மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 5 டிச 2021

வெங்கடாசலம் தற்கொலைப் பின்னணி: அச்சத்தில் மாஜி விஐபிக்கள்!

வெங்கடாசலம் தற்கொலைப் பின்னணி: அச்சத்தில் மாஜி விஐபிக்கள்!

தமிழக முன்னாள் ஐஎஃப்எஸ் அதிகாரியும் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைவருமான வெங்கடாசலம் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பெரும் அதிர்வை உருவாகியுள்ளதாகச் சொல்கிறார்கள் அதிமுக பிரமுகர்கள்.

வெங்காடசலத்தின் தற்கொலைக்குப் பின்னணி என்ன என்றும், அவரை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்கள் யார் என்பது குறித்தும் சிபிஐ விசாரணை நடத்தவேண்டும் என்று பாஜக பிரமுகர்கள் கராத்தே தியாகராஜன், பால் கனகராஜ் ஆகியோர் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

அதேபோல முன்னாள் அதிமுக அமைச்சரான சி.வி.சண்முகம், ‘தமிழகம் திமுக ஆட்சியில் மர்ம தேசமாக இருக்கிறது. அதிகாரிகள் சுதந்திரமாகப் பணியாற்ற முடியவில்லை. வெங்கடாசலத்தின் தற்கொலைக்கு திமுகவின் அழுத்தமே காரணம். அதிமுக முன்னாள் ஆட்சியாளர்கள் மீது குற்றம் சுமத்தி ஒப்புதல் வாக்குமூலம் பெற வேண்டுமென்று தமிழக போலீஸ் மிரட்டியதால்தான் அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். எனவே இதை சிபிஐ விசாரிக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

முன்னாள் ஐஎஃப்எஸ் அதிகாரியான வெங்கடாசலம் தற்கொலை செய்துகொள்ளும் முடிவுக்குச் சென்றது ஏன், அவரது குடும்ப பின்னணி என்ன, அவரைச் சுற்றியிருந்தவர்களின் பின்னணி என்ன என்று விசாரணையில் இறங்கினோம்.

வெங்கடாசலம் தந்தையார் வரதராஜன் பிள்ளை காங்கிரஸ் பிரமுகராகவும் சேலம் மாவட்ட ஆத்தூர் ஒன்றிய சேர்மனாகவும் இருந்தவர். 1960க்கு முன்பே ஆத்தூர் அம்மம்பாளையத்தில் பெரிய பங்களா வீடு கட்டி வாழ்ந்த மிகப்பெரிய குடும்பம்.

வெங்கடாசலம் -வசந்தி தம்பதியருக்கு ஓர் ஆண் பிள்ளை, ஒரு பெண் பிள்ளை. இருவரும் டாக்டர்கள். மகள் லண்டனில் வசித்து வருகிறார். மகன் சென்னையில் தனியாகக் குடியிருந்து வருகிறார். இவர்கள் மட்டும் வேளச்சேரி புதிய தலைமைச் செயலகம் காலனி இரண்டாவது குறுக்கு தெருவில் வசித்து வருகிறார்கள்.

வெங்கடாசலத்தின் ஆசியாலும் ஆதரவாலும் தமிழகத்தில் உள்ள பல முக்கிய அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் வீடுகளிலும் அலுவலகங்களிலும் விலையுயர்ந்த மரங்களால் இருக்கைகள், படுக்கைகள், கதவு ஜன்னல் போன்றவை அலங்கரிக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள் அரசியல் வட்டாரத்தில்.

2019இல் ஓய்வுபெற்ற வெங்கடாசலத்தை, சேலம் டிஎன்சிஎஸ்சி இளங்கோவன் அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமியிடம் அழைத்துப்போய் அறிமுகம் செய்துவைத்தார். இதன் பிறகே மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக 2019 ஜுன் 26ஆம் தேதியன்று நியமிக்கப்பட்டார் வெங்கடாசலம்.

முன்னாள் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணனைவிட வெங்கடாசலமும் எடப்பாடி பழனிசாமியும்தான் நகமும் சதையுமாக இருந்தனர். அமைச்சர் வேலுமணியுடன் நம்பிக்கையாக இருந்தார் வெங்கடாசலம். இந்த நாட்களில் அதாவது 2020இல் ஒரே நாளில் 900 பேருக்கு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தால் தடையில்லா சான்று வழங்கப்பட்டிருக்கிறது. இதற்கான வசூலிக்கப்பட்ட மிகப் பெரும்தொகை அந்த முன்னாள் விவிஐபி வீட்டுக்கே சென்று சேர்ந்திருக்கிறது.

இதுமட்டுமல்ல... கொடநாடு விவாகரத்திலும் வெங்கடாசலத்தின் பெயர் விசாரணையில் அடிபட்டிருக்கிறது. கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் சிக்கியுள்ள சஜீவன், வெங்கடாசலத்துடன் நெருக்கமாக இருந்துகொண்டு பாரஸ்ட் மரங்களை வெட்டுவதற்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டு, ஒப்பந்தங்களை மீறி சட்டத்துக்கு விரோதமான மரங்களையும் வெட்டிப்போய் வியாபாரத்தைப் பெருக்கி கொள்ளையடித்துள்ளார்கள். இந்த விவரங்கள் போலீஸுக்கும் விஜிலென்ஸுக்கும் தெரிந்துவிட்டது. வேளச்சேரியில் உள்ள வெங்கடாசலம் வீட்டில் சஜீவன் ஆட்களால் கொண்டுவரப்பட்ட விலையுயர்ந்த மரங்கள்தாம் இழைக்கப்பட்டுள்ளன. இந்த வேலைகள் நடக்கும்போது வெங்கடாசலத்துக்கு டஸ்ட் அலர்ஜி ஏற்பட்டு மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்தத் தகவல்கள் எல்லாவற்றையும் சேகரித்து வைத்துக்கொண்ட விஜிலென்ஸ் போலீஸார், ஆட்சி மாறிய சூழலில் வெங்கடாசலத்திடம், ‘உங்க மேல எப்ப வேணும்னாலும் ஆக்‌ஷன் பாயலாம். அதனால நீங்களே பதவியை ராஜினாமா செய்துட்டுப் போயிடுங்க’ என்று உரிமையோடு கூறியுள்ளனர். அதற்கு வெங்கடாசலம், ‘உங்களுக்குச் சட்டம் தெரியாதா?’ என்று அவமானம்படுத்தும் விதமாகப் பேசியுள்ளார். இதன்பிறகு சுற்றுச்சூழல் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் துறை அமைச்சர் மெய்யநாதனின் துறை அதிகாரி ஒரு சில தகவல்களை வெங்கடாசலத்திடம் தெரிவித்தபோது, ‘எனது அதிகாரத்தில் தலையிடாதீங்க’ என்று எச்சரித்துள்ளார் வெங்கடாசலம். இந்த விஷயத்தை அமைச்சர் கேள்விப்பட்டுக் கோபப்பட்டுள்ளார் என்பது குறிப்பிட தக்கது.

தன்னைப் பற்றி விஜிலென்ஸ் போலீஸார் விசாரித்து வருகிறார்கள் என்ற விவரம் அறிந்த வெங்கடாசலம், அதிமுக முன்னாள் அமைச்சர்களையும் அதிகாரிகளையும் நாடியுள்ளார், அவர்கள் யாரும் ஆறுதலான பதில் சொல்லவில்லை. தன் மேல் நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் என்பதை உணர்ந்துகொண்ட வெங்கடாசலம் திமுக ஆட்சியில் இருக்கும் சில அமைச்சர்கள் மூலமாகவே அதை சரி செய்யவும் முயற்சி செய்திருக்கிறார். அப்படி அவர் அணுகியவர்களில் கைத்தறித் துறை அமைச்சர் காந்தியும் ஒருவர். உள்விவகாரங்கள் தெரியாமல் அமைச்சர் ஆர்.காந்தி போன்றவர்கள் வெங்கடாசலத்துக்காக முதல்வர் அலுவலகத்தில் உள்ளவர்களிடம் பேசியபோது, ’விஷயம் தெரியாமல் பேசாதீங்க’ என்று திருப்பி அனுப்பியிருக்கிறார்கள்.

இந்த நிலையில்தான் கடந்த செப்டம்பர் மாதம் 24ஆம் தேதி, வெங்கடாசலத்தை குறிவைத்து 11 இடங்களில் விஜிலென்ஸ் போலீஸார் அதிரடி ரெய்டு செய்தனர். இதில் ரூ.13.5 லட்சம் ரொக்கம், ரூ.2.5 கோடி ரூபாய் மதிப்பிலான சுமார் 6.5 கிலோ தங்கம், 10 கிலோ சந்தனப் பொருட்கள் மற்றும் பல்வேறு முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக சுப்ரியா சாஹுவுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.

ரெய்டைத் தொடர்ந்து வெங்கடாசலம் மீது குற்றப் பத்திரிகையை விரைந்து முடிக்க, அவரை விசாரணைக்கு அழைத்தனர். ஆனால் வெங்கடாசலம், ‘அங்கு இருக்கிறேன், இங்கு இருக்கிறேன்’ என்று அதிகாரிகளை ஏமாற்றி வந்தார். கடைசியாகத் தொடர்புகொண்டு டிசம்பர் 3ஆம் தேதி விஜிலென்ஸ் அலுவலகத்துக்கு வர வேண்டும். விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுங்கள் என்று எச்சரிக்கை தொனியில் கூறியிருக்கிறார்கள்.

பயந்துபோன வெங்கடாசலம் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து நிலைமையைச் சொன்னதாகவும், எதுவாக இருந்தாலும் சட்டரீதியாகச் சந்தியுங்கள் என்று அவர் சொல்லி அனுப்பியதாகவும் சொல்கிறார்கள். நவம்பர் 27 முதல் டிசம்பர் 1, 2 ஆகிய தேதிகள் வரையில் வாட்ஸ்அப் மூலமாகவும் குறுஞ்செய்தி மூலமாகவும் தனது நிலைமையைச் சொல்லி வந்துள்ளார் வெங்கடாசலம். சிலர் ரெஸ்பான்ஸ் பண்ணாமல் இருந்துள்ளனர். உறவுகாரர்களும், ‘நீங்கள் செய்த தவறால் குடும்பமே அவமானப்பட்டுள்ளது’ என்று வெங்கடாசலத்தை கடுமையாகத் திட்டியுள்ளார்கள். இதனால் கணவன் மனைவிக்கும் மனவருத்தம் ஏற்பட்டுள்ளது.

இந்தப் பின்னணியில்தான் டிசம்பர் 2ஆம் தேதி, மதிய உணவு கொஞ்சமாகச் சாப்பிட்டுவிட்டு விரக்தியுடன் மாடியில் உள்ள அறைக்குச் சென்றவர் தற்கொலை செய்துகொண்டார் என்கிறார்கள் போலீஸார்.

கொடநாடு கொள்ளை கொலையின் வழக்கில் சிக்கியுள்ளதாகச் சொல்லப்படும் சஜீவனுக்கும் வெங்கடாசலத்துக்கும் என்னத் தொடர்பு என்று கொடநாடு கொலை வழக்கை விசாரிக்கும் போலீஸும் மூளையைக் கசக்கிக்கொண்டிருந்தது. அதே நேரத்தில் விஜிலென்ஸ் போலீஸார் வெங்கடாசலம் சம்பந்தப்பட்ட சொத்துகள், டாக்குமென்ட்கள், பணம் வாங்கி கொடுக்கும் ஏஜென்ட்கள் என அனைத்து விவரங்களையும் சேகரித்து விட்டார்கள். இந்த நிலையில் அவர் தற்கொலை செய்துகொண்டதும், அவர் வீட்டிலிருந்த செல்போன் மற்றும் துண்டு சீட்டுகள் லேப் டாப்களை போலீஸார் பறிமுதல் செய்து ஆராய்ந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று (டிசம்பர் 4) சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையரகத்தில் சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர், “மாசுக் கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் சம்பவம் நடந்த அன்று, அதாவது டிசம்பர் 2ஆம் தேதி மதியம் 12 மணிக்கு சாப்பிட்டுவிட்டு மேல் மாடியிலுள்ள தன்னுடைய அறைக்குச் சென்றுள்ளார். 3 மணி அளவில் அவருடைய மனைவி அறைக்குச் சென்று கதவை தட்டியுள்ளார். ஆனால், எந்த பதிலும் வரவில்லை. கதவை திறக்காததால் 4 மணி அளவில் ஆட்களை வரவழைத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. உடனே அவர் மனைவி காவல் துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளார். அதன்படி சம்பவ இடத்துக்குச் சென்ற காவல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். இதுதொடர்பாக சட்டப்பிரிவு 174இன்படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வெங்கடாசலம் தற்கொலையில் இதுவரை கிடைத்த வாக்குமூலம் மற்றும் விசாரணையின்படி அவரது மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை. இது தற்கொலையாகத்தான் தெரிகிறது.

அவரது செல்போன், டேப் பறிமுதல் செய்யப்பட்டு தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் அறிக்கைக்காகக் காத்திருக்கிறோம். உடல் கூராய்வு முடிந்து அவரது உடல் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. உடல் கூராய்வின் இறுதி அறிக்கை வர வேண்டியிருக்கிறது. அதுவந்த பிறகே முழுமையான தகவல் தெரியவரும்.

விஜிலென்ஸ் சார்பாக வெங்கடாசலத்துக்கு சம்மன் அனுப்பியதாக எங்களது தரப்பில் எந்த தகவலும் இல்லை. அவர் மனைவியும் சந்தேகம் இருப்பதாகத் தெரிவிக்கவில்லை.

வழக்குகளில் விசாரணை நடப்பது வழக்கம். சம்பவம் நடந்த அன்று விஜிலென்ஸ் அதிகாரிகள் தொலைபேசி மூலமாக எப்போது விசாரணைக்கு வர வாய்ப்புள்ளது என்று அவரிடம் கேட்டிருக்கின்றனர். மிரட்டல் எதுவும் கொடுத்த மாதிரி தெரியவில்லை. மேலும் இதுதொடர்பான விசாரணை நடத்துவோம். அதாவது எத்தனை முறை சம்மன் அனுப்பப்பட்டது, ஏதாவது மிரட்டல் விடுக்கப்பட்டதா உள்ளிட்டவை குறித்து விசாரணை நடத்தப்படும். தற்சமயம்வரை அவரது மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை” என்று கூறினார்.

கடந்த ஒரு வருடத்தின் கால் டீய்ட்டல்ஸ், மூன்று மாதத்தின் வாய்ஸ் ரெக்கார்டு, குறுஞ்செய்திகள், லொக்கேஷன் போன்ற அனைத்து தகவல்களையும் போலீஸ் திரட்டி வருவதால், மாஜிகள் பலரும் அதிமுக ஆதரவு அதிகாரிகள் சிலரும் நிலைகுலைந்து போயிருப்பதாகச் சொல்கிறார்கள் அரசியல் வட்டாரத்தில்.

-வணங்காமுடி

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ...

4 நிமிட வாசிப்பு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ஆபரேஷன்

டிஜிட்டல் திண்ணை: சசிகலா- தினகரன் இடைவெளி: தூது போன குடும்பப் ...

7 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சசிகலா- தினகரன் இடைவெளி: தூது போன குடும்பப் பிரமுகர்!

ஞாயிறு 5 டிச 2021