மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 1 ஜன 2022

சென்னையில் களையிழந்த புத்தாண்டு : புதுச்சேரியில் குவிந்த மக்கள்!

சென்னையில் களையிழந்த புத்தாண்டு : புதுச்சேரியில் குவிந்த மக்கள்!

2022 புத்தாண்டு பிறந்ததையொட்டி உலக நாடுகள் வான வேடிக்கைகளுடன் உற்சாகமாக வரவேற்றுக் கொண்டாடி வருகின்றன. அதே சமயத்தில் ஒமிக்ரான் வைரஸ் பரவி வரும் நிலையில் பொதுமக்கள் கூட்டத்தைத் தவிர்த்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்துப் பாதுகாப்பாகக் கொண்டாட வேண்டும் என அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன.

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தடை விதித்தன. தமிழகத்தில் பொது இடங்களில் கொண்டாட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்றாலும், தேவாலயங்களில், கோயில்களில் சிறப்பு வழிப்பாடுகள் நடைபெற்றது.

வேளாங்கண்ணி

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பையொட்டி நேற்று இரவு முதல் இன்று காலை வரை சிறப்புப் பிரார்த்தனை நடைபெற்றது. ஆயர் எம். தேவதாஸ் அம்புரோஸ் தலைமை வகித்து, சிறப்பு வழிபாடுகளை நிறைவேற்றினார். கூட்டுத் திருப்பலி, திவ்ய நற்கருணை ஆசீர், மன்றாட்டு உள்ளிட்ட வழிபாடுகள் நடத்தப்பட்டன.

கொரோனா தொற்று நீங்கி, 2022ல் மக்கள் நலமுடனும் வளமுடனும் இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்யப்பட்டது. பேராலயம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதுபோன்று 12 மணி ஆனதும் வான வேடிக்கைகளுடன் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

கோவை

கோவையில் உள்ள தேவாலயங்களில் பொதுமக்களுக்குப் பிரார்த்தனை செய்ய அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரவர் பகுதிகளில் இருக்கும் சர்சுகளுக்கு சென்று மக்கள் இரவில் பிரார்த்தனை செய்தனர்.

சென்னை

சென்னையில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில், புத்தாண்டை முன்னிட்டு போலீசார் தீவிர பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டனர். இரவு முதல் 13 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தந்த பகுதிகளில் இருக்கும் தேவாலயங்கள், கோயில்களுக்குச் சென்றுவர மட்டும் மக்களுக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், கட்டுப்பாடுகளை மீறி வெளியே சுற்றிய இளைஞர்களின் பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்த சம்பவங்களும் நடந்தன. கட்டுப்பாடுகள் காரணமாக கடற்கரைகள் களையிழந்து காணப்பட்டன.

சென்னை சாந்தோம், பெசண்ட் நகர் வேளாங்கண்ணி தேவாலயத்தில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு புத்தாண்டை வரவேற்றனர்.

நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டையில் உள்ள மிகவும் பழமையான தேவாலயமான தூய சவேரியார் பேராலயத்தில் புத்தாண்டை முன்னிட்டு சிறப்புத் திருப்பலி நடைபெற்றது.

இதுபோன்று தமிழகம் முழுவதும் கட்டுப்பாடுகளுடன் புத்தாண்டு கொண்டாடப்பட்டது.

ஆனால் புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்குத் தடை இல்லை என்பதால் தமிழக மக்கள் நேற்று மாலை முதலே புதுச்சேரிக்குப் படையெடுக்கத் தொடங்கினர். இதனால், புத்தாண்டு கொண்டாட அனுமதிக்கப்பட்ட கடற்கரைச் சாலையில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் இரவில் அலைமோதியது.

கேக் வெட்டி, ஆடல் பாடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தி மக்கள் புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தனர். கடற்கரை முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

சட்டம் ஒழுங்கு போலீசார், போக்குவரத்து போலீசார், ஊர்க்காவல் படையினர் என சுமார் 2000 போலீசார், என்சிசி, என்எஸ்எஸ் மாணவர்களும் பாதுகாப்பு பாணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

-பிரியா

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ...

4 நிமிட வாசிப்பு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ஆபரேஷன்

டிஜிட்டல் திண்ணை: சசிகலா- தினகரன் இடைவெளி: தூது போன குடும்பப் ...

7 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சசிகலா- தினகரன் இடைவெளி: தூது போன குடும்பப் பிரமுகர்!

சனி 1 ஜன 2022