மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 6 டிச 2021

அதிமுக தேர்தல்: திடீர் திருப்பம் ஏற்படுமா?

அதிமுக தேர்தல்: திடீர் திருப்பம் ஏற்படுமா?

அதிமுக உட்கட்சித் தேர்தலில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணப்பாளர் பதவிகளுக்கு ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்ற அறிவிப்பு இன்று (டிசம்பர் 6) மாலை வெளி வரலாம் என்று எதிர்பார்ப்பு நிலவிய நிலையில்... தேர்தலை தடை செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டிருக்கிறது.

டிசம்பர் 1 ஆம் தேதி அதிமுகவின் செயற்குழுக் கூட்டத்தில் சிறப்புத் தீர்மானமாக,

“ஒருங்கிணைப்பாளர்- இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் அடிப்படை உறுப்பினர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று சட்டத் திருத்தம் செய்யப்படுகிறது. ஒரு வாக்கில் இருவரும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்” என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் டிசம்பர் 2 ஆம் தேதியே... அதிமுகவின் அமைப்புத் தேர்தல் அறிவிக்கப்பட்டு அதுவும் டிசம்பர் 7 ஆம் தேதி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கான தேர்தல் நடத்தப்படுமென்று அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையில் டிசம்பர் 3 ஆம் தேதி அதிமுகவின் தொடக்க கால உறுப்பினரும், முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினரான கே.சி.பழனிசாமி இந்தத் தேர்தல் அறிவிப்பே சட்ட விரோதமானது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.

“ஒருங்கிணைப்பாளரான ஓ. பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமியும் கட்சியால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் கிடையாது. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் எதிர்பாராத மரணத்துக்குப் பின் கட்சியில் ஏற்பட்ட அரசியல் நிலையற்ற சூழலில் இருவரும் தங்களைத் தாங்களே இந்தப் பதவிக்கு அறிவித்துக்கொண்டார்கள். அதிமுகவின் சட்ட விதிகள் 20 (2) இன்படி கட்சியை தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுச் செயலாளர்தான் நிர்வகிக்க வேண்டும். எனவே இவர்களுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. மேலும் தேர்தல் நடத்துவதற்கு 21 நாட்கள் முன்பாக அறிவிப்பு வெளியிட வேண்டும்.

ஆனால் டிசம்பர் 2 ஆம்தேதி அறிவிப்பு வெளியிட்டு டிசம்பர் 7 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்பது அதிமுகவின் சட்டத்துக்கு எதிரானது. மேலும் அதிமுகவில் பல அடிப்படை உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்குவதில் முறைகேடுகள் நடந்துள்ளன. தேர்தல் அறிவிக்கப்பட்ட தேதியை ஒட்டி வாக்காளர் பட்டியலே இன்னும் தயாரிக்கப்படவில்லை. இப்படி பல்வேறு காரணங்களால் இந்த தேர்தல் அறிவிப்பே அதிமுக கட்சியின் சட்டத்துக்கு எதிரானது. எனவே இந்த தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும்”என்று வழக்குத் தொடுத்தார்.

ஆனால் உயர் நீதிமன்ற நீதிபதி அப்துல் குத்தூஸ், “தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது. அதேநேரம் முறைகேடுகள் நடப்பது உறுதி செய்யப்பட்டால் இந்தத் தேர்தலை ரத்து செய்ய நீதிமன்றம் தயங்காது”என்று உத்தரவிட்டார். இதையடுத்துதான் டிசம்பர் 4 ஆம் தேதி ஓ.பன்னீரும், எடப்பாடியும் மனு தாக்கல் செய்தனர்.

இந்நிலையில்.... இன்று (டிசம்பர் 6) அ.தி.மு.க உறுப்பினரான ஜெயச்சந்திரன் சார்பில் சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வில், அதிமுக அமைப்புத் தேர்தல் விதிகளை மீறி நடக்கிறது. இதை தடை செய்ய வேண்டும் என்று மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த அவசர வழக்காக கருதி விசாரிக்க வேண்டும் என்று ஜெயச்சந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதை முறையான மனுவாக தாக்கல் செய்தால் இன்று பிற்பகல் விசாரிப்பதாக பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வரநாத் பண்டாரி தெரிவித்துள்ளார். அதையடுத்து ஜெயச்சந்திரன் சார்பில் மனுவாக தாக்கல் செய்யும் பணிகள் வேகமெடுத்துள்ளன. இதனால் அதிமுக அமைப்புத் தேர்தலில் திருப்பம் ஏற்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

வேந்தன்

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ...

4 நிமிட வாசிப்பு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ஆபரேஷன்

டிஜிட்டல் திண்ணை: சசிகலா- தினகரன் இடைவெளி: தூது போன குடும்பப் ...

7 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சசிகலா- தினகரன் இடைவெளி: தூது போன குடும்பப் பிரமுகர்!

திங்கள் 6 டிச 2021