதில் கூடுதல் முதலீடு செய்யவேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டுகின்றன. எனவே, பெருமழை, புயல் போன்ற ’சிவப்பு எச்சரிக்கை’ சூழல்களை விரைவாக முன்கூட்டியே தெரிவிக்கும்வகையில், சென்னை வானிலை ஆய்வு மையத்தை மேம்படுத்த தாங்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.” என்று முதலமைச்சர் ஸ்டாலின் தன் கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

முன்னதாக, நேற்று பா.ம.க. நிறுவனர் இராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், "சென்னையில் இந்த அளவுக்கு மழை பெய்யும் என்பதற்கான அறிகுறி நேற்று காலை கூட தென்பட வில்லை. வானிலை ஆய்வு மையமும் இது தொடர்பாக எந்த முன்னறிவிப்பையும் வெளியிடவில்லை. மிகப்பெரும் மழையை கணிக்கத் தவறியதில் இருந்தே தோல்வி தொடங்கி விட்டது.” என்று குறிப்பிட்டிருந்தார்.

முருகு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

பிரதமர் பேச்சில் தடுமாற்றம் ஏன்? உண்மை இதோ...

6 நிமிட வாசிப்பு

பிரதமர் பேச்சில் தடுமாற்றம் ஏன்?   உண்மை இதோ...

சனி 1 ஜன 2022