மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 1 ஜன 2022

ஹார்ப்பை விஞ்சும் கோளறிவு !?

ஹார்ப்பை விஞ்சும் கோளறிவு !?

ஸ்ரீராம் சர்மா

பேய் கதை கேளாத பால்ய பருவம் ஒன்று உலகில் இருக்க முடியாது.

பேரன்களின் அறுந்த வாலை அடக்க வழி தெரியாமல்தான் பாட்டிமார்கள் வேப்பமரத்துப் பேயை அறிமுகப்படுத்தியிருக்கக் கூடும். அடிகுலை நடுங்க ஆயாளைக் கட்டி அணைத்துக் கொண்டு அவள் உடல் சூட்டின் ஆதரவில் ஆழ்ந்து உறங்கிப் போன அந்தக் குழந்தைப் பருவம் அலாதியானதுதான்.

ஆனால், அதே பேய்க் கதையை படித்துப் பகுத்தறிவு பெற்ற இளைஞன் ஒருவனிடம் சொன்னால் பருப்பு வேகுமா ?

எங்களால் வேக வைத்து விட முடியும் என அந்த பாழாய்ப் போன வேப்பமரத்து பேயை பாகுபலி சைஸுக்கு ஊதி ஊதிப் பெரிதாக்கி உலக அப்பாவிகளை அச்சப்படுத்திக் கொண்டிருக்கிறது ஹார்ப் !

HAARP என்னும் அந்த அமைப்பு அலாஸ்காவில் இருக்கிறது. அமேரிக்க அரசால் ‘மூடி வைக்கப்பட்ட’ அமைப்பாக இருக்கும் அது சிஐஏ வுக்கு ரகசிய ஆலோசனைகளை சொல்லிக் கொண்டிருக்கிறது என்கிறார்கள்.

உண்மையில், அப்படியானதொரு மாமாயக் கிலியை காலங்காலமாக அது விதைத்து வருகின்றது என்பதாகவே உணர முடிகின்றது !

HAARP என்பதன் விரிவாக்கம் HIGH FREQUENCY ACTIVE AURORAL RESEARCH PROGRAM. அதாவது, உயரதிர் அலைகளால் மின்னூட்டம் பெற்ற அணுத்துகள்களின் பேராட்டத்துக்கான ஆராய்ச்சி திட்டமாம் அது ! இறுதிச் சொல்லைக் கவனியுங்கள்.

PROJECT என்றோ, PLAN என்றோ அவர்கள் குறிக்கவில்லை. PROGRAME என்கிறார்கள். அதற்கு பச்சையான பொருள், ‘எங்களிடம் சொல்ல உறுதியாக ஏதும் இல்லைதான். ஆனால், வரும் பலனை வரவேற்போம்’ என்பதே ! அந்த அமேரிக்க தமாஷை போகப் போக காண்போம்.

HAARP அதன் தன்முனைப்புப் பரப்புரையை நாகரீக உலகின் அறிவியலாளர்கள் பலர் ‘ரவுடி அறிவியல்’ எனவும் – ‘உலகம் தழுவிய அறிவுசார் குண்டாயிஸம்’ எனவும் தீவிரமாக எதிர்க்கிறார்கள் எனினும் வழக்கமான தனது மேலாதிக்கத் தன்மையோடு கொஞ்சம் கூட அதை சட்டை செய்யவில்லை அமேரிக்கா.

அந்த எதிர்ப்புகளை எல்லாம் தங்கள் பேய்க்கதை பரப்புரைக்குக் கிடைக்கும் விளம்பரமாகக் கொண்டு கமுக்கமாய் இருக்கிறார்கள்.

என்னதான் சொல்கிறது HAARP ?

விண்ணை நோக்கி தங்களின் பிரத்தியேகக் கதிர் வீச்சுகளை ஏவிவிட்டு ‘அட்மாஸ்பியரில்’ , குறிப்பாக ‘அயொனோஸ்பியரில்’ சில மாற்றங்களை ஏற்படுத்தி, இயற்கையை தங்கள் விருப்பத்துக்கு தோதாக இழுத்து – வளைத்து, அதனை பூமியில் தாங்கள் விரும்பும் ஓரிடத்தில் குவித்து அடித்து பேரழிவுகளை ஏற்படுத்திவிட முடியும் என்கிறது. அடேங்கப்பா !

அட்மாஸ்பியர் என்றால் என்ன ?

அது, பூமியை சுற்றியுள்ள வளிமண்டலம் ஆகும். எளிமையாக சொல்வதென்றால் காற்றும் சில வாயுக்களும் கொண்ட அடர்ந்த கலவை எனலாம்.

சூரியனிலிருந்து வெளிப்படும் புறா ஊதாக் கதிர்களை தடுத்து உயிர்களைக் காத்து நிற்கும் மகா கேடயம். தாய்மை குணத்தோடு இயற்கை போர்த்திவிட்ட அடர்ந்த போர்வை அது.

அயொனோஸ்பியர் என்றால் என்ன ?

இதைப் படித்துக் கொண்டிருக்கும் உங்கள் தலைக்கு மேல், வான வெளியில், ஏறத்தாழ 80 கிலோ மீட்டருக்கும் 1000 கிலோ மீட்டருக்கும் இடைப்பட்ட உயரத்தில், மண்ணிலிருந்து வெளிப்படும் ஒலி அலைகளை எல்லாம் மீண்டும் பூமிக்கு திரும்பி அனுப்பும் குணம் கொண்ட மகா வளிமண்டல அடுக்கு அது.

அந்த அயனோஸ்பியரில்தான் எங்களால் வித்தை காட்டிவிட முடியும் என்கிறது அந்த ஹார்ப் அமைப்பு !

அயனோஸ்பியரில் மட்டுமல்ல, அதற்கு மேலும் சில நுட்பமான விஷயங்கள் உண்டு. அதனால் ஏற்படும் தாக்கத்தினால்தான் இந்த உலகில் பேரழிவுகள் ஏற்படுகின்றன என்பது உண்மை. ஆனால், அதை மனித எத்தனத்தால் வளைத்து வழிக்கு கொண்டு விட முடியும் என்பதைத்தான் அபத்தம் என்கிறேன்.

இயன்றவரை அதனை எளிமைப்படுத்தி விளக்குகிறேன்….

பேரண்ட ஒழுக்கம் !

இயற்கை என்பது அனாதி காலமாக தனக்கென்று ஓர் ஒழுங்கை வைத்துக் கொண்டு ஓயாமல் சுழன்று கொண்டிருக்கிறது. ஒழுக்கம் விழுப்பம் தரலான் என்கிறது திருக்குறள் !

சர்வ வல்லமை பொருந்தியதான இயற்கையின் ஒழுக்கத்தோடு இணைந்து காரியம் சாதித்துக் கொள்ளலாமே தவிர, அதை நம் போக்குக்கு வளைத்து விட எந்தக் காலத்திலும் எவராலும் முடியாது. இது ஐன்ஸ்டீனே ஏற்றுக் கொண்டதொன்று.

ஆனால், HAARP அமைப்பு சொல்கிறது…

அயனோஸ்பியரில் எங்கள் பிரத்தியேக அலைகளை கொண்டு செலுத்தி சூடேற்றுவோம். அதன் மூலமாக அதில் மாற்றங்களை ஏற்படுத்துவோம். அந்தச் சூட்டை அங்கிருந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்ய வைப்போம்.

டிஸ்சார்ஜ் செய்யப்படும் அந்த பெரும் சக்தியை நாங்கள் விரும்பும் ஓர் இடத்தின் மேல் குவித்து செலுத்தி இந்த உலகில் அழிவுகளை ஏற்படுத்து விடுவோம் என்கிறது. சமீபத்தில் அடித்த கஜா புயலுக்குப் பின்னால் ஹார்ப் அமைப்பு இருக்கலாம் என்னும் அளவுக்கு அது தன் பரப்புரையை பலமாக்கி வைத்திருக்கிறது.

அது, அபத்தமானது. அறிவுலகுக்கு கொஞ்சமும் ஏற்புடையதாகாது !

இன்னும் எளிமையாக்க முயல்கிறேன்.

நம்முடைய வீட்டையோ, அல்லது அலுவலகத்தையோ ஏர் கண்டிஷன் செய்து குளுகுளு என வைத்துக் கொள்ள விரும்பினால் அது நிச்சயம் நடக்கும்.

காரணம், நான்கு புறமும் சுவர்கள் உண்டு. அது, ஏஸி மெஷினிருந்து வெளியாகும் குளிரை தக்கவைத்துக் கொடுத்து விடும் என்பதால் அதில் நியாயமிருக்கிறது.

ஆனால், எனது வீட்டுக்குப் பின்புறமிருக்கும் தோட்டத்தையே ஏஸி செய்து விடப் போகிறேன் எனப் புறப்பட்டால் அது முடியுமா ? அறிவுலகம் சிரிக்காதா ? அப்படித்தான் அண்டவெளியை செயற்கையாக சூடுபடுத்திவிட முடியும் என்பதும் !

கவனியுங்கள், குளிர்காலத்தில் வெதுவெதுப்பாக குளிக்க ஆசைப்படும் உங்கள் வீட்டில் ஒரு ‘இம்மெர்ஸன் ராடு’ இருக்கிறது.

அதை ஒரு வாளித் தண்ணீரில் வைக்கிறீர்கள். குளிர்ந்திருக்கும் அந்த வாளித்தண்ணீரில் மூழ்கி இருக்கும் அந்த இம்மர்சன் ராடு என்ன செய்கிறது ?

தன்னுள் பாய்ச்சப்படும் மின்சாரத்தால் சூடேறி, அமிழ்ந்திருக்கும் இடத்தில் உள்ள குளிர்ந்த நீரை சூடேற்றிவிட்டு பிறகு, மிச்ச சூட்டை பக்கவாட்டு மூலக்கூறுகளுக்குள் கடத்துகிறது. அதனால், மொத்த வாளி தண்ணீரும் சூடாகிறது.

குறித்துக் கொள்ளுங்கள், இம்மர்ஸன் ராடுக்கான வெற்றி அதன் பவுண்டரியில் அடங்கி இருக்கிறது. ஆம், வாளிக்கு என ஒரு எல்லை இருக்கின்றது.

ஆனால் திறந்த வெளித் தோட்டம் என்பது அண்டவெளியோடு சம்பந்தப்பட்டு விரிகிறது. எல்லையற்ற அந்த வெளியில் சூடோ, குளிரோ ஓரிடத்தில் நின்றுவிடாது.

சவ்வூடு பரவல் !

‘சவ்வூடு பரவல்’ ( OSMOSIS ) என்னும் அறிவியல் கோட்பாட்டை பள்ளிக் கல்வியில் நாம் படித்திருப்போம்.

அதன் ஆதார தத்துவம் என்ன ? மூலக்கூறுகளை அடுத்தடுத்த வீரியமற்ற மூலக் கூறுகளை நோக்கி பரவலாக்கி கடத்திவிடுவது அல்லவா ?

அதாவது, வெப்பத்தை அல்லது குளிரை செறிவு குறைந்த இடம் நோக்கி பரவலாக்கி விடுவதே சவ்வூடு பரவல்.

கடற்கரையில் வேர்கடலை வறுக்கப்படுவதைப் பார்த்திருப்பீர்கள். அந்த வாணலியில் மணலைக் கொட்டித்தான் வறுப்பார்கள் காரணம், அந்த மணலாகப்பட்டது ‘சவ்வூடு பரவல்’ தத்துவத்தின்படி அடுப்பிலிருந்து வரும் வெப்பத்தை பரவலாக்கி கடலை கருகிவிடாமல் வறுத்து விடும்.

எனில், அண்டவெளியில் அகண்டு இருக்கும் அயனோஸ்பியரில் செயற்கையாக சூடு ஒன்று ஏற்படுத்தப்படுமானால் அயனோஸ்ப்பியர் அந்த சூட்டை என்ன செய்யும் ? ‘சவ்வூடு பரவல்’ தத்துவத்தின்படி பரவலாக்கிக் கொண்டே போகும் அல்லவா ?

மனிதர்கள் அனுப்பும் செயற்கை அலைகளை அங்கேயே பிடித்து வைத்திருக்க அதற்கென்ன தலையெழுத்தா ?

அனுப்பப்படும் அலைகளை அயனோஸ்பியர் சவ்வூடு பரவலாக நிகழ்த்திக் கொண்டே இருந்தால் அது என்று முடியக் கூடும் ? சிந்திக்க வேண்டாமா ! ஏமாற்று சாமியார்கள் ஆடிக் காட்டும் பொய்யாட்டம் அல்லவா அது ?

ஆம், ஒரு செயற்கை அலைக் கற்றையை வானெங்கும் பரப்ப முடியுமே தவிர, அதை ஓரிடத்தில் ‘ஹோல்டு’ செய்து வைக்க முடியாது என்கிறேன்.

கவனியுங்கள், ரேடியோ ஒலிபரப்பப்படுகிறது என்றுதான் சொல்கிறார்கள். தொலைக்காட்சி ஒளிபரப்பு என்றுதான் சொல்கிறார்கள். செயற்கை அலைகளை விண்ணில் பரப்பலாம். ஆனால், அதை ஹோல்டு (HOLD) செய்து வைக்கவும், கட்டளைக்கு ஏற்ப திருப்பி அனுப்பவும் இயற்கை சம்மதிக்காது.

சாட்டிலைட் என்பது மனிதர்களால் செய்யப்பட்டு அனுப்பப்பட்ட ஒரு செயற்கைப் பொருள். அது வேண்டுமானால், மனிதர்களுக்குப் பணிந்து, அவர்களால் அனுப்பப்படும் செய்திகளை தக்க வைத்துக் கொள்ள இசைலாம்.

ஆனால், பேரண்டமானது பொல்லாதது !

அனாதி காலமாய் கோடிக் கணக்கான மனித ஈகோக்களை தன்னுள்ளே முழுங்கிக் கொண்டு அமைதியாய் , ஆழம் காட்டாமல் இருக்கும் சொல்லுக்கடங்காத சூரப் புதிர் அது !

அந்தப் பேரமைதியின் ஆழத்தில் எத்தனை எத்தனை ஐன்ஸ்டீன்களோ, நெப்போலியன்களோ, ராஜராஜ சோழன்களோ , கிளியோபாட்ராக்களோ, ஹிட்லர்களோ, இன்னும் எவரெல்லாம் இருக்கக் கூடுமோ யார் கண்டது ?

அமேரிக்காவை, ‘எல்லாம் வல்ல சமர்த்த நாயகன்’ என உலகம் நம்பிக் கொண்டிருந்த காலமெல்லாம் மலையேறி விட்டது

குறித்துக் கொள்ளுங்கள், நாஸா ஆரம்பித்து அறுபது ஆண்டுகள் ஆகிறது. ஆனாலும், கடந்த பதினைந்து நாட்களுக்கு முன்புதான் முதன் முறையாக சூரியனை அணுகியிருப்பதாக நாஸாவின் துனீஷிய இயற்பியளாளர் நோர் ஈ ரோஹஃபி மெய்க் கூச்செரிந்து சொல்கிறார் என்றால் உண்மையில், அவர்கள் போக வேண்டிய உண்மையான தூரம் இன்னுமின்னும் அதிகம் என்றே எனது இந்திய ஆழ் மனம் உறுதியாக நம்புகிறது.

போகட்டும்.

கட்டுரையின் ஆரம்பத்தில் சொன்னதுபோல, இயற்கையை - அதன் போக்கிலேயே சென்று சாதித்துக் கொண்டு விட முடியுமா என்று கேட்பீர்களேயானால் ஆம், சர்வ நிச்சயமாக அது முடியும் !

அதற்கான சகல சூட்சுமங்களையும் இந்த இந்திய மண் என்றைக்கோ கண்டு விட்டது. அதனை நம் முன்னோர்கள் வருங்காலத்தின் நலம் கருதி மறை பொருளாக குறித்து வைத்திருக்கின்றார்கள்.

அந்த சூட்சுமங்கள் செயல்படுத்திப் பார்க்கப்பட்டு விட்டதா எனில். ஆம் மெல்ல மெல்ல முன்னேறிய இந்தியத் தமிழ் மண்ணின் கோளறிவு ஏறத்தாழ அதனை எட்டிவிட்டது என்பேன்.

காரணம், அதன் ‘சக்ஸஸ் ரேட்’ 50 சதவிகிதத்தை தாண்டி நகர்ந்து கொண்டிருக்கிறது.

பத்துக்கு ஐந்து பழுதானாலும், ஐம்பது சதவிகித சக்ஸஸ் ரேட்டைக் கடந்து உலகுக்கு பயனளிக்கக் கூடிய முன்னோர்களின் கோளறிவைக் கண்டு வைத்திருக்கும் ஒருவரை,

தோற்றத்திலோ, செயலிலோ கொஞ்சமும் பகட்டிக் கொள்ளாமல்,

“எல்லாம் நம் முன்னோர்கள் கண்டு வைத்த சொத்து. அதில் எனக்கென்ன பெருமை வேண்டிக் கிடக்கிறது…“ எனத் தன்னந்தனியாளாக, இயற்கைக்கும் சமூகத்துக்கும் நடுவே கிடந்து போராடிக் கொண்டிருக்கும் அந்தப் பேரறிஞனை, ஏன் இந்த அரசாங்கங்கள் இன்னமும் கண்டு கொள்ளவில்லை ?

இயற்கையின் சீற்றத்திலிருந்து மனித வாழ்வை காக்கக் கூடிய அந்த குறிப்புகளை அவர் கண்ட விதம் என்ன ? அதனால் மனித குலம் எப்படியெல்லாம் மேன்மை அடைய முடியும் ?

குறிப்பாக, தமிழகத்தின் மேன்மையை உலகம் கண்டு வியக்க, இந்தியா வல்லரசாக எழுந்து நிற்க அது எவ்வாறெல்லாம் உதவும் ?

அடுத்த நான்கு மாதங்களுக்கு தமிழகத்துக்கு பெரும் எச்சரிக்கை ஒன்றை விடுத்திருக்கும் அவர் டிசம்பர் மாதத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தை கவலையோடு பார்க்கிறாரே….

பத்தில் ஐந்து பழுதாகிய கணக்கில் அது சேருமா அல்லது அவரது சக்ஸஸ் ரேட்டில் அந்தக் கொடுமையும் சேர்ந்து விடுமா என்னும் அச்சக்கவலை மேலிட என்னை அழைத்த மரியாதைக்குரிய மின்னம்பல ஆசிரியர் அது குறித்து விரிவாக எழுதிவிட சொன்னார்.

இதுகாறும், என் மனம்போன போக்கில் எழுதி அனுப்ப அதை அப்படியே பிரசுரம் செய்யும் மின்னம்பலம், முதன் முறையாக அஸைண்மெண்ட்டை ஒன்றை எனக்கு அளித்திருக்கிறது.

அந்தப் பொறுப்புணர்வோடு, மேற்கண்ட கேள்விகளையெல்லாம் பெருமூச்சோடு உள் வாங்கிக் கொண்டு, இந்த சமூகக் கட்டுரையின் அடுத்த பாகத்தில் மேலதிக விவரங்களோடு சந்திக்கிறேன் !

கட்டுரையாளர் குறிப்பு

வே.ஸ்ரீராம் சர்மா - எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டுக் கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். அதைத் திரைப்படமாக்கும் வேலையில் இருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார். திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன்.

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

10 நிமிட வாசிப்பு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் ...

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் திட்டம்!

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

சனி 1 ஜன 2022