மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 3 டிச 2021

மேலும் ஐந்து பேருக்கு கொரோனா: கர்நாடகாவில் ஊரடங்கா?

மேலும் ஐந்து பேருக்கு கொரோனா: கர்நாடகாவில் ஊரடங்கா?

கர்நாடகாவில் இரண்டு பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் உறுதி செய்யப்பட்டதையடுத்து, மாநிலத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளதாக அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவில் இருந்து பெங்களூரு வந்த இருவருக்கு ஒமிக்ரான் வைரஸ் இருப்பதை நேற்று ஒன்றிய சுகாதாரத் துறை உறுதி செய்தது. இது இந்திய மக்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது.

இதுகுறித்து கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் சுதாகர் கூறுகையில், “ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 46 வயதானவர் மருத்துவர். இவர் எந்த பயணமும் மேற்கொள்ளவில்லை. இவருடன் தொடர்பில் இருந்த 218 பேருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் ஐந்து பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது ஆறு பேரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் அனைவரும் தடுப்பூசியின் இரண்டு தவணையையும் முழுமையாக செலுத்தியவர்கள். ஐந்து பேருக்கும் ஒமிக்ரான் பாதிப்பு உள்ளதா என்பதை அறிய மரபணு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

66 வயதான மற்றொருவர் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்தவர். இவர் பெங்களூருவில் இருந்துள்ளார். தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டார். இவருடன் தொடர்பில் இருந்த 264 பேருக்கும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் யாருக்கும் தொற்று பாதிப்பு இல்லை. இருப்பினும் அனைவரும் தொடர் கண்காணிப்பில் இருக்கின்றனர்” என்று கூறினார்.

அதேசமயம், ஒமிக்ரான் வைரஸ் எல்லா இடங்களிலும் பரவியிருக்கக் கூடும் என்று பெங்களூரு மாநகர ஆணையர் கெளரவ் குப்தா எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை கூறுகையில், “ஒமிக்ரான் வைரஸ் பெரிய சவாலாக உள்ளது. இருப்பினும் அதனை சமாளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். மாறுபாடு அடைந்த ஒமிக்ரான் வைரஸ் மேலும் மாநிலத்தில் பரவுவதைத் தடுக்க விரைவில் புதிய வழிகாட்டுதல்கள் மற்றும் கட்டுப்பாடுகள் வெளியிடப்படும். இதுகுறித்து இன்று (டிசம்பர் 3) சுகாதாரத் துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படும். அதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். நாம் அதைக் கட்டுப்படுத்தும்வரை, அதிக விளைவுகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

வெளிநாட்டில் இருந்து யாராவது வந்தால், மற்றவர்களின் பாதுகாப்பிற்காக அவர்களும் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம். தென்னாப்பிரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து வருபவர்களை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும். தென்னாப்பிரிக்காவில் இருந்து வருபவர்களை சோதனை செய்து வருகிறோம். இருப்பினும் வேறு ஒரு நெறிமுறையை பின்பற்றவும் தயாராக இருக்கிறோம். கண்காணிப்பு மற்றும் சோதனையில் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்கிறோம்” என்று கூறினார்.

முன்னதாக பெங்களூருவில் இரண்டு பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு இருப்பதாக ஒன்றிய அரசு அறிவித்த உடனே, ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டாவியாவிடம் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஒமிக்ரான் வைரஸ் குறித்து ஆலோசித்தார்.

தமிழ்நாடு

தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “ஒமிக்ரான் வைரஸ் பரவுவதைத் தடுக்க பல்வேறு கட்ட முன்னேச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த

தொற்றால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிப்பதற்கு தேவையான மருத்துவ கட்டமைப்பு தமிழ்நாட்டில் மிகச் சிறப்பான முறையில் உள்ளது.

முன்பு இருந்ததைவிட மூன்று மடங்காக படுக்கை வசதிகள், ஆக்ஸிஜன் வசதிகள் மருத்துவ வசதிகள் உள்ளன. தற்போது ஒரு லட்சத்திற்கும் மேற்ப்பட்ட படுக்கை வசதிகள் உள்ளன. ஒமிக்ரான் வைரஸ் குறித்து பரிசோதனை செய்ய 3.2 லட்சம் பரிசோதனை கிட்டுகள் உள்ளன. இன்னும் ஒரு லட்சம் பரிசோதனை கிட்டுகள் கேட்கப்பட்டுள்ளது. அதேசமயம் பொதுமக்களும் நோய் தடுப்பு வழிமுறைகளைத் தவறாமல் பின்பற்ற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

-வினிதா

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

வெள்ளி 3 டிச 2021