மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 5 டிச 2021

ஜெ. நினைவு தினம்: எடப்பாடி கார் மீது செருப்பு வீச்சு!

ஜெ. நினைவு தினம்:  எடப்பாடி கார் மீது செருப்பு வீச்சு!

மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுகவின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா 2016 டிசம்பர் 5 ஆம் தேதி காலமானதாக அப்பல்லோ மருத்துவமனையால் அறிவிக்கப்பட்டார். அதை ஒட்டி அவரது நினைவுதினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இன்று (டிசம்பர் 5) அவரது ஐந்தாவது நினைவு தினத்தை ஒட்டி சென்னை மெரினாவில் இருக்கும் ஜெ.வின் நினைவிடத்தில் அதிமுகவினர் மூன்று பிரிவுகளாக பிரிந்து அவருக்கு மரியாதை செலுத்தினார்கள்.

இப்போது அதிகாரபூர்வ அதிமுகவாக செயல்படும் ஓ. பன்னீர், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையிலும், அதிமுகவை கைப்பற்ற அமமுக என்ற கட்சியை நடத்திவரும் டிடிவி தினகரன் தலைமையிலும், அதிமுகவின் பொதுச் செயலாளர், தானே என்று க்ளைம் செய்து வரும் சசிகலா தலைமையிலும் மூன்று பிரிவுகளாக தொண்டர்கள் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

இந்த அஞ்சலி நிகழ்வில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வாகனம் மீது செருப்பு வீசப்பட்டது. மேலும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காதுபடவே அவரை எதிர்த்து கடுமையான கோஷங்களும் எழுப்பப்பட்டன.

போலீஸார் ஏற்கனவே குறித்துக் கொடுத்த நேரத்தின்படி யாரும் அஞ்சலி செலுத்த முடியவில்லை. ஒவ்வொரு பிரிவினரும் தொண்டர்கள் புடை சூழ வந்ததால் நேரத்தை மெயின்டெயின் செய்ய முடியவில்லை.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் காலை 10.5 மணிக்கு நினைவிட வளாகத்துக்குள் நுழைந்து 10.45 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டனர். விஐபி கார் பார்க்கிங்கில் இருந்து காரில் ஏறி எடப்பாடி பழனிசாமி புறப்பட்டு வெளியே வந்துகொண்டிருந்தபோது.... அண்ணா சதுக்க காவல் நிலையம் அருகே அமமுகவினர் கூடியிருந்தனர். தினகரனுக்காக அவர்கள் காத்திருந்தார்கள். இந்நிலையில் எடப்பாடி வாழ்க என்று அவரது ஆதரவாளர்கள் கோஷமிட, டிடிவி வாழ்க என்று அமமுகவினர் கோஷமிட்டுக் கொண்டிருந்தனர்.

சென்னைக்கே உரிய ‘கெட்ட வார்த்தைகளால்’ எடப்பாடியை நோக்கி வசைபாடிய தொண்டர்கள் சிலர் கண்ணிமைக்கும் நேரத்தில் எடப்பாடியின் வாகனத்தை நோக்கி செருப்புகளை வீசினார்கள். அதில் சில எடப்பாடி வாகனத்தின் பேனட் மீது விழுந்தன. அதேபோல ஜெயக்குமாரை நோக்கியும் கடுமையான வார்த்தைகளை ஏவிய தொண்டர்கள் அவரை நோக்கியும் செருப்புகளை வீசினார்கள். இவர்கள் அமமுகவினர் என்று கருதப்படுகிறது.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து அண்ணா சதுக்கம் காவல் நிலையத்தில் அதிமுகவின் நிர்வாகி மாறன் புகார் கொடுத்துள்ளார். அதில், “டிடிவி தினகரனின் தூண்டுதலின் பேரில் எடப்பாடி பழனிசாமி மீது ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்த திட்டமிட்டனர். தினகரன் உட்பட்டோர் மீது போலீஸ் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்துக்குப் பின்னர் 11 மணிக்கு மேல் டிடிவி தினகரன் பெருவாரியான தொண்டர்களுடன் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அதன் பின் சசிகலா 12.30 மணியளவில்தான் ஜெயலலிதா நினைவிடத்துக்கு வந்து அஞ்சலி செலுத்தினார்.

ஏற்கனவே போலீஸார் அதிகாரபூர்வ அதிமுக, பதிவு செய்யப்பட்ட கட்சியான அமமுக, அதன் பின் அதிமுகவுக்கு சொந்தம் கொண்டாடும் சசிகலா என்ற வரிசையில் நேரம் அளித்திருந்தனர். தனக்குப் பிறகு சசிகலா வந்து அஞ்சலி செலுத்துவது சரியாக இருக்குமா என்று தினகரன் யோசித்தார். நேற்று இதுகுறித்து சசிகலாவிடமும் பேசினார். காவல்துறையினர் கொடுத்த நேரப்படியே செல்வோம் என்று சசிகலாவும் கூறியிருக்கிறார். அதன்படியே டிடிவி தினகரன் வந்தபோது அமமுக கொடியோடு திரண்ட தொண்டர்கள் அப்படியே இருந்து சசிகலா வந்தபோது அதிமுக கொடியை கையில் பிடித்திருந்தனர்.

பன்னீர்-எடப்பாடி, தினகரன், சசிகலா மூவரும் தங்களது ஆதரவாளர்களோடு ஜெ. சமாதியில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

-வேந்தன்

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ...

4 நிமிட வாசிப்பு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ஆபரேஷன்

டிஜிட்டல் திண்ணை: சசிகலா- தினகரன் இடைவெளி: தூது போன குடும்பப் ...

7 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சசிகலா- தினகரன் இடைவெளி: தூது போன குடும்பப் பிரமுகர்!

ஞாயிறு 5 டிச 2021