மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 3 டிச 2021

தமிழக இளைஞர்களுக்கு 100% அரசு வேலை!

தமிழக  இளைஞர்களுக்கு 100% அரசு வேலை!

அரசு பணிக்கான தேர்வுகளில் தமிழை கட்டாய பாடமாக அறிமுகப்படுத்தி மனித வள மேலாண்மைத் துறை சார்பில் இன்று அரசாணை வெளியிடப்பட்டது.

கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி சட்டப்பேரவையில் நடைபெற்ற மனிதவள மேலாண்மைத் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, தமிழக அரசுத் துறைகளில் உள்ள பணியிடங்கள் மற்றும் மாநில பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்கள் அனைத்திலும் தமிழக இளைஞர்களை 100 சதவிகிதம் நியமனம் செய்யும் பொருட்டு தேர்வு முறைகளில் நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழிப் பாடத் தாள் தகுதித் தேர்வாக கட்டாயமாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி தமிழை கட்டாய பாடமாக அறிமுகப்படுத்தி மனித வள மேலாண்மைத் துறை சார்பில் இன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் டிஎன்பிஎஸ்சி சார்பில் நடத்தப்படும் தேர்வுகளில் தமிழ் மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர், மருத்துவப் பணியாளர், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக் குழுமம் நடத்தும் தேர்வுகளில் தமிழ்ப் பாடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தமிழ்மொழி தகுதித் தேர்வுக்கான பாடத்திட்டம் பத்தாம் வகுப்பு தரத்தில் நிர்ணயம் செய்யப்படும் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்,

கட்டாய தமிழ் மொழி தாளில் குறைந்தபட்சம் 40 சதவிகித மதிப்பெண் தேர்ச்சி கட்டாயமாக்கப்படுகிறது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படுகின்ற முதனிலை மற்றும் முதன்மை எழுத்துத் தேர்வு என இரண்டு நிலைகளில் கொண்டதாக உள்ள தொகுதி I, II மற்றும் IIA ஆகிய அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ்மொழி தகுதித் தேர்வானது முதன்மைத் தேர்வுடன், விரிந்துரைக்கும் வகையிலான (descriptive type) தேர்வாக அமைக்கப்படும்.

மேற்படி முதன்மை எழுத்துத் தேர்வானது, மொழிபெயர்த்தல், சுருக்கி வரைதல், பொருள் உணர்திறன் குறிப்பிலிருந்து விரிவாக்கம் செய்தல், கடிதம் வரைதல் மற்றும் கட்டுரை வரைதல் உள்ளிட்ட தலைப்புகள் கொண்டதாக நடத்தப்படும்.

100 மதிப்பெண்கள் கொண்டதாக அமைக்கப்படும் இந்த தகுதித்தாளில் குறைந்தபட்சம் 40 சதவிகித மதிப்பெண் தேர்ச்சி பெற்றால் மட்டுமே முதன்மை எழுத்துத் தேர்வின் இதர போட்டித் தேர்வுத் தாள் மதிப்பீடு செய்யப்படும்.

தற்போது நடைமுறையில் உள்ள பொதுத்தமிழ்/ பொது ஆங்கிலம் உள்ள தேர்வுகளில் பொது ஆங்கிலத்தாள் நீக்கப்பட்டு, பொதுத்தமிழ் தாள் மட்டுமே மதிப்பீட்டுத் தேர்வாக அமைக்கப்படும்.

அதாவது தொகுதி III, IV போன்ற ஒரே நிலை கொண்ட தேர்வுகளுக்குத் தமிழ்மொழி தாளானது தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வாக நடத்தப்படும். இத்தமிழ் மொழி தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வானது 150 மதிப்பெண்களுக்குப் பகுதி - அ என கொள் குறி வகையில் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஆணை வெளியிடப்படும் நாள் முதல் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கை செய்யப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் மேற்படி தமிழ்மொழித் தாள் கட்டாயமாக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நடைபெறும் போட்டித் தேர்வுகளில் வெளிமாநில இளைஞர்கள் பங்கேற்று தேர்ச்சி பெற்று வந்த நிலையில், அரசின் இந்த நடவடிக்கை தமிழக இளைஞர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

-பிரியா

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ...

4 நிமிட வாசிப்பு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ஆபரேஷன்

டிஜிட்டல் திண்ணை: சசிகலா- தினகரன் இடைவெளி: தூது போன குடும்பப் ...

7 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சசிகலா- தினகரன் இடைவெளி: தூது போன குடும்பப் பிரமுகர்!

வெள்ளி 3 டிச 2021