மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 1 ஜன 2022

கோயில்களில் குவியும் மக்கள்!

கோயில்களில் குவியும் மக்கள்!

புது வருட பிறப்பை முன்னிட்டு கோயில்களில் நள்ளிரவு 1 மணி முதலே மக்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

அனைத்து நாட்களிலும் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வந்தாலும், புத்தாண்டு அன்று கோயிலுக்கு செல்வது சிறப்பு என்பதால் அன்றைய தினங்களில் கோயில்களில் மக்கள் கூட்டம் அலைமோதும். ஒமிக்ரான் பரவல் காரணமாக தமிழ்நாட்டில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், நள்ளிரவில் கோயில் நடைகள் திறந்திருக்கும் என்பதால் மக்கள் சாமி தரிசனம் செய்வதற்கு தடை இல்லை என்று அரசு அறிவித்திருந்தது.

இதனால் 2022 ஜனவரி 1 பிறந்ததை கொண்டாடும் விதமாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனையும், கோயில்களில் தரிசனமும் நடைபெற்றது. தேவலாயங்களிலும், கோயில்களிலும் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர்.

பெரும்பாலான தேவாலயங்களில் புத்தாண்டு அன்று இரவு பிரார்த்தனை மட்டுமே நடக்கும். ஆனால், இந்து கோயில்களில் நள்ளிரவு முதல் அன்று இரவுவரை மக்கள் கோயிலுக்கு சென்று வருவார்கள்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் புத்தாண்டு தரிசனத்தை முன்னிட்டு வள்ளி, தெய்வானையுடன் உற்சவர் முருகப்பெருமான் மயில் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். 2 டன் வண்ண மலர்களால் கோயில் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பக்தர்கள் அனைவரும் அரோகரா முழக்கத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வந்தனர். நெல்லை மாநகரப் பகுதிகளிலுள்ள பல்வேறு கோயில்களிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் காலை முதலே அக்னி தீர்த்த கடற்கரை மற்றும் கோயில் வளாகத்தில் உள்ள 22 புண்ணிய தீர்த்தகிணறுகளில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருப்பரங்குன்றம் முருகன் கோயில், திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோயில்களில் மக்கள் சிறப்பு தரிசனம் செய்தனர்.

சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயில், வடபழனி முருகன் கோயில், தியாகராய நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தானம் உள்ளிட்ட கோயில்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து மக்கள் சாமி தரிசனம் செய்தனர்.

புத்தாண்டு அன்று எப்படியாவது திருப்பதி ஏழுமலையானை தரிசித்துவிட வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் இருக்கும். அதன்படி, இன்று திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏராளமான மக்கள் குவிந்திருந்தனர். நள்ளிரவில் கோயில் வாசலில் கற்பூர ஆர்த்தி எடுத்து, தேங்காய் உடைத்து கோவிந்தா கோவிந்தா என்ற பரவச முழக்கத்துடன் மக்கள் வழிபட்டனர்.

ஒமிக்ரான் பரவலுக்கிடையே கோயில்களில் தரிசனம் செய்ய மக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தாலும், கொரோனா தடுப்பு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று கண்டிப்புடன் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்சில இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து சாமி தரிசனம் செய்தனர். சில இடங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் காற்றில் பறக்கவிட்டனர்.

புத்தாண்டு அன்று மக்கள் சுற்றுலா தலங்களுக்கு செல்வதும் வழக்கமான ஒன்று. ஆனால், இந்தாண்டு தொற்று காரணமாக சுற்றுலா தலங்களுக்கு தடை விதிக்கப்பட்டது பெரும்பாலான மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. சுற்றுலா தலங்களில் அனுமதி இல்லாததால் கோயில்களில் அதிக கூட்டம் காணப்படுகிறது.

வழக்குப்பதிவு

புத்தாண்டை முன்னிட்டு சென்னையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்த நிலையில் சென்னையில் தடையை மீறி ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக 269 வழக்குகளும், மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக 147 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

-வினிதா

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக காத்திருக்கும் விஜய்

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக காத்திருக்கும் விஜய்

பொறியாளரை தாக்கிய திமுக எம்எல்ஏ: கட்சிப் பதவி பறிப்பு!

6 நிமிட வாசிப்பு

பொறியாளரை தாக்கிய திமுக எம்எல்ஏ: கட்சிப் பதவி பறிப்பு!

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன் திடீர் முடிவு! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன்  திடீர் முடிவு!

சனி 1 ஜன 2022